2026 க.பொ.த (சா/த) பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை (NIC) கட்டாயம்: பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் அனைத்துப் பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கமைய, 2026 டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்கு தோற்றவிருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் தாமதமின்றி தங்களது தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
இப்பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே தயாரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இது குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வழிகாட்டுமாறும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்களின் பொறுப்பு
பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னதாகவே தங்களது தேசிய அடையாள அட்டையைத் தயார் செய்து கொள்வது அனைத்துப் பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் போது ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக உடனடியாகத் தங்களது அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
.png)