கல்விச் சீர்திருத்தம் 2026: மனப்பாடக் கல்வியில் இருந்து கற்றல் பேறுகள் சார்ந்த கல்வி நோக்கிய மாற்றம்

கல்விச் சீர்திருத்தம் 2026: மனப்பாடக் கல்வியில் இருந்து கற்றல் பேறுகள் சார்ந்த கல்வி நோக்கிய மாற்றம்

ஜெஸார் ஜவ்பர்
சிரேஷ்ட விரிவுரையாளர்
தேசிய கல்வி நிறுவகம்




சுருக்கம்
இலங்கையின் பாரம்பரியக் கல்வி முறைமையானது நீண்டகாலமாக ‘பரீட்சை மையக் கல்வி’ (Exam-Centric System) என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது. க.பொ.த (சாதாரண தர) மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சைகளில் அதிக புள்ளிகளையும் தரவரிசைகளையும் பெறுவதையே முதன்மை இலக்காகக் கொண்டு கற்பித்தல் செயன்முறைகள் அமைந்துள்ளன. இதன் விளைவாக பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்யும் (Rote Learning) முறையூம் ஒப்புவிக்கும் பாணியுமே வகுப்பறைகளில் முன்னுரிமை பெற்றுள்ளன.
தேர்ச்சி, தேர்ச்சி மட்டம், கற்றல் பேறுகள் என்ற அடிப்படைக் கட்டமைப்பை கலைத்திட்ட விருத்தியின்போது பேணப்பட்டாலும் கூட கற்றல் பேறுகள் சார்ந்த கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறைவடைந்து உள்ளடக்கங்களை மனனமிடும் அல்லது நினைவுபடுத்தும் கல்வி முறை ஒன்றே எம்மிடம் எஞ்சியுள்ளது.

இப் பலவீனங்களுக்குத் தீர்வாக, புதிய கல்விச் சீர்திருத்தம் கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி (Outcome-Based Education - OBE) முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கட்டுரையானது Outcome-Based Education - OBE இன் அடிப்படை வரைவிலக்கணம், அதன் பிரதான அம்சங்கள், கற்பித்தல் செயன்முறையில் ஏற்படும் மாற்றங்கள், ஆசிரியரின் மாறும் வகிபாகம் மற்றும் இம்மாற்றங்களின் பின்னணியிலுள்ள கோட்பாட்டு அடித்தளங்களை விரிவாக நினைவூட்டுகிறது.

அறிமுகம் மற்றும் பின்னணி
இலங்கையின் இலவசக் கல்வி முறையானது சமூக சமத்துவத்தையூம் எழுத்தறிவையும் ஏற்படுத்துவதில் தெற்காசிய பிராந்தியத்திலேயே முன்னோடியாகத் திகழ்ந்தபோதிலும், 21 ஆம் நூற்றாண்டின் பூகோளமயமாக்கப்பட்ட அறிவுப் பொருளாதாரத்திற்குப் பொருத்தமான மனிதவளத்தை உருவாக்குவதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய கல்விப் பின்னணியில், தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை, க.பொ.த (சாதாரண தர) பரீட்சை மற்றும் க.பொ.த (உயர் தர) பரீட்சை ஆகிய மூன்று பிரதான தேசியப் பரீட்சைகளே ஒரு மாணவனின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தீர்க்கமான காரணிகளாகக் காணப்படுகின்றன. இதன் விளைவாக பரிட்சையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை எழுதுவதற்கு மாத்திரம் ஆற்றல்பெற்றுள்ள பட்டதாரிகளை உருவாக்கும் கல்வித் திட்டமாக விமர்சிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, பாடசாலைக் கல்வி அமைப்பானது கற்றல் பேற்றை -விளைவுகளை- அளவிடுவதை விடுத்து, பரீட்சைகளில் புள்ளிகளைப் பெறும் வித்தையை கற்பிக்கும் ஒரு இயந்திரத்தனமான அமைப்பாக மாறியுள்ளது. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை குறித்த காலத்திற்குள் ‘முடித்தல்’ என்பதையே தங்களின் பிரதான பணியாகக் கருதுகின்றனர். இதனால் மாணவர்கள் தகவல்களைச் சேகரித்து, நினைவில் வைத்து, பரீட்சை வினாத்தாளில் ஒப்புவிக்கும் ‘நினைவாற்றல் இயந்திரங்களாக’ சுருக்கப்படுகிறார்கள். இத்தகைய மனப்பாட முறையானது மாணவர்களின் விமர்சனச் சிந்தனை Critical Thinking படைப்பாற்றல் Creativity பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன் Problem Solving Skills மற்றும் கூட்டாகப் பணியாற்றல் Collaboration ஆகிய வாழ்வியல் திறன்களைப் பெரிதும் பாதித்துள்ளது.
அது மாத்திரமின்றி உண்மையான உலக விவகாரங்களில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் திறன்கள் இன்றி சமூகமாக இணைந்து வாழ்வதற்கான மனப்பாங்கின்றி முழுவதுமாக ‘இயந்திரங்களாக’ மாறிவிட்டனர்.
இச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக, இலங்கை அரசாங்கம் 2023–2033 தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் National Education Policy Framework மற்றும் தேசிய கலைத்திட்ட முன்மொழிவு மூலம் கல்வித் துறையில் ஒரு தீவிரமான மாற்றத்தை Transformative Change முன்னெடுத்து வருகிறது. Transforming Education Transforming Sri Lanka எனும் பிரதான இலக்கை நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புக்களில், ‘உள்ளடக்கம் மற்றும் உள்ளடக்க மையக் கல்வியில்’ Input & Content-Based Education இருந்து ‘கற்றல்பேறுகள் சார்ந்த கல்விக்கு’ Outcome-Based Education - OBE மாறுவது கல்விச் சீர்திருத்தின் பிரதான கோட்பாட்டு அடிப்படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

1. கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி முறை என்றால் என்ன?
கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி (Outcome-Based Education - OBE) என்பது ஒரு கல்வி முறையின் வடிவமைப்பு, கற்பித்தல் மற்றும் மதிப்பீடு ஆகிய அனைத்துக் கூறுகளையும், கற்றல் செயன்முறையின் இறுதியில் மாணவர்கள் அடைய வேண்டிய தெளிவான, அளவிடக்கூடிய மற்றும் நடைமுறை சார்ந்த ‘கற்றல்பேறுகளை’ (Learning Outcomes) மையமாகக் கொண்டு திட்டமிடும் கல்வித் தத்துவமாகும்.

பாரம்பரிய உள்ளடக்க மையக் கல்வியில் (Content-Based Education) ‘ஆசிரியர் என்ன கற்பிக்க வேண்டும்?’ மற்றும் ‘பாடப்புத்தகத்தில் என்ன உள்ளடக்கம் உள்ளது?’ என்பவையே முதன்மை வினாக்களாக அமைகின்றன. ஆனால், OBE முறையில் ‘இக் கற்றல் அமர்வு முடிவில் மாணவன் எதனைப் புரிந்து கொள்வான், எதனைச் செய்து காட்டுவான், மற்றும் எத்தகைய நடத்தைக் கோலங்களை வெளிப்படுத்துவான்?’ என்ற கேள்வியே அடிப்படைத் தொடக்கப் புள்ளியாக அமைகிறது.

OBE இன் அடிப்படை தத்துவம் (William Spady, 1994)
கற்றல்பேறுகள் மையக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் வில்லியம் ஸ்பெடி (William Spady) கூற்றுப்படி: ‘அனைத்து மாணவர்களும் கற்றுக் கொள்ள முடியும் மற்றும் வெற்றியடைய முடியும், ஆனால் ஒரே நாளில் அல்ல ஒரே வழியிலும் அல்ல. தெளிவான கற்றல் இலக்குகள் முன்னரே வரையறுக்கப்பட்டு, அதற்கேற்ப நெகிழ்வான கற்பித்தல் சூழல் உருவாக்கப்படும்போது கற்றல் பேறுகள் அடைவது சாத்தியமாகிறது.’
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்த அமைப்பில் கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி என்பது வெறும் கோட்பாட்டு மாற்றத்தைக் கடந்து கல்வி அமைப்பின் கட்டமைப்பிலேயே செய்யப்படும் மாற்றமாக விரிந்துள்ளது. இது பாடத்திட்டத்தை ‘தலைகீழ் வடிவமைப்பு’ (Backward Design) கொள்கையின்படி மறுசீரமைக்கிறது. அதாவது பின்வரும் தலைகீழ் ஒழுங்கில் இது நடைபெறுகிறது.

