மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் நபர்களைப் புரிந்துகொள்வோம்- மனிதநேயமே உயர்ந்த மருந்து.
Understanding People Living with Mental Health Challenges – Compassion Is
the Best Medicine
S.Logarajah, Lecturer,
Batticaloa National College of Education
அறிமுகம்
உடலில்
ஏற்படும் காயம் கண்களுக்குப் புலப்படும்;
ஆனால் மனதில் ஏற்படும் காயம் பெரும்பாலும் அமைதிக்குள் மறைந்து கிடக்கும்.
அந்த அமைதியின் பின்னால் அச்சம்,
தனிமை, மனவேதனை, ஏமாற்றம், நம்பிக்கையின்மை
மற்றும் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்ற ஏக்கம் மறைந்திருக்கலாம். மனநலச்
சவால்களை எதிர்கொள்ளும் பலர் நம்முடன் சேர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் நமது
குடும்ப உறுப்பினர்கள்,
நண்பர்கள், அயலவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சகபணியாளர்களாகக்கூட
இருக்கலாம். ஆனால் அவர்களுடைய நடத்தையில் காணப்படும் சில மாற்றங்களை மட்டுமே
வைத்து, அவர்களைப்
பற்றிய தவறான முடிவுகளுக்கு சமூகம் பல நேரங்களில் விரைவாக வந்துவிடுகிறது.
உண்மையில், மனநலச்
சவால்கள் என்பது ஒருவரின் பலவீனத்தையோ குணக்கேட்டையோ பிரதிபலிப்பதல்ல. அவை
உடல்நோய்களைப் போலவே கவனமும் சிகிச்சையும் ஆதரவும் தேவைப்படும் சுகாதார
நிலைகளாகும். சரியான நேரத்தில் புரிதல்,
அன்பு, குடும்ப
ஆதரவு, தொழில்முறை
ஆலோசனை மற்றும் சமூக ஒத்துழைப்பு கிடைக்கும்போது, மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் பெரும்பாலானோர் தங்களது
கல்வி, தொழில், குடும்ப
வாழ்க்கை மற்றும் சமூகப் பங்களிப்புகளில் சிறப்பாக முன்னேற முடியும்.
இந்த உண்மையை
உணர்ந்து, மனநலச்
சவால்களை எதிர்கொள்ளும் நபர்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகளை நீக்கி, அவர்களுடைய
நடத்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உளவியல் காரணிகளைப் புரிந்துகொண்டு, மனிதநேயமும்
பொறுப்புணர்வும் கொண்ட சமூகத்தை உருவாக்குவதன் அவசியத்தை இக்கட்டுரை வலியுறுத்துகிறது.
"ஒருவரின்
மனநலம் பாதிக்கப்படலாம்;
ஆனால் அவரது மனித மதிப்பு ஒருபோதும் குறைவதில்லை." இந்த உண்மையை
உணர்ந்த சமூகமே உண்மையான நாகரிக சமூகமாகும். இன்று உலகம் முழுவதும் மனநலம்
தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வருகின்ற போதிலும், மனநலச்
சவால்களை எதிர்கொள்ளும் பலர் இன்னும் தவறான புரிதல்கள், ஒதுக்கல்
மற்றும் சமூக முத்திரைகளுக்கு உள்ளாகின்றனர். இது அவர்களின் துன்பத்தை மேலும்
அதிகரிக்கிறது. மனநலம் என்பது சிலருக்கே உரிய பிரச்சினை அல்ல; வாழ்க்கையின்
எந்தக் கட்டத்திலும், எந்த
வயதினருக்கும் மனநலச் சவால்கள் ஏற்படலாம்.
மனநலச் சவால் என்றால் என்ன?
மனநலம் என்பது ஒருவர் எவ்வாறு சிந்திக்கிறார், உணர்கிறார்,
முடிவெடுக்கிறார், பிறருடன் உறவாடுகிறார்
மற்றும் அன்றாட வாழ்க்கைச் சவால்களை எவ்வாறு கையாளுகிறார் என்பதுடன் தொடர்புடையது.
