இந்த ஆண்டில் சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் நியமனம்: வரலாற்றில் அதிகளவிலான ஆட்சேர்ப்பு என பிரதமர் ஹரினி அமரசூரிய அறிவிப்பு
நாட்டின் வரலாற்றில் அரசாங்கமொன்றினால் மேற்கொள்ளப்படும் அதிகளவிலான ஆசிரியர் ஆட்சேர்ப்புத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மாத்திரம் சுமார் 30,000 புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பிரதமர், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த நியமனத் திட்டத்தின் கீழ் பின்வருமாறு ஆசிரியர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்:
23,000 பட்டதாரி ஆசிரியர்கள்
6,100 தேசிய கல்வியியற் கல்லூரிகளில் (வித்யாபீடம்) பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்
கல்விமானி (B.Ed) பட்டதாரிகள்
வடமத்திய மாகாண கல்வி அதிகாரிகளுடன் அனுராதபுரத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், கல்வித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்காக, எதிர்காலத்தில் கல்வி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களை படிப்படியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பது மாத்திரம் போதுமானதல்ல. ஆசிரியர்களின் பரவலாக்கம், கல்வி நிர்வாகம் மற்றும் தரவு மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் முக்கியமானது." என பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கல்விக்காக அரசாங்கம் பெருமளவிலான முதலீடுகளைச் செய்து வருவதாகவும், பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
.jpg)