1. இறுதி விளைவுகளைத் தீர்மானித்தல் (Define Desired Outcomes)
கல்வி தவணையின் முடிவில் மாணவன் பெற வேண்டிய அறிவு, திறன், மனப்பான்மை மற்றும் ஆளுமைப் பண்புகளைத் துல்லியமாக வரையறுத்தல். (தவணை அல்லது வருட முடிவாக இது இருக்கலாம்)

2. மதிப்பீட்டுச் சான்றுகளை முடிவு செய்தல் (Determine Assessment Evidence)
மாணவன் அக் கற்றல்பேற்றை அடைந்துவிட்டான் என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகளையும் (Rubrics) மதிப்பீட்டு முறைகளையும் உருவாக்குதல்.

3. கற்றல் அனுபவங்களை வடிவமைத்தல் (Plan Learning Experiences)
அம் மதிப்பீட்டுச் சான்றுகளையூம் கற்றல்பேறுகளையும் எட்டுவதற்குத் தேவையான கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் உள்ளடக்கங்களையும் திட்டமிடுதல்.

2. கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி முறையில் மிக முக்கியமான அம்சங்கள் யாவை?
புதிய கல்விச் சீர்திருத்தில் அறிமுகப்படுத்தும் கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி முறை பின்வரும் பிரதான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது:

(அ) தௌிவான மற்றும் அளவிடக்கூடிய கற்றல்பேறுகள் (Clear and Measurable Outcomes)
கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி முறையில் கற்றல் இலக்குகள் மிகவும் துல்லியமாகவும், அவதானிக்கக்கூடியதாகவும் (Observable), அளவிடக்கூடியதாகவும் (Measurable) உருவாக்கப்படுகின்றன. ப்ளுமின் வகைப்பாட்டியல் (Bloom's Taxonomy) அடிப்படையில், மனப்பாடம் செய்தல் (Remembering) போன்ற தாழ் நிலைச் சிந்தனையிலிருந்து (LOTS), பகுப்பாய்வு செய்தல் (Analyzing), மதிப்பீடு செய்தல் (Evaluating), மற்றும் உருவாக்குதல் (Creating) போன்ற உயர் நிலைச் சிந்தனைத் திறன்கள் (HOTS) வரையறுக்கப்படுகின்றன.

(ஆ) 21 ஆம் நூற்றாண்டு திறன்கள் மற்றும் STEAM கல்வி ஒருங்கிணைப்பு
புதிய சீர்திருத்தங்கள் வெறும் பாட அறிவோடு நிற்காமல்இ சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 4C திறன்களை பிரதான கற்றல்பேறுகளாகக் கொண்டுள்ளன:

• விமர்சனச் சிந்தனை (Critical Thinking): தகவல்களை பகுப்பாய்வு செய்து சுயமான முடிவகளை எடுத்தல்.

• படைப்பாற்றல் (Critical Thinking): புதிய கோணங்களில் சிந்தித்து புதுமையான தீர்வுகளை உருவாக்குதல்.

• கூட்டுப்பணி (Collaboration): குழுவாக இணைந்து பணியாற்றும் சமூகத் திறனை வளர்த்தல்.

• தொடர்பாடல் (Communication): கருத்துக்களைத் தெளிகவும் பயனுள்ள வகையிலும் வெளிப்படுத்துதல்.

(இ) பாடசாலை அடிப்படையிலான தொடர் மதிப்பீடு (School-Based/Level Assessment)
ஒரே ஒரு இறுதிப் பரீட்சையை மட்டும் நம்பியிருக்கும் ஆபத்தான முறையைக் குறைக்க, வகுப்பறை சார்ந்த தொடர் மதிப்பீட்டு முறைமை பலப்படுத்தப்படுகிறது. இதில் மாணவர்களின் செயற்றிட்டங்கள் (Projects), கள ஆய்வுகள் (Fieldwork), போர்ட்ஃபோலியோ (Portfolios), மற்றும் குழுப் பகிர்வுகள் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டு, இறுதிப் பரீட்சைப் புள்ளிகளுடன் 50 சதவீதத்தில் சேர்க்கப்படுகின்றன.