மனஅழுத்தம், துயரமான அனுபவங்கள், பொருளாதார
நெருக்கடி, குடும்பப் பிரச்சினைகள், நீண்டகால
நோய்கள், தனிமை, வேலைப்பளு, இயற்கை அனர்த்தங்கள் போன்ற பல காரணிகள் மனநலத்தைப் பாதிக்கக்கூடும்.
மனநலச் சவால்கள் என்பது பல்வேறு அளவுகளில் வெளிப்படும்
நிலைகளாகும். சிலருக்கு அவை தற்காலிகமாக இருக்கலாம்; சிலருக்கு மருத்துவ சிகிச்சையும் உளவியல் ஆதரவும்
தேவைப்படலாம். முக்கியமாக,
மனநலச் சவால்களை எதிர்கொள்வது ஒரு மனிதரின் பலவீனம் அல்ல; அது உடல்நலப்
பிரச்சினையைப் போலவே கவனிக்கப்பட வேண்டிய ஒரு சுகாதார நிலையாகும்.
மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் சிலரிடமும் கடுமையான
உளவியல் அழுத்தத்தில் இருக்கும் சிலரிடமும் காணப்படக்கூடிய நடத்தை மாற்றங்கள்
மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் அனைவரும் ஒரே மாதிரியான
நடத்தைகளை வெளிப்படுத்துவதில்லை. ஒருவரின் வயது, ஆளுமை, வாழ்க்கை அனுபவங்கள், குடும்பச் சூழல் மற்றும்
அவருக்குள்ள மனநல நிலை ஆகியவற்றைப் பொறுத்து நடத்தைகளில் வேறுபாடு காணப்படும்.
இருப்பினும், சிலரிடம் பின்வரும் மாற்றங்கள் காணப்படலாம்.
1.
உள்ளார்ந்த பயத்தை மறைக்க வெளிப்படையான கோபத்தைக்
காட்டுதல் : சிலர் தங்களுக்குள் இருக்கும் பயம்,
பாதுகாப்பின்மை அல்லது தன்னம்பிக்கைக் குறைபாட்டை வெளிக்காட்டாமல்,
உரத்த குரலில் பேசுதல், அடிக்கடி சத்தமிடுதல்
அல்லது பிறரை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்ளுதல் போன்ற நடத்தைகளை
வெளிப்படுத்தலாம். இது எப்போதும் வலிமையின் அடையாளமல்ல; சில
நேரங்களில் உள்ளார்ந்த அச்சத்தை மறைக்கும் ஒரு பாதுகாப்பு முறையாக இருக்கலாம்.
2.
அடிக்கடி பிறரைக் குறைகூறுதல் : தங்களுடைய
தோல்வி, ஏமாற்றம் அல்லது மனவேதனைக்கான காரணத்தை தமக்குள்
தேடாமல், தொடர்ந்து பிறர்மீது பழியைச் சுமத்தும் பழக்கம்
சிலரிடம் காணப்படலாம். தமது சிரமங்களுக்கு சக ஊழியர்கள், குடும்பத்தினர்
அல்லது சமூகம் காரணம் என்று தொடர்ந்து கூறக்கூடும்.
3.
உலகை கறுப்பு–வெள்ளை பார்வையில் காணுதல் : சிலர்
மனிதர்களை "முழுமையாக நல்லவர்" அல்லது "முழுமையாக கெட்டவர்"
என்று மட்டுமே மதிப்பிடலாம். தங்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டால் நல்லவர்; ஏற்கவில்லை என்றால் கெட்டவர் என்று உடனடியாக முடிவு செய்யும் போக்கும்
சிலரிடம் காணப்படலாம். வாழ்க்கையின் இடைநிலை உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் சிரமம்
இருக்கக்கூடும்.
4.
தன்னை எப்போதும் நியாயப்படுத்த முயற்சித்தல்: தான்
செய்த தவறுகளைக் கூட ஏற்றுக்கொள்வதில் சிரமப்படுதல், தன்னுடைய
செயல்களுக்கு எப்போதும் காரணங்களை முன்வைத்தல், "நான்
தவறு செய்யவில்லை" என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து வலியுறுத்துதல் போன்ற
நடத்தைகள் சிலரிடம் காணப்படலாம்.
