கிண்ணியா கல்வி வலயத்தின் அவல நிலை
தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சைப் பெறுபேறுகள்
— 2021-2025 களை முன்வைத்து.
-ஜெஸார் ஜவ்பர்-
1. அறிமுகம் (Introduction)
இலங்கையின் இலவசக் கல்வி முறைமையானது
தெற்காசிய பிராந்தியத்திலேயே முதன்மையான மனித வள மேம்பாட்டுச் சுட்டிகளைக் கொண்ட ஒன்றாகக்
கருதப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக,
கல்வி நிர்வாகக் கட்டமைப்பானது மாகாண மட்டங்கள் மற்றும் கல்வி வலயங்களாகப் பிரிக்கப்பட்டு
நிர்வகிக்கப்படுகின்றது. அந்தவகையில், இலங்கை முழுவதும் மொத்தம் 100 கல்வி வலயங்கள்
இயங்கி வருகின்றன. இக்கல்வி வலயங்கள் தரமான கற்பித்தல், வளப் பகிர்வு மற்றும் பரீட்சைப்
பெறுபேறுகளை உயர்த்தும் நிர்வாகக் அலகுகளாகச் தொழிற்படுகின்றன. தேசிய மட்டத்தில் நடத்தப்படும்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (சாதாரண தர) பரீட்சை என்பன ஒவ்வொரு கல்வி
வலயத்தினதும் கல்வி அடைவு மட்டத்தைத் துல்லியமாக அளவிடும் முதன்மை அளவுகோல்களாக அமைகின்றன.
கிண்ணியாவின்
புவியியல் மற்றும் சனத்தொகைக் கட்டமைப்பு
கிழக்கு
மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிண்ணியா, வரலாற்றுச் சிறப்பும்
தனித்துவமான புவியியல் அமைப்பும் கொண்ட ஒரு பிரதேசமாகும். சுமார் 151.9 சதுர கிலோமீட்டர் (151.9 km²) பரப்பளவைக் கொண்ட
பிரதேச செயலகப் பிரிவாக இது காணப்படுவதுடன், சதுர
கிலோமீட்டருக்குச் 569.4 பேர் எனும் சனத்தொகை அடர்த்தியையும்
கொண்டு திகழ்கிறது.
2001 ஆம் ஆண்டில் 55,468 ஆகவும், 2012 இல் 64,613 ஆகவும் காணப்பட்ட இதன் சனத்தொகை, அண்மைக்காலக் கணிப்பின்படி (Census 2024) 86,504 ஆக உயர்வடைந்துள்ளது.
இன
மற்றும் மத ரீதியான கட்டமை அடிப்படையில், கிண்ணியாப் பிரதேசம் மிகப்பெருமளவில்
இலங்கைச் சோனகர்களை (Sri
Lankan Moors) பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு முஸ்லிம்
வாழ்பகுதியாகும். சனத்தொகையில் 96.8% ஆனோர் (83,734 பேர்) முஸ்லிம்களாவர். மேலும், 2,535 இலங்கைத் தமிழர்களும் (2.9%), 123 சிங்களவர்களும்,
92 இந்தியத் தமிழர்களும் இங்கு வசிக்கின்றனர். மத ரீதியாக
97.1% (84,032 பேர்) இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர்;
இந்துக்கள் (2,378 பேர்) இரண்டாம் நிலையில்
உள்ளனர்.
பாலின
மற்றும் வயதுக் கட்டமைப்பின் அடிப்படையில்
பாலின ரீதியில் ஆண்களும் (43,372
/ 50.1%) பெண்களும் (43,132 / 49.9%) சமவிகிதத்தில்
காணப்படுகின்றனர். இங்கு 0-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களின்
எண்ணிக்கை 26,738 (30.9%) ஆகும். அதாவது, சனத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் பாடசாலை மற்றும் ஆரம்பக் கல்வி
வயதைச் சேர்ந்த சிறுவர்களாக இருப்பது, இப்பிரதேசத்தின் கல்வி
நிர்வாகத்தினதும் பாடசாலைக் கட்டமைப்பினதும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
கிண்ணியா
கல்வி வலயமும் பாடசாலைக் கட்டமைப்பும்
கிண்ணியா
கல்வி வலயமானது பெரும்பான்மையாக முஸ்லிம் பாடசாலைகளையும் முஸ்லிம் சமூகத்தைச்
சேர்ந்த மாணவர்களையும் கொண்ட ஒரு தனித்துவமான கல்வி வலயமாக அடையாளப்படுத்த
முடியும். கற்றல் மற்றும் நிர்வாக வசதிக்காக இவ்வலயம் மூன்று கல்விப் பிரிவுகளாக (Educational Divisions) பிரிக்கப்பட்டு
இயங்கி வருகின்றது:
1.
கிண்ணியா கோட்டம்
2.
குறிஞ்சாக்கேணி கோட்டம்
3.