(ஈ) நெகிழ்வுத்தன்மை கொண்ட கற்றல் வழிகள் (Flexible Learning Pathways / Modular Approach)
கனிஷ்ட பிரிவு தொடக்கமே (6-9) மொடியூல்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. கட்டாய மொடியூல்களும் தெரிவு மொடியுல்களும் உள்ளன. விருப்பங்கள் மற்றும் வளங்களின் கிடைப்பனவு அடிப்படையில் தெரிவுகளை மேற்கொள்ளும் முறைமை ஒன்றுக்கு கல்வித் திட்டம் விரைவில் நகரும்.
தரம் 9 இன் பின்னர், மாணவர்கள் தொழிற்கல்வி (NVQ Qualification) மற்றும் கல்விசார் கலை/விஞ்ஞானப் பாடங்களை ஒரே நேரத்தில் இணைத்துக் கற்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இது பரீட்சையில் குறைவான புள்ளிகளைப் பெறும் மாணவர்களைக் ‘கல்வியற்றவர்களாக’ முத்திரை குத்துவதைத் தடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான சான்றிதழ் பாதையை உறுதி செய்கிறது.

3. கற்றல்பேறுகள் சார்ந்த கல்வி முறையில் கற்பித்தல் செயன்முறை எவ்வாறு மாற்றமடைகிறது?
OBE இன் வருகையானது இலங்கை வகுப்பறைகளின் பாரம்பரிய சூழலையும் கற்பித்தல் முறையியலையும் (Pedagogy) தலைகீழாக மாற்றியமைக்கிறது. கற்பித்தல் செயன்முறையில் ஏற்படும் முதன்மையான மாற்றங்கள் பின்வருமாறு:

(அ) ‘ஆசிரியர் மைய’ கற்பித்தலில் இருந்து ‘மாணவர் மைய’ செயன்முறை சார்ந்த கற்றல்
பாரம்பரிய வகுப்பறையில் ஆசிரியர், மாணவர் முன் எழுந்து நின்று 40 நிமிடங்கள் உரை நிகழ்த்துவார்; மாணவர்கள் குறிப்பெடுப்பார்கள். ஆனால் கற்றல் பேறுகள் அடிப்படையாகக் கொண்ட முறையில், வகுப்பறை நேரத்தின் பெரும்பகுதி மாணவர்களின் செயலில் கற்றலுக்காக Active Learning ஒதுக்கப்படுகிறது.

• பிரச்சினை சார்ந்த கற்றல் (Problem-Based Learning)
மாணவர்கள் நிஜ உலகப் பிரச்சினைகளை (நீர் மாசடைதல், கழிவு முகாமைத்துவம்) ஆராய்ந்து தீர்வுகளைக் கண்டறியும் வகையில் பாடங்கள் அமைக்கப்படுகின்றன.

• வினவல் சார்ந்த கற்றல் (Inquiry-Based Learning)
ஆசிரியரின் நேரடிப் பதில்களுக்குப் பதிலாக, கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்கள் தாமாகவே ஆராய்ந்து விடைகளைக் கண்டறிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

• புரட்டப்பட்ட வகுப்பறை (Flipped Classroom)
பாடக் கருத்துக்களை மாணவர்கள் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் வீட்டிலேயே வாசித்துவிட்டு, வகுப்பறையில் விவாதங்கள் மற்றும் செயல்முறைப் பயிற்சிகளில் ஈடுபடுதல். (புதிய சீர்திருத்ததில் ஆரம்ப ஏற்பாடுகளில் தொழிநுட்ப ஒருங்கிணைப்பு மிக முக்கியமானதொரு அம்சமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டிருப்பினும்இ தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் தொழிநுட்ப ஒருங்கிணைப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளன)

(ஆ) பாடப்புத்தகக் கட்டுக்கோப்பிலிருந்து விரிவடைந்த கற்றல் ஆதாரங்கள்
பாரம்பரிய முறையில் பாடநூலே ஒரே புத்தகமாகக் கருதப்பட்டது. OBE முறையில் பாடநூலுக்குப் பதிலாக மொடியூல்கள் வழங்கப்படுகின்றன. அதுவே முழுமையான கற்றல் சாதமனல்ல. பல கற்றல் ஆதாரங்களில் அதுவும் ஒன்று மட்டுமே. டிஜிட்டல் கற்றல் தளங்கள் (e-Learning portals), ஆய்வகப் பரிசோதனைகள், கள விஜயங்கள், சமூக அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் செயலமர்வுகள், பயிற்சிகள் ஆகியவை கற்பித்தல் செயன்முறையின் ஒருங்கிணைந்த பகுதிகளாக மாறுகின்றன.