5.
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமை: சிறிய
கருத்துக்கூட தன்னைத் தாக்குவதாக உணர்ந்து கடுமையாகப் பதிலளிக்கலாம். ஆக்கபூர்வமான
விமர்சனத்தைக்கூட அவமதிப்பாக எடுத்துக் கொள்வதால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம்.
6.
சந்தேக மனப்பான்மை அதிகரித்தல் : பிறர்
தன்னைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள், தனக்கெதிராகச்
செயல்படுகிறார்கள் அல்லது தன்னை ஏமாற்ற முயலுகிறார்கள் என்ற எண்ணம் சிலரிடம்
அதிகமாக இருக்கலாம். ஆனால், இது மட்டும் மனநலக் கோளாற்றின்
அடையாளம் என்று கருதக் கூடாது.
7.
உணர்ச்சி மாற்றங்கள்: சிறிய
நிகழ்வுகளுக்குக் கூட அதிகமாக அழுதல், கோபப்படுதல், எரிச்சலடைவது அல்லது திடீரென அமைதியாகிவிடுதல் போன்ற உணர்ச்சி ஏற்ற
இறக்கங்கள் காணப்படலாம்.
8.
சமூக உறவுகளிலிருந்து விலகுதல் : முன்பு
விரும்பி கலந்து கொண்ட குடும்ப நிகழ்ச்சிகள், நண்பர்கள்
சந்திப்பு அல்லது பணித்தள உறவுகளிலிருந்து விலகி, தனிமையை
நாடலாம்.
9.
முடிவெடுப்பதில் சிரமம் : எளிய
முடிவுகளைக்கூட எடுக்க முடியாமல் குழப்பமடையலாம் அல்லது தொடர்ந்து பிறரின்
உறுதிப்படுத்தலை நாடலாம்.
10.
கவனக்குறைவு மற்றும் மறதி : ஒரு
வேலையில் கவனம் செலுத்த முடியாமை, பேசிக்கொண்டிருக்கும்
விடயத்தை மறந்துவிடுதல், அன்றாடப் பொறுப்புகளை
நிறைவேற்றுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம்.
11.
எதிர்மறை சிந்தனை : தன்னைப் பற்றியும்,
பிறரைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும்
தொடர்ந்து எதிர்மறையாகச் சிந்திக்கலாம். "என்னால் முடியாது", “என்னை யாரும் மதிப்பதில்லை” "யாரும் என்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்" போன்ற எண்ணங்கள் அதிகமாக
இருக்கலாம்.
12.
உடல் அறிகுறிகளாக வெளிப்படுதல்: சிலருக்கு
மனஅழுத்தம், தலைவலி, உடல்வலி, சோர்வு, தூக்கமின்மை, அதிக
தூக்கம், பசியின்மை அல்லது அதிகமாக உண்பது போன்ற உடல்
மாற்றங்களாகவும் வெளிப்படலாம்.
13.
தொடர்பாடலில் சீரின்மை : சிலரிடம்
தொடர்பாடலில் மாற்றங்கள் காணப்படலாம். அவர்கள் பேசும் கருத்துகள் ஒன்றுடன் ஒன்று
தொடர்பில்லாததாகத் தோன்றலாம். ஒரு விடயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது,
திடீரென வேறு தலைப்புக்குச் செல்வதும், கேட்ட
கேள்விக்குப் பொருத்தமில்லாத பதிலை வழங்குவதும், ஒரே கருத்தை
மீண்டும் மீண்டும் கூறுவதும் அல்லது தங்களது எண்ணங்களைத் தெளிவாக
வெளிப்படுத்துவதில் சிரமப்படுவதும் சில நேரங்களில் காணப்படலாம்.
இத்தகைய தொடர்பாடல் சீரின்மை, பிறருடன் புரிந்துணர்வுடன்
உரையாடுவதிலும், குடும்பம், பணியிடம்
மற்றும் சமூக உறவுகளைப் பேணுவதிலும் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.