முள்ளிப்பொத்தானை கோட்டம்
பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கையும் வகைகளும் (School Classification):
பரீட்சைத்
திணைக்கள தரம் 5 புலமைப் பரிசில் பரிட்சை ஆவணங்களில் படி, கிண்ணியா கல்வி
வலயத்தில் மொத்தம் 61 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. கிண்ணியா கோட்டத்தில்
20 பாடசாலைகளும், குறிஞ்வாக்கேணி கோட்டத்தில் 27 பாடசாலைகளும், முள்ளிப்பொத்தானை கோட்டத்தில்
13 பாடசாலைகளும் உள்ளன.
இவற்றில்
7 பாடசாலைகள் 1 AB பாடசாலைகளாகும். மூன்று தேசிய பாடசாலைகளாகும். கிண்ணியா மத்திய கல்லூரி, கிண்ணியா
முஸ்லிம் மகளிர் மகா வித்யாலயம் மற்றும் அல் அக்ஸா தேசிய பாடசாலை தவிர்ந்த, ஏனைய 64 பாடசாலைகள் கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும்
மாகாண சபைப் பாடசாலைகளாகவும் (Provincial
Schools) காணப்படுகின்றன.
பாலின அடிப்படையில்
வலயத்தில் பொரும்பாலான
பாடசாலைகள் இருபாலார் பயிலும் (Mixed)
பாடசாலைகளாக அமைந்திருந்தாலும், கிண்ணியா
முஸ்லிம் மகளிர் மகா வித்யாலயம், அல்-ஹிரா முஸ்லிம் மகளிர்
மகா வித்யாலயம், இஹ்ஸானியா மகளிர் வித்யாலயம், டி.பி. ஜாயா மகளிர் வித்யாலயம், பாத்திமா பலிகா
வித்யாலயம் என 5 பிரத்யேக மகளிர் பாடசாலைகளும், பெரிய கிண்ணியா ஆண்கள் பாடசாலை, அல்-அக்ஸா ஆரம்ப
பாடசாலை என 2 பிரத்யேக ஆண்கள் பாடசாலைகளும் இயங்கி வருகின்றன.
கற்பித்தல் மொழி: பாடசாலைகள்
பெரும்பாலும் தமிழ் மொழியையும்,
சில முதன்மைப் பாடசாலைகள் தமிழ் மற்றும் ஆங்கில இருமொழிப்
பாடத்திட்டங்களையும் (Tamil/English Medium) கொண்டு
கற்பிக்கின்றன.
கட்டுரையின்
நோக்கம்
இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களின்
வரிசையில், தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப்
பொறுத்தமட்டில் கிண்ணியா கல்வி வலயம் மிகவும் பின்தங்கியுள்தை
அவதானிக்கலாம். அபாயகரமான எதிர்காலம் குறித்த எச்சரிக்கையோடு
இதிலிருந்து மீள்வதற்கான சமூக ரீதியான கவனக் குவிப்பும் திட்டமிடல்களினதும் தேவைகள்
குறித்தும் கதையாடல்களை ஆரம்பிப்பதும் இப்பதிவின் நோக்கமாகும்.
புள்ளிவிவரத் தரவுகளை அடிப்படையாகக்
கொண்டு, கடந்த ஆண்டுகளில் (2021-2025) கிண்ணியா கல்வி வலயத்தின் தரம் 5 புலமைப்பரிசில்
மற்றும் க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளைப் பகுப்பாய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் மூலம் வலயத்தின் கல்வி அடைவு மட்டங்கள், கோட்டங்களுக்கு இடையிலான இடைவெளிகள்,
வலயத்தின் பலங்கள் மற்றும் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பலவீனங்களை வெளிக்கொணர்ந்து,
எதிர்காலக் கல்வி முன்னேற்றத்திற்கான வழிகாட்டல்களை முன்வைப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
2. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்:
பகுப்பாய்வு
வலய மட்ட
ஒட்டுமொத்தப் போக்குகள் (Zonal Performance Trends)
இலங்கையின் 100 கல்வி வலயங்களுக்கு
இடையிலான தரவரிசையில், கிண்ணியா கல்வி வலயம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில்
தொடர்ச்சியாகப் பின்னடைவையே சந்தித்து வருகின்றது.
|
ஆண்டு |
வலயத் தரவரிசை (100இல்) |
குறிப்பு |
|
2021 |
100 |
கடைசி இடம் |
|
2022 |
99 |
- |
|
2023 |
98 |
- |
|
2024 |
100 |
கடைசி இடம் |
|
2025 |
100 |
கடைசி இடம் |
(பரீட்சைகள் திணைக்களம்)
இத்தரவுகள்
கிண்ணியாவின் கல்வி நிலை குறித்து துல்லியமான முடிவுகளைத் தருகின்றன. மொத்தம் 100 வலயங்களில் தொடர்ச்சியாக 5 வருடங்கள் இறுதி
இடங்களைப் பெற்று வருவது என்பது வலயத்தின் எதிர்கால சந்ததி முழுமையாகவே
பின்தங்கியுள்ளது என்பதற்கான ஒரு அளவீடாகக் கூடக்
கருதலாம்.