(இ) வேறுபட்ட கற்பித்தல் உத்திகள் (Differentiated Instruction)
ஒவ்வொரு மாணவனின் கற்றல் பாணியும் (Visual, Auditory, Kinesthetic கற்றல் வேகமும் வேறுபட்டது என்பதை கற்றல் பேறுகள் சார்ந்த முறை வலியுறுத்துகிறது. எனவே, ஆசிரியர் ஒரே பாடக் கருத்தை வெளிப்படுத்த வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்குத் திருத்தக் கற்றல் (Remedial Teaching) வாய்ப்புகளும், திறமையான மாணவர்களுக்கு மேலதிக இலக்குகளும் வழங்கப்படுகின்றன.

4. கற்றல் பேறுகள் சார்ந்த கல்வி முறையில் ஆசிரியர் வகிபாகம் எவ்வாறு மாற்றமடைகிறது?
கல்வி அமைப்பின் மையப் புள்ளியான ஆசிரியரின் பங்கு கற்றல் பேறுகள் சார்ந்த முறையில் மிகவும் உன்னதமானதாக அதே நேரம் சவாலான பரிமாணத்தைப் பெறுகிறது.

ஆசிரியரின் புதிய வகிபாகங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

(அ) கற்றல் நெறியாளர் மற்றும் ஊக்குவிப்பாளர் (Facilitator and Mentor)
ஆசிரியர் தகவல்களை வழங்கும் ‘அறிவு விநியோகஸ்தர்’ அல்லாமல், மாணவர் தானாகவே அறிவைக் கட்டியமைக்க (Constructivism) உதவூம் நெறியாளராவார். அவர் மாணவர்களுக்கு சரியான கேள்விகளைக் கேட்டு, சிந்தனையைத் தூண்டி, கற்றல் தடைகளை அகற்றும் வழிகாட்டியாகச் செயல்படுகிறார்.

(ஆ) பாடத்திட்டம் மற்றும் அனுபவ வடிவமைப்பாளர் (Curriculum & Experience Designer)
OBE இல் ஆசிரியர் பாடநூலை அப்படியே வாசிப்பவராக இருக்கமாட்டார். கற்றல்பேறுகளுக்கு அமைய, தனது வகுப்பறை மாணவர்களின் பின்னணிக்கு பொருத்தமான வகையில் ஆக்கபூர்வமான கற்றல் அனுபவங்களை (Learning Experiences), விளையாட்டு வழிக் கற்றல் (Gamified Learning) மற்றும் செயற்றிட்டங்களை வடிவமைக்கும் ‘வடிவமைப்பாளராக’ (Instructional Designer) மாறுகிறார்.

(இ) தொடர் மதிப்பீட்டாளர் மற்றும் பின்னூட்ட வழங்குநர் (Formative Assessor & Feedback Provider)
ஆசிரியர் மாணவர்களுக்குப் புள்ளிகளையும் தரங்களையும் வழங்கித் தீர்ப்பு அளிப்பவராக மட்டும் இல்லாமல், கற்றல் செயன்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை (Constructive Feedback) வழங்குபவராகச் செயல்படுகிறார். மாணவன் எங்கு தவறிழைக்கிறான். அத்தவறை எவ்வாறு திருத்துவது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் மாறுகிறார்.

(ஈ) பிரதிபலிப்புப் பயிற்சியாளர் மற்றும் வாழ்நாள் கற்பவர் (Reflective Practitioner & Lifelong Learner)
தமது சொந்தக் கற்பித்தல் முறைகளைத் தொடர்ந்து சுயஆய்வு (Self-Reflection) செய்து, வகுப்பறைச் செயல்நிலை ஆய்வுகள் (Action Research) மூலம் கற்பித்தலை மேம்படுத்தும் தொழில்முறை வல்லுநராக ஆசிரியர் மாற வேண்டும். புதிய தொழில்நுட்பங்கள் (AI, LMS tools) மற்றும் நவீன கல்வியியல் முறைகளைத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ளும் வாழ்நாள் கற்றாளராக ஆசிரியர் திகழ்வது அவசியமாகிறது.

