ஆசிரியர் சேவை தடைதாண்டல் பரீட்சை வினாப் பத்திரக் கட்டமைப்பு மாற்றம்: கல்வி அமைச்சுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி!


 


ஆசிரியர் சேவை தடைதாண்டல் பரீட்சை வினாப் பத்திரக் கட்டமைப்பு மாற்றம்: கல்வி அமைச்சுக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி!


இலங்கை ஆசிரியர் சேவைக்கான வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையின் வினாப் பத்திரக் கட்டமைப்பில் கல்வி அமைச்சு திடீர் மாற்றம் மேற்கொண்டுள்ளதற்கு, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தங்களது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இன்று ஊடகங்களைச் சந்தித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோஸப் ஸ்டாலின், இந்தத் தன்னிச்சையான முடிவை கல்வி அமைச்சு உடனடியாக மீளப்பெற வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய ரீதியில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

வினாப் பத்திரக் கட்டமைப்பு மாற்றம்

கடந்த 2025 ஜூலை 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஆசிரியர் சேவை வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சைக்கான வினாப் பத்திரக் கட்டமைப்பு பின்வருமாறு அமைந்திருந்தது:

* *வினாப் பத்திரம் 1:* பல்தேர்வு வினாக்கள் (MCQ) – 01 மணித்தியாலம்
* *வினாப் பத்திரம் 2:* சுருக்க விடை வினாக்கள் (Short Answer) – 02 மணித்தியாலங்கள்

ஆனால், கடந்த 2026.07.08 அன்று கல்வி அமைச்சு திடீரென இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 4 ஆவது திருத்தமாகப் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டது. அதன்படி, வினாப் பத்திரக் கட்டமைப்பு பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது:

* *வினாப் பத்திரம் 1:* பல்தேர்வு வினாக்கள் (MCQ) – 01 மணித்தியாலம்
* *வினாப் பத்திரம் 2:* கட்டமைப்பு வினாக்கள் (Structured) – 02 மணித்தியாலங்கள்

ஏற்கனவே ஆசிரியர் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் விரிவாகக் கலந்துரையாடி எட்டப்பட்ட தீர்மானத்தை கல்வி அமைச்சு தன்னிச்சையாக மாற்றியுள்ளதாக ஜோஸப் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

> "ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பை கல்வி அமைச்சுக்குத் தேவையானவாறு, தன்னிச்சையாக மாற்றுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கியது யார்?" என அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.


இந்தத் திடீர் மாற்றத்தை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி கல்வி அமைச்சுக்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சார்பில் எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின், கடுமையான தொழிற்சங்கப் போராட்டங்கள் வெடிக்கும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post