வெட்டுப்புள்ளிக்கு மேல்
(Cut-Off Mark) புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடையும் மாணவர்களின் சதவீதத்தைக் நோக்கினால்,
அது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது:
|
ஆண்டு |
சித்தியடைந்தோர் சதவீதம் |
மாணவர் எண்ணிக்கை |
|
2021 |
4.23% |
80 |
|
2022 |
3.86% |
71 |
|
2023 |
4.89% |
88 |
|
2024 |
4.63% |
92 |
|
2025 |
6.48% |
123 |
70 புள்ளிகளுக்கு
மேல் மற்றும் 70 புள்ளிகளுக்குக் கீழ் பெற்ற மாணவர்களின் பகுப்பாய்வு
புலமைப்பரிசில் பரீட்சையை வெறும்
வெட்டுப்புள்ளியை அடிப்படையாக வைத்து மட்டும் நோக்காமல், மாணவர்களின் அடிப்படை கற்றல்
அடைவை அளவிடும் 70 புள்ளிகள் எனும் அளவுகோலின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வது மிகவும்
அவசியமாகும்:
|
ஆண்டு |
70+ சதவீதம் |
70+ மாணவர்கள் |
70க்குக் கீழ் சதவீதம் |
70க்குக் கீழ் மாணவர்கள் |
|
2021 |
54.73% |
1,036 |
45.0% |
857 |
|
2022 |
61.79% |
1,135 |
39.0% |
702 |
|
2023 |
55.03% |
990 |
45.6% |
809 |
|
2024 |
54.23% |
1,077 |
45.5% |
909 |
|
2025 |
47.07% |
893 |
52.9% |
1,005 |
இத்தரவுகளில் கவனிக்கத்தக்க
மிகக் கவலையான அம்சம் என்னவெனில், 2021 முதல் 2024 வரை சராசரியாக 40% - 45% மாணவர்கள்
70 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்று வந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் அது 52.9% ஆக
உயர்ந்துள்ளது. அதாவது, 2025 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் அரைவாசிக்கும் மேல் (1,005
மாணவர்கள்) ஆரம்பக் கல்வியின் அடிப்படை அடைவு மட்டத்தைக் கூட எட்ட முடியாமல் 70 புள்ளிகளுக்கும்
குறைவாகப் பெற்று வீழ்ச்சியடைந்துள்ளனர்.
கோட்ட மட்ட
ஒப்பீடு (Divisional Level Comparison)
கிண்ணியா வலயத்தின் மூன்று
கோட்டங்களுக்கு இடையே புலமைப்பரிசில் பெறுபேறுகளில் கணிசமான வேறுபாடுகள் காணப்படுகின்றன:
1. கிண்ணியா கோட்டம் (Kinniya Division)
● வலயத்தில்
அதிகளவிலான மாணவர்களைப் பரீட்சைக்கு முகங்கொடுக்க வைக்கும் கோட்டமாக இது திகழ்கின்றது
(வருடாந்தம் சுமார் 900-1000 மாணவர்கள்).
● வெட்டுப்புள்ளிக்கு
மேல் புள்ளிகளைப் பெறும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் இக்கோட்டத்திலிருந்தே உருவாகின்றனர்.
எனினும், 2025 இல் இக்கோட்டத்திலும் 31.9% மாணவர்கள் (300 மாணவர்கள்) 70 புள்ளிகளுக்கும்
குறைவாகப் பெற்றுள்ளனர்.
2. குறிஞ்சாக்கேணி கோட்டம் (Kurinchakerny Division)
● இக்கோட்டத்தில்
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும் (சுமார்
600-700 மாணவர்கள்), வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடையும் மாணவர்களின்
எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களிலேயே சுழல்கின்றது.
● 70
புள்ளிகளுக்குக் கீழ் பெறும் மாணவர்களின் சதவீதம் இக்கோட்டத்தில் மிக மோசமாகக் காணப்படுகின்றது
(2025 இல் 52.6% மாணவர்கள் - 311 பேர் 70 புள்ளிகளுக்குக் கீழ் பெற்றுள்ளனர்).
3. முள்ளிப்பொத்தானை கோட்டம் (Mullipothana Division)
● கிராமப்புற
பின்னணியைக் கொண்ட இக்கோட்டத்தில் தோற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு (சுமார்
350-400 மாணவர்கள்).