இலங்கையில் கற்றல் பேறுகளை மையமாகக் கொண்ட கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சவால்களும் தீர்வு வழிகளும்
கற்றல்பேறுகள் சார்ந்த கல்வியை இலங்கையின் தற்போதைய சூழலில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குப் பல சவால்கள் குறுக்கிடுகின்றன:

ஆசிரியர் பயிற்சி மற்றும் மனப்பாங்கு மாற்றம்
பல தசாப்தங்களாக மனப்பாட முறையில் கற்பித்து பழகிய பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை குறுகிய காலத்தில் கற்றல் பேறுகள் சார்ந்த அணுகுமுறைக்கு மாற்றுவது பெரும் சவாலாகும். இதற்காக ஆசிரியர்களுக்கு தொடர்புடைய அதிகாரிகளுக்கு தொடர்ச்சியான தொழில்முறை அபிவிருத்திப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
வளப் பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகள்

நகர்ப்புற தேசிய பாடசாலைகளுக்கும் கிராமப்புற பாடசாலைகளுக்கும் இடையே ஆய்வுகூடங்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் கணினி வசதிகளில் காணப்படும் இடைவெளிகள் கற்றல் பேறுகள் சார்ந்த கல்வியின் நடைமுறைக்குத் தடையாகும். சமமான வளப்பகிர்வு உறுதி செய்யப்பட வேண்டும்.

பெற்றோர் மற்றும் சமூக மனப்பாங்கு
பெற்றோர் இன்னும் Z-score, A சித்திகள் மற்றும் பரீட்சைப் புள்ளிகளையே பிள்ளைகளின் ஒரே வெற்றியாகக் கருதுகின்றனர். சமூக மட்டத்தில் கற்றல் பேறுகள் வழி கல்வியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அவசியமாகும்.

முடிவுரை
இலங்கைக் கல்வி வரலாற்றில் மனப்பாடக் கல்வியில் இருந்து கற்றல்பேறுகள் சார்ந்த கல்விக்கு மாறுவது என்பது காலத்தின் கட்டாய தேவையாகும். மாணவர்களை வெறும் ‘தகவல் சேமிப்புப் பெட்டிகளாகவோ’ அல்லது ‘பரீட்சை இயந்திரங்களாகவோ’ மாற்றாமல், சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய, சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய, தொழில்சார் தகுதியும் நற்பண்புகளும் நிறைந்த 21 ஆம் நூற்றாண்டின் பூகோளப் பிரஜைகளாக உருவாக்குவதே இச் சீர்திருத்தங்களின் இறுதி இலக்காகும்.

இலங்கையின் தேசியக் கல்விக் கொள்கைச் சட்டகம் 2023-2033 மற்றும் புதிய கலைத்திட்டச் சீர்திருத்தச் சட்டகம் ஆகியன இம்மாற்றத்திற்குத் தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன. கொள்கை வகுப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் அனைவரும் இப்புதிய மாற்றத்தை நேர் மனப்பாங்குடன் ஏற்றுச் செயல்படும்போதே, உண்மையான மாற்றம் இடம்பெறும்.

மேலதிக வாசிப்புக்கு

1. Ministry of Education, Sri Lanka. (2023). National Education Policy Framework (NEPF) 2023–2033: Transforming General Education in Sri Lanka. Battaramulla: Ministry of Education.
2. Spady, W. G. (1994). Outcome-Based Education: Critical Issues and Answers. American Association of School Administrators, Arlington, VA.
3. Bloom, B. S. (1956). Taxonomy of Educational Objectives: The Classification of Educational Goals. New York: David McKay Co Inc.
4. UNESCO. (2021). Reimagining Our Futures Together: A New Social Contract for Education. International Commission on the Futures of Education, Paris: UNESCO.
5. Little, A. W. (2011). Education Policy Reform in Sri Lanka: The Political Economy of Policy Implementation. International Journal of Educational Development, 31(1), 85–102.
6. Wijetunge, L. (2024). Competency-Based to Outcome-Based Curriculum in Secondary Schools of Sri Lanka: Opportunities and Pedagogical Challenges. Sri Lanka Journal of Educational Research, 18(1), 45–68.

Post a Comment

Previous Post Next Post