14. தன்னை மிகைப்படுத்திக் காட்டும் மனப்போக்கு
சிலர், "என்னைப் போல உண்மையானவரும் நேர்மையானவரும் யாரும்
இல்லை" என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிப்பார்கள். தாங்கள் செய்வது
எல்லாமே சரி என்றும், பிறர் செய்வது பெரும்பாலும் தவறு
என்றும் நினைக்கலாம். பிறர் கூறும் நல்ல ஆலோசனைகளையோ விமர்சனங்களையோ
ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள்.
ஆனால், நடைமுறையில்
தங்களுக்குச் சாதகமான விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து, பிறரிடம் எதிர்பார்க்கும் நேர்மை, ஒழுக்கம் மற்றும்
நியாயத்தைத் தாங்களே எப்போதும் கடைப்பிடிக்காமல் இருப்பார்கள். தங்களுடைய தவறுகளை
ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, அதற்கான காரணத்தை
மற்றவர்கள்மீது சுமத்தவும் முயற்சிக்கலாம். இதனால் குடும்பத்திலும், நண்பர்களிடமும், பணியிடத்திலும் தேவையற்ற கருத்து
வேறுபாடுகளும் உறவுச் சிக்கல்களும் ஏற்படலாம்.
குறிப்பு: இத்தகைய நடத்தை காணப்படுவதால் மட்டுமே ஒருவருக்கு மனநலப்
பிரச்சினை உள்ளது என்று கருதக் கூடாது. இவை பல்வேறு ஆளுமைப் பண்புகள்,
வாழ்க்கை அனுபவங்கள் அல்லது பிற காரணங்களாலும்
தோன்றக்கூடும்.
15.
மனிதர்களைப் பற்றிய கருத்துகளை விரைவாக மாற்றும்
போக்கு:
சிலர், ஒரு
நபர் தங்களுடைய கருத்துகளையோ விருப்பங்களையோ ஏற்றுக்கொள்ளும் வரை அவரை மிகவும்
நல்லவர், நேர்மையானவர், நம்பகமானவர்
என்று பாராட்டலாம். ஆனால், அதே நபர் தங்களுடைய கருத்துக்கு
முரணாகப் பேசினாலோ அல்லது தங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளாவிட்டாலோ, உடனடியாக அவரை கெட்டவர், நம்பிக்கைக்குரியவர் அல்லர்
அல்லது எதிரி என்று விமர்சிக்கத் தொடங்கலாம். ஒருவரின் முழுமையான குணநலன்களைப்
பார்க்காமல், ஒரு நிகழ்வு அல்லது ஒரு கருத்து வேறுபாட்டின்
அடிப்படையில் அவரைப் பற்றி தீர்ப்பு வழங்கும் இந்தப் போக்கு, குடும்ப உறவுகள், நட்புறவுகள் மற்றும் பணியிட
உறவுகளில் தேவையற்ற விரிசல்களை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பு: இத்தகைய நடத்தை காணப்படுவதால் மட்டுமே ஒருவருக்கு மனநலச் சவால் உள்ளது என்று
முடிவு செய்ய முடியாது. இவை ஆளுமைப் பண்புகள், உணர்ச்சி முதிர்ச்சி, வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் பல்வேறு சமூகக்
காரணிகளாலும் தோன்றக்கூடிய நடத்தைகளாகும்.
16.
தேவைக்கேற்ப
உறவுகளைப் பயன்படுத்தும் போக்கு: சிலர், தங்களுக்குச்
சாதகமான ஆதரவைப் பெறுவதற்காக, சிலரை "நீங்கள் எனக்கு
அம்மா மாதிரி", "நீங்கள் எனக்கு அப்பா
மாதிரி", "நீங்கள்தான் என்னைப் புரிந்துகொள்கிற
ஒரே நபர்" என்று மிகுந்த நெருக்கத்துடன் அணுகலாம். ஆனால், பின்னர் அதே நபர் அவர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலோ அல்லது
அவர்களுக்குச் சாதகமாக நடந்து கொள்ளாவிட்டாலோ, உடனடியாக அந்த
உறவைப் புறக்கணித்து, அவரைப் பற்றிப் பிறரிடம் குறைகூறவோ
அல்லது எதிர்மறையாகப் பேசவோ தொடங்கலாம். இவ்வாறு, உறவுகளை
பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அல்லாமல், தனக்குத் தேவையான
ஆதரவைப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாக மட்டும் பயன்படுத்தும் போக்கு, நீடித்த நம்பிக்கையான உறவுகளை பாதிக்கக்கூடும்.