● 2025
ஆம் ஆண்டில் இக்கோட்டத்தில் 47.4% மாணவர்கள் (173 பேர்) 70 புள்ளிகளுக்குக் கீழ் பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
சிறந்த
செயற்பாட்டை வெளிப்படுத்திய பாடசாலைகள்
வலயம் ஒட்டுமொத்தமாகப் பின்தங்கியிருந்தாலும்,
சில குறிப்பிட்ட பாடசாலைகள் தொடர்ச்சியாகத் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வருகின்றன:
தேசிய மற்றும் முன்னணிப் பாடசாலைகள்
● கிண்ணியா
முஸ்லிம் மகளிர் மகா வித்யாலயம் (தேசிய பாடசாலை): வருடாந்தம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை
வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைய வைக்கும் பாடசாலையாக முதன்மையில் உள்ளது (2025
இல் 29 மாணவர்கள், 2024 இல் 24 மாணவர்கள் சித்தியடைந்தனர்).
● கிண்ணியா
மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை): நிலையான பெறுபேறுகளை வழங்கி வருகிறது (2025 இல்
19 மாணவர்கள், 2024 இல் 21 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல்).
ஆரம்ப மற்றும் சிறிய பாடசாலைகளின் பங்களிப்பு
● அல்-அக்ஸா
ஆரம்ப பாடசாலை: முதன்மை ஆரம்பப் பாடசாலையாக விளங்கி, கணிசமான மாணவர்களைச் சித்தியடைய
வைத்து வருகிறது (2025 இல் 6 மாணவர்கள்).
● பாத்திமா
பலிகா வித்யாலயம் (முள்ளிப்பொத்தானை): இக்கோட்டத்தில் தொடர்ச்சியாகச் சிறந்த பெறுபேறுகளை
பதிவு செய்யும் பாடசாலையாகத் திகழ்கிறது.
● ஈச்சந்தீவு
விபுலானந்தா வித்யாலயம் & உப்பறு வைஷ்ணவி வித்யாலயம்: மிகக் குறைந்த மாணவர்களைக்
கொண்டிருந்தாலும், 80% - 100% வரையான அடிப்படைத் தேர்ச்சி வீதத்தைக் காட்டி வியக்க
வைக்கின்றன.
3. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்: பகுப்பாய்வு
உயர் கல்விக்கான
தகுதி (Qualified for G.C.E A/L)
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது
மாணவர்களின் இடைநிலைக் கல்வியை பூர்த்தி செய்து, உயர்தரக் கல்விக்கான வாசலைத் திறந்துவிடும்
முக்கியமான பரீட்சையாகும். கிண்ணியா கல்வி வலயத்தில் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி
பெறும் மாணவர்களின் சதவீதப் போக்கைக் கவனிக்கையில், அது கணிசமான ஏற்ற இறக்கங்களைச்
சந்தித்து வந்துள்ளதை முதன்மைத் தரவுகள் உணர்த்துகின்றன:
|
ஆண்டு |
தகுதி பெற்றோர் சதவீதம் |
மாணவர் எண்ணிக்கை |
|
2021 |
64.79% |
861 |
|
2022 |
62.09% |
976 |
|
2023 |
71.18% |
1,052
(மிக உயர்ந்த அடைவு) |
|
2024 |
62.33% |
940 |
|
2025 |
65.97% |
915 |
2023 ஆம் ஆண்டில் உயர்தரத்திற்குத்
தகுதிபெறும் வீதம் 71.18% ஆக உயர்ந்தபோதிலும், அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் மீண்டும்
62% - 65% என்ற அளவிற்கே தள்ளப்பட்டுள்ளமை வலயக் கல்வியில் நிலைபேறான வளர்ச்சி இன்னும்
எட்டப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
முக்கிய
பாட அடைவுகள் மற்றும் வலயத் தரவரிசை (Core Subjects Performance & Zonal Rank)
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்
முதன்மை மொழி (தமிழ்) மற்றும் கணிதம் உட்பட 6 பாடங்களில் 3 திறமைச் சித்திகளுடன்
(3C) பாஸாகும் மாணவர்களின் விகிதம் வலயத்தின் தரமான கல்வியை அளவிடும் பிரதான குறியீடாகும்.
|
ஆண்டு |
3C உட்பட 6 பாடங்களில் சித்தி |
மாணவர் எண்ணிக்கை |
|
2021 |
49.51% |
658 |
|
2022 |
52.23% |
821 |
|
2023 |
59.20% |
875 |
|
2024 |
50.73% |
765 |
|
2025 |
53.50% |
742 |
சுமார் 40% க்கும் அதிகமான
மாணவர்கள் கணிதம் அல்லது முதன்மை மொழியில் தவறுவதனாலோ அல்லது போதிய திறமைச் சித்திகளைப்
பெறாமையினாலோ அடிப்படைத் தகுதியை இழக்கின்றனர்.
தேசிய வலயத் தரவரிசையில் கிண்ணியாவின்
நிலை (Zonal Rank out of 100): இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களில் க.பொ.த சாதாரண தரப்
பெறுபேறுகளின் அடிப்படையில் கிண்ணியா வலயத்தின் இடம் மிக மோசமான நிலையிலேயே நீடிக்கிறது:
|
ஆண்டு |
வலயத் தரவரிசை (100இல்) |
|
2021 |
95 |
|
2022 |
99 |
|
2023 |
76 |
|
2024 |
98 |
|
2025 |
90 |
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைப்
போலவே, க.பொ.த (சா/த) பரீட்சையிலும் கிண்ணியா வலயம் தேசிய அளவில் தொடர்ச்சியாக இறுதி
10 வலயங்களுக்குள்ளேயே காணப்படுகின்றது.
அனைத்துப்
பாடங்களிலும் சித்தியடையாதோர் (Failed in All Subjects)
பரீட்சைக்குத் தோற்றி எந்தவொரு
பாடத்திலும் சித்தியடையாமல் (Failed in All Subjects) முழுமையாக வீழ்ச்சியடையும் மாணவர்களின்
எண்ணிக்கையும் கவலை அளிப்பதாக உள்ளது:
|
ஆண்டு |
மாணவர் எண்ணிக்கை |
சதவீதம் |
|
2021 |
45 |
3.39% |
|
2022 |
60 |
3.82% |
|
2023 |
21 |
1.42% |
|
2024 |
48 |
3.18% |
|
2025 |
28 |
2.02% |
எண்ணிக்கை ரீதியாக இது குறைவாகத்
தெரிந்தாலும், 11 வருட பாடசாலைக் கல்வியின் முடிவில் ஒரு மாணவர் கூட அனைத்துப் பாடங்களிலும்
தோல்வியடைவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
முன்னணி
மற்றும் பின்தங்கிய பாடசாலைகள் (School Level Performance)
கோட்டங்கள் மற்றும் பாடசாலைகள்
அடிப்படையில் பெறுபேறுகளை நோக்கும் போது தெளிவான இடைவெளி தென்படுகின்றது:
1. முன்னணிப் பாடசாலைகள் (High Performing Schools)
● கிண்ணியா
முஸ்லிம் மகளிர் மகா வித்யாலயம் (தேசிய பாடசாலை): தொடர்ச்சியாக 80% - 90% வரை உயர்தரத்திற்குத்
தகுதி பெறும் மாணவர் சதவீதத்தைப் பேணி வலயத்தின் முதன்மைப் பாடசாலையாக விளங்குகிறது
(2025 இல் 89.9% தேர்ச்சி).
● கிண்ணியா
மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை): வருடாந்தம் அதிகளவிலான மாணவர்களைப் பரீட்சைக்கு முகங்கொடுக்க
வைத்து 80% க்கும் அதிகமான தேர்ச்சியைப் பதிவு செய்கிறது (2025 இல் 85.2% தேர்ச்சி).
● அல்-ஹிரா
முஸ்லிம் மகளிர் மகா வித்யாலயம் 2025 இல் 75% சித்தியையும், டி.பி.
ஜாயா வித்யாலயம்: 93% சித்தியையும் பதிவு செய்து உயர்தரத் தகுதி
வீதத்துடன் முன்னணி வரிசையில் உள்ளன.
2. பின்தங்கிய பாடசாலைகளும் சவால்களும் (Low Performing Schools)
● குறிப்பாகக்
குறிஞ்சாக்கேணி கோட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் 35% - 50% க்கும் குறைவான தேர்ச்சி
வீதத்தையே பதிவு செய்கின்றன.
● அல்-ஃபுர்கான்
வித்யாலயம் (36.4%), Van-Ela Buhary வித்யாலயம் (26%)போன்ற பாடசாலைகளில் சில ஆண்டுகளில் உயர்தரத் தகுதி வீதம் 30%
- 40% க்கும் கீழாகச் சரிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
4. புலமைப்பரிசில் vs சாதாரண தரம்: ஒரு ஒப்பீட்டுப்
பார்வை
பரீட்சைப்
பெறுபேறுகளை நோக்குவதிலுள்ள தர்க்கரீதியான இடைவெளி (Methodological
Considerations)
கிண்ணியா கல்வி வலயத்தின் தரம்
5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளையும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளையும்
ஒப்பீட்டளவில் நோக்கும் போது ஒரு முக்கியமான தர்க்கரீதியான வரம்பை (Methodological
Limitation) நினைவில் கொள்ள வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தரம்
5 பரீட்சை எழுதும் மாணவர்கள், அதற்கு அடுத்த 5 ஆண்டுகள் இடைநிலைக் கல்வியை முடித்த
பின்னரே க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். எனவே, ஒரே ஆண்டின் தரம்
5 மற்றும் சாதாரண தரப் பெறுபேறுகள் என்பவை இரு வேறுபட்ட மாணவர் குழுக்களின்
(Cohorts) அடைவு மட்டங்களையே குறிக்கின்றன. இருப்பினும், வலயத்தின் ஒட்டுமொத்தக் கல்விச்
சூழலையும், ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்வி வரையிலான மாணவர் தேர்ச்சிப் போக்கையும்
புரிந்துகொள்ள இவ்விரு பரீட்சைப் புள்ளிவிவரங்களும் முக்கியமான சான்றுகளாக அமைகின்றன.