குறிப்பு: இத்தகைய நடத்தை காணப்படுவதால் மட்டுமே ஒருவருக்கு மனநலச் சவால் உள்ளது என்று
முடிவு செய்ய முடியாது. இது பல்வேறு ஆளுமைப் பண்புகள், உறவுமுறைகள்
அல்லது வாழ்க்கை அனுபவங்களாலும் தோன்றக்கூடிய ஒரு நடத்தைப் போக்காக இருக்கலாம்.
சமூக ஊடகங்களில்
வெளிப்படக்கூடிய சில நடத்தை மாற்றங்கள்
இன்றைய சமூக ஊடகப் பயன்பாடு மனிதர்களின் உணர்ச்சி
நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒரு தளமாக மாறியுள்ளது. மனநலச் சவால்கள் அல்லது
கடுமையான உளவியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சில நபர்களிடம் சமூக ஊடகங்களில்
பின்வரும் நடத்தைகள் காணப்படலாம்:
- திடீரென உணர்ச்சிவசப்பட்ட பதிவுகளை வெளியிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு அவற்றை நீக்கிவிடுதல்.
- நேரடியாகப் பேசுவதற்குப் பதிலாக, மறைமுகமான பதிவுகள் அல்லது மேற்கோள்கள் (indirect posts) மூலம் தங்களது மனவேதனை அல்லது அதிருப்தியை வெளிப்படுத்துதல்.
- வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டவுடன், சமூக ஊடகங்களில் தொடர்ந்து எதிர்மறையான கருத்துகள், ஏமாற்றம் அல்லது கோபத்தை வெளிப்படுத்துதல்.
- மற்றவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது
தங்களைப் புறக்கணிக்கிறார்கள் என்ற உணர்வை பதிவுகள் மூலம் வெளிப்படுத்துதல்.
- ஒரே நாளில் மிகுந்த மகிழ்ச்சியிலிருந்து கடுமையான
விரக்திவரை உணர்ச்சி மாறுபாடுகளைக் காட்டும் பதிவுகளைப் பகிர்தல்.
- அடிக்கடி பிறரை மறைமுகமாக விமர்சிக்கும் அல்லது
குறைகூறும் பதிவுகளை வெளியிடுதல்.
- தமது கருத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால்
உடனடியாக மனவருத்தம், கோபம் அல்லது ஏமாற்றத்தை
வெளிப்படுத்துதல்.
- கவனத்தை ஈர்க்கும் வகையில் உணர்ச்சிப்பூர்வமான
பதிவுகளைப் பகிர்தல்.
இத்தகைய நடத்தைகள் காணப்படுகின்றன என்பதற்காக ஒருவரை "மனநோயாளி"
என்று முத்திரை குத்துவது தவறாகும். இந்த நடத்தைகள் பல்வேறு காரணங்களால்
தோன்றக்கூடும். இவ்வாறான மாற்றங்கள் நீண்டகாலமாகத் தொடர்ந்து, அன்றாட
வாழ்க்கை, குடும்ப உறவுகள் அல்லது பணித்திறனைப்
பாதிக்கும்போது மட்டுமே தகுதிவாய்ந்த மனநல நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது
பொருத்தமானதாகும். நமது கடமை நோயறிதல் செய்வது அல்ல; புரிந்துகொள்வதும்,
மரியாதையுடன் நடத்துவதும், தேவையானபோது
உதவியைப் பெற ஊக்குவிப்பதுமாகும்.