ஆரம்பக்
கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்கான மாற்றம் (Primary to Secondary Performance
Trend)
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை
மதிப்பிடும் போது, வெறும் வெட்டுப்புள்ளியை (Cut-Off Mark) மட்டும் கவனத்தில் கொள்வது
முழுமையான படத்தைத் -புரிதலைத்- தராது.
● வெட்டுப்புள்ளிக்கு
மேல் (Cut-Off): வலய அளவில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெறும் மாணவர்களின்
சதவீதம் 3.8% முதல் 6.4% வரை மட்டுமே காணப்படுகின்றது (2025 இல் 123 மாணவர்கள்).
● அடிப்படைத்
தேர்ச்சி (70 புள்ளிகளுக்கு மேல்): ஆனால், புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு
மேல் பெற்று அடிப்படை அடைவு மட்டத்தை எட்டிய மாணவர்களின் எண்ணிக்கையைக் கவனிக்கையில்,
அது 47% முதல் 61% வரை காணப்படுகின்றது. உதாரணத்திற்கு, 2025 ஆம் ஆண்டில் பரீட்சைக்குத்
தோற்றிய 1,897 மாணவர்களில் 893 மாணவர்கள் (47.07%) 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
● சாதாரண
தரத்தில் மாணவர்களின் நிலைப்பாடு (O/L Performance): க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு
வரும் போது, உயர்தரத்தைத் தொடர்வதற்கு தகுதிபெறும் வீதம்
(Qualified for A/L) 62% முதல் 71% வரை காணப்படுகின்றது (2023 இல் 71.18%, 2025 இல்
65.97%).
புலமைப்பரிசில் பரீட்சையில்
70 புள்ளிகளுக்கு மேல் பெற்று அடிப்படைத் தேர்ச்சியடையும் மாணவர்களின் விகிதமும்
(47% - 61%), சாதாரண தரத்தில் உயர்தரத்திற்குத் தகுதிபெறும் மாணவர்களின் விகிதமும்
(62% - 71%) ஓரளவு ஒன்றுக்கொன்று ஒத்துப் போகின்றன. இதன் மூலம், ஆரம்பக் கல்வியில்
70 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்று (சுமார் 45% - 52% மாணவர்கள்) அடியோடு வீழ்ச்சியடையும்
மாணவர்களே, பின்ன நாளில் சாதாரண தரப் பரீட்சையிலும் 6 பாடங்களில் தேர்ச்சியடைய முடியாமலும்
உயர்தரத்திற்குத் தகுதிபெற முடியாமலும் போகும் அபாயம் அதிகம் உள்ளது என்பது புலனாகின்றது.
தற்போதைய தரம் 5 பரிட்சை
எழுதிய தலைமுறை க.பொ.த சாதாரண தரத்திற்கு வரும் போது நிலைமை மேலும் கவலைக்கிடமாக
மாறும் என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
தேசிய வலயத்
தரவரிசையில் கிண்ணியாவின் இடம் (Kinniya's Position in National Zonal Ranking)
இலங்கையின் 100 கல்வி வலயங்களில்
கிண்ணியா வலயத்தின் தேசிய மட்டத் தரவரிசையை கடந்த 5 ஆண்டுகளில் நோக்கினால், இரு பிரதான
தேசியப் பரீட்சைகளிலுமே வலயத்தின் நிலைப்பாடு கவலையளிப்பதாக உள்ளது:
|
பரீட்சை ஆண்டு |
தரம் 5 புலமைப்பரிசில் வலயத் தரவரிசை |
க.பொ.த சாதாரண தர வலயத் தரவரிசை |
|
2021 |
100 |
95 |
|
2022 |
99 |
99 |
|
2023 |
98 |
76 |
|
2024 |
100 |
98 |
|
2025 |
100 |
90 |
தரவரிசை உணர்த்தும் முக்கிய செய்திகள்
1. தொடர்ச்சியான
அமைப்புமுறைத் தேக்கநிலை (Systemic Stagnation): வெவ்வேறு மாணவர் குழுக்கள் தோற்றியபோதிலும்,
இரு தேசியப் பரீட்சைகளிலுமே கிண்ணியா வலயம் நாட்டின் இறுதி 10 வலயங்களுக்குள்ளேயே தொடர்ச்சியாக
இடம்பெறுகிறது (2025 சாதாரண தரத்தில் 90-வது இடம்). இது தனிப்பட்ட மாணவர்களின் பலவீனம்
அல்ல; மாறாக ஆரம்பக் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை தொடரும் வலயத்தின் பொதுவான கற்றல்-கற்பித்தல்
இடைவெளியையே சுட்டிக்காட்டுகிறது.
2. முஸ்லிம்
பாடசாலைகள் பெரும்பான்மை கொண்ட வலயத்தின் சவால்: முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்
பெரும்பான்மையாகப் பயிலும் ஒரு கல்வி வலயம், தேசிய அளவில் தொடர்ச்சியாக இறுதி இடங்களில்
இருப்பது அம்மாணவர்களின் எதிர்காலப் பல்கலைக்கழகக் கல்வி, தொழிற்துறை வாய்ப்புகள் மற்றும்
சமூகப் பொருளாதார முன்னேற்றத்தில் நீண்டகால எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும்.
5. கல்வி வீழ்ச்சிக்கான சாத்தியமான காரணங்கள் மற்றும்
சவால்கள்
கிண்ணியா கல்வி வலயம் தேசிய
மட்டத்தில் தொடர்ச்சியாகப் பின்தங்கிய நிலையிலேயே நீடிப்பதற்குப் பின்னால் பல்வேறு
கட்டமைப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் பிரதான பங்கு வகிக்கின்றன:
கல்வி நிர்வாகக் கட்டமைப்பின் அசமந்தப் போக்கும் திட்டமிடல் இன்மையும்
● வலயக்
கல்விப் பணிமனை மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களின் தரப்பில் நீடிக்கும் நிர்வாக அசமந்தப்
போக்கும் (Administrative Lethargy), பெறுபேறுகளை உயர்த்தக்கூடிய தீர்க்கமான நீண்டகாலத்
திட்டமிடல்கள் (Long-term Strategic Planning) இன்மையுமே வலயத்தின் தொடர் வீழ்ச்சிக்கு
முதன்மைக் காரணமாகும்.
● தேசிய
அளவில் பாடசாலைகள் அடைவு மட்டங்களை உயர்த்த பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்று வரும் போது,
வலய மட்டத்தில் பாடசாலைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் முறைமைகளும் (Monitoring
Mechanisms), தவறும் பாடசாலைகளுக்குரிய உரிய வழிகாட்டல்களும் (Targeted Guidance) சரியான
முறையில் வழங்கப்படுவதில்லை.
● வருடாந்தப்
பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்தவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆழமான பெறுபேறு பகுப்பாய்வுகளும்
(Result Analysis), அதனடிப்படையில் பின்தங்கிய பாடசாலைகளுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய
பரிகாரக் கற்பித்தல் (Remedial Action Plans) செயற்பாடுகளும் ஏட்டளவிலேயே நின்றுவிடுகின்றன.
சில சந்தர்ப்பங்களில் ஏடுகளில் கூட அவை இல்லை.
ஆசிரியர் பற்றாக்குறையும் சீரற்ற வளப் பகிர்வும்
● கணிதம்,
விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் மொழி போன்ற பிரதான பாடங்களுக்கான
பாடரீதியான ஆசிரியர் பற்றாக்குறை வலயத்தில் நிலவுகின்றது.
● நகர்ப்புறப்
பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில், குறிஞ்சாக்கேணி மற்றும் முள்ளிப்பொத்தானை போன்ற கிராமப்புறக்
கோட்டங்களின் பாடசாலைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியர்களின் பரவலாக்கம் சமமற்ற முறையில்
காணப்படுகின்றது.
அடிப்படை வாசிப்பு, கணிதத் திறன்களில் காணப்படும் இடைவெளி
● ஆரம்பக்
கல்வியில் (தரம் 1–5) மாணவர்களுக்குரிய அடிப்படை வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத்
திறன்கள் (Foundational Literacy and Numeracy) ஆழமாகப் பதியம்படாமையே, தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சையில் 52.9% மாணவர்கள் (2025 இல்) 70 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெறுவதற்குக்
பிரதான காரணமாகும்.
● இந்த
அடிப்படை இடைவெளி சரிசெய்யப்படாமல் இடைநிலைக் கல்விக்குக் கடத்தப்படுவதால், சாதாரண
தரப் பரீட்சையிலும் மாணவர்கள் கணிதம் மற்றும் ஏனைய பாடங்களில் தேர்ச்சியடையத் தவறுகின்றனர்.
சமூக-பொருளாதாரக் காரணிகளும் பெற்றோர் விழிப்புணர்வும்
● பெரும்பாலான
மாணவர்கள் விவசாயம், மீன்பிடி மற்றும் கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பப்
பின்னணியிலிருந்து வருகின்றனர்.
● குடும்பப்
பொருளாதார நெருக்கடி, பெற்றோரின் கல்வியறிவின்மை மற்றும் மாணவர்களின் வீட்டுக்கற்றல்
சூழலில் முறையான கண்காணிப்பின்மை போன்றவை மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைக் குறைக்கும்
காரணிகளாக அமைகின்றன.