சமூகத்தின் பார்வை
மாற வேண்டிய நேரம்
மனநலச் சவால்களைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் இன்னும்
நமது சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளன. மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒருவரை "பலவீனமானவர்", “சமநிலையற்றவர்”,
"பைத்தியம்", “சைக்கோ”, "ஆபத்தானவர்", "இவரால் எந்தப் பொறுப்பையும்
ஏற்க முடியாது" என்று முத்திரை குத்தும் மனப்போக்கு இன்னும் முழுமையாக
நீங்கவில்லை. இத்தகைய தவறான கருத்துக்கள் விஞ்ஞான உண்மைகளின் அடிப்படையில் அல்ல;
அறியாமை, மூடநம்பிக்கை மற்றும் சமூகத்தில்
பரவியுள்ள தவறான புரிதல்களின் விளைவாகும்.
உண்மையில், மனநலச் சவால்களை எதிர்கொள்ளும்
பெரும்பாலான நபர்கள் வன்முறையாளர்கள் அல்லர். அவர்களும் மற்ற மனிதர்களைப் போலவே
அன்பு, புரிதல், மரியாதை மற்றும் ஆதரவை
எதிர்பார்க்கின்றனர். சரியான மருத்துவச் சிகிச்சை, உளவியல்
ஆலோசனை, குடும்ப ஆதரவு மற்றும் சமூக ஒத்துழைப்பு
கிடைக்கும்போது, அவர்கள் கல்வி, தொழில்,
குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பாகப் பங்களிக்க
முடியும். எனவே, மனநலப் பிரச்சினை என்பது குணமடைய முடியாத
நிலை என்ற எண்ணமும் முற்றிலும் தவறானதாகும்.
குடும்பம் –
மீட்சியின் முதல் தளம்
மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் ஒருவரின் மீட்சிப்
பயணத்தில் குடும்பத்தின் பங்கு அளவிட முடியாதது. குடும்ப உறுப்பினர்கள் அவர்களின்
வார்த்தைகளைக் குறுக்கிடாமல் பொறுமையுடன் கேட்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தாமல்
ஏற்றுக்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டுதல், ஒப்பிடுதல், இகழ்ச்சியான
சொற்களைப் பயன்படுத்துதல் அல்லது "மனதைத் திடப்படுத்திக் கொள்" என்று
எளிதாக அறிவுரை கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் அனுபவிக்கும்
மனவேதனையைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.
தேவையானபோது மருத்துவ நிபுணர்கள், உளவியல்
ஆலோசகர்கள் அல்லது மனநலச் சேவைகளை அணுக ஊக்குவிப்பதும் குடும்பத்தின் முக்கியமான
பொறுப்பாகும். அன்பான உரையாடல், பாதுகாப்பான குடும்பச் சூழல்,
பொறுமை மற்றும் சிறிய முன்னேற்றங்களைக்கூட பாராட்டும் மனப்பாங்கு
ஆகியவை மீட்சியை விரைவுபடுத்தும் முக்கியமான காரணிகளாக அமைகின்றன.
பணித்தளங்கள் –
புரிதலுடனான பண்பாட்டை உருவாக்குவோம்
ஒரு பணியாளரின் மனநலம் அவரது உற்பத்தித்திறனையும்
பணித்தரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது. எனவே, பணித்தளங்கள்
மனநலத்திற்கு உகந்த, பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற சூழலை
உருவாக்க வேண்டும். மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் பணியாளர்களை திறமையற்றவர்களாகவோ
அல்லது பொறுப்பற்றவர்களாகவோ கருதாமல், அவர்களின் திறமைகள்
மற்றும் தொழில்திறனின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.
நிறுவனங்கள் மனநல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஆலோசனைச்
சேவைகள், மரியாதைமிக்க தொடர்பாடல் மற்றும் ஆதரவான நிர்வாகக்
கொள்கைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். மனநலத்திற்கு மதிப்பளிக்கும்
பண்பாடு உருவாகும்போது, அது தனிநபருக்கும் நிறுவனத்திற்கும்
சமமாக நன்மை பயக்கும்.
கல்வி
நிறுவனங்களின் பொறுப்பு
பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி
நிறுவனங்கள் அறிவை வழங்கும் இடங்களாக மட்டுமல்ல, மனநலத்தைப்
பாதுகாக்கும் சூழல்களாகவும் இருக்க வேண்டும். மாணவர்களின் நடத்தையில், கற்றல் ஆர்வத்தில் அல்லது சமூக உறவுகளில் ஏற்படும் குறிப்பிடத்தக்க
மாற்றங்களை ஆசிரியர்கள் கவனமாக அவதானிக்க வேண்டும்.