6. வழிகாட்டல்களும் பரிந்துரைகளும்
கிண்ணியா கல்வி வலயத்தை இலங்கையின்
100 கல்வி வலயங்களில் முன்மாதிரியான நிலைக்கு உயர்த்த பின்வரும் நடைமுறைச் சாத்தியமான
நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்:
நிர்வாகக் கட்டமைப்பை மறுசீரமைத்தலும் பொறுப்புக்கூறலும்
● வலய
மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகளின் அசமந்தப் போக்கைக் களைந்து, தெளிவான இலக்குகளுடன்
கூடிய செயல்திறன் அடிப்படையிலான நிர்வாக முறையை (Performance-based
Administration) அறிமுகப்படுத்தல்.
● ஒவ்வொரு
பாடசாலைக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் வலயக் கல்வி அதிகாரிகள் நேரில் விஜயம் செய்து,
கற்பித்தல் தரத்தையும் மாணவர் அடைவு மட்டங்களையும் தீவிரமாகக் கண்காணிக்கும் வலுவான
மேற்பார்வைக் கட்டமைப்பை உருவாக்குதல்.
● வலய
மட்டத்தில் பாடவாரியான மற்றும் கோட்டவாரியான நடைமுறைச் சாத்தியமான மூலோபாயத் திட்டங்களை
(Strategic Action Plans) வகுத்து, அவற்றின் முன்னேற்றத்தை மாதந்தோறும் மதிப்பீடு செய்தல்.
ஆரம்பக் கல்வியை வலுப்படுத்தல் (Strengthening Primary Education)
● தரம்
1 முதல் 5 வரையான வகுப்புகளில் மனப்பாடம் செய்யும் முறையைத் தவிர்த்து, அடிப்படை வாசிப்பு,
கணிதத் திறன்களைக் கட்டாயமாக உறுதிப்படுத்தும் வசேட செயற்திட்டங்களை
(Remedial Teaching) நடைமுறைப்படுத்தல்.
● தரம்
5 புலமைப்பரிசில் பரீட்சையை வெறும் போட்டிப் பரீட்சையாக மட்டும் பார்க்காமல், அனைத்து
மாணவர்களும் குறைந்தபட்சம் 70 புள்ளிகளுக்கு மேல் பெறுவதை இலக்காகக் கொண்டு கற்பித்தல்.
பாடரீதியான ஆசிரியர் வளத்தைச் சமப்படுத்தல்
● கணிதம்,
விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களை வலயத்தின் அனைத்துக்
கோட்டங்களுக்கும் (குறிப்பாகக் குறிஞ்சாக்கேணி மற்றும் முள்ளிப்பொத்தானை) சமமான முறையில்
பகிர்ந்தளித்தல்.
பின்தங்கிய பாடசாலைகளுக்கான சிறப்பு வழிகாட்டல்
● க.பொ.த
சாதாரண தரத்தில் 50% க்கும் குறைவான தேர்ச்சி வீதம் கொண்ட பாடசாலைகளை அடையாளங் கண்டு,
வலயக் கல்விப் பணிமனையினால் விசேட மேற்பார்வை மற்றும் மாதிரிப் பரீட்சைத் திட்டங்களைச்
செயற்படுத்தல்.
சமூக மற்றும் பெற்றோர் பங்களிப்பு
● பாடசாலை
அபிவிருத்திச் சங்கங்கள் (SDC) மற்றும் பழைய மாணவர் சங்கங்கள் ஊடாகப் பெற்றோருக்கான
விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல்.
● மாணவர்களின்
இடைவிலகலைக் கட்டுப்படுத்தவும் வரவை உறுதிப்படுத்தவும் சமூகக் கண்காணிப்புக் குழுக்களை
அமைத்தல்.
7. முடிவுரை (Conclusion)
இலங்கையின் கல்வி வரைபடத்தில்
கிண்ணியா கல்வி வலயம் தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப்
பெறுபேறுகளில் தொடர்ச்சியாக இறுதி இடங்களில் இருப்பது கவலையளிக்கும் ஒன்றாயினும், இது
மாற்றியமைக்க முடியாத ஒன்று அல்ல. 2023 ஆம் ஆண்டில் இரு பரீட்சைகளிலுமே வலயம் முன்னேறியமை,
முறையான திட்டமிடல் இருந்தால் கிண்ணியாவால் சாதிக்க முடியும் என்பதற்கான தெளிவான சான்றாகும்.
பெரும்பான்மை முஸ்லிம்
சமூகத்தைக் கொண்ட இவ்வலயத்தில், கல்வியில் ஏற்படும் முன்னேற்றமே அம்மாணவர்களின் எதிர்கால
சமூக, பொருளாதார மற்றும் தொழில்சார் உரிமைகளை உறுதிசெய்யும் பிரதான காரணியாகும். எனவே,
வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட்டால், கிண்ணியா கல்வி வலயத்தை இலங்கையின் முன்னணி வலயங்களில்
ஒன்றாக மாற்றுவது சாத்தியமே!
.png)