தேவையானபோது மாணவர்களை பொருத்தமான ஆலோசனைச்
சேவைகளுக்கு வழிநடத்துவதோடு, மனநல விழிப்புணர்வு, உணர்வுகளை ஆரோக்கியமாக வெளிப்படுத்தும் திறன், பரஸ்பர
மரியாதை மற்றும் பாகுபாடற்ற அணுகுமுறை ஆகியவற்றையும் கல்விச் சூழலில் வளர்க்க
வேண்டும். மனநலத்தைப் பற்றி திறந்த மனதுடன் உரையாடும் கல்வி நிறுவனங்களே
ஆரோக்கியமான எதிர்காலச் சமூகத்தை உருவாக்கும்.
சமூகமாக நாம்
செய்ய வேண்டியது
மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் நபர்களை இழிவுபடுத்தும்
சொற்களால் அழைப்பதையோ, கேலி செய்வதையோ அல்லது சமூக
ஊடகங்களில் அவர்களை அவமானப்படுத்தும் வகையில் தகவல்களைப் பகிர்வதையோ முற்றிலும்
தவிர்க்க வேண்டும். அவர்களின் தனியுரிமையையும் மனித மாண்பையும் மதிக்க வேண்டும்.
ஒருவரின் நடத்தையில் தொடர்ச்சியான மாற்றங்கள்
காணப்பட்டால், அவரை விமர்சிப்பதற்குப் பதிலாக அக்கறையுடன் அணுகி, தேவையான தொழில்முறை உதவியைப் பெற ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் மனநல
விழிப்புணர்வைப் பெற்றுக்கொள்வதும், மனநலத்தைப் பற்றிய தவறான
நம்பிக்கைகளைச் சவாலுக்கு உட்படுத்துவதும் சமூகப் பொறுப்பாகும்.
நிறைவுரை
மனநலச் சவால்களை எதிர்கொள்ளும் நபர்கள் நமது
சமூகத்தின் ஓர் அங்கம் மட்டுமல்ல; நம்மைப் போன்ற கனவுகளும், உணர்வுகளும், திறமைகளும், எதிர்பார்ப்புகளும்
கொண்ட மனிதர்கள். அவர்களை அவர்களுடைய மனநல நிலையின் அடிப்படையில் மதிப்பிடாமல்,
அவர்களின் மனித மாண்பையும் உரிமைகளையும் மதிப்பதே நாகரிக சமூகத்தின்
அடையாளமாகும்.
ஒரு மனிதனுக்கு நாம் வழங்கக்கூடிய மிகப்பெரிய பரிசு
பணமோ பொருளோ அல்ல; புரிந்துகொள்ளும் மனமும், மரியாதையும், ஏற்றுக்கொள்ளுதலும் ஆகும். மனநலத்திற்கு மதிப்பளிக்கும் சமூகமே உண்மையான ஆரோக்கியமான சமூகமாகும்.
எனவே, மனநலத்தைப் பாதுகாப்போம்; மனிதநேயத்தைப்
பேணுவோம்; புரிந்துகொள்ளும் சமூகத்தை இணைந்து உருவாக்குவோம்.
உசாத்துணைகள்
- American Psychiatric Association. (2023). Diagnostic
and statistical manual of mental disorders (5th ed., text rev.;
DSM-5-TR). American Psychiatric Publishing.
- World Health
Organization (WHO): Mental Health. (2022). Mental
health: Strengthening our response.
- World Health
Organization (WHO): World Mental Health Report. (2022). World
mental health report: Transforming mental health for all.
- National Institute of Mental Health (NIMH). (2024). Mental
health information.
- Centers for
Disease Control and Prevention (CDC): Mental Health. (2024). About
Mental Health.
- Ministry of Health – Sri Lanka. Mental
Health Services.
- Mental
Health Directorate – Ministry of Health, Sri Lanka. National
Mental Health Programme.
- National Institute of Mental Health (Sri Lanka). Mental
health information and services.

