பல்கலைக்கழக அனுமதி 2025/2026: 'Not Selected' என்றால் என்ன? அடுத்து என்ன செய்ய வேண்டும்?

 பல்கலைக்கழக அனுமதி 2025/2026: 'Not Selected' என்றால் என்ன? அடுத்து என்ன செய்ய வேண்டும்?


- ஜெஸார் ஜவ்பர் -



2025/2026 கல்வி ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான Z-score வெட்டுப்புள்ளிகள் (Cut-off Marks) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) வெளியிடப்பட்டுள்ளன.


பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்

https://1teachmore.lk/university-selection-results-2025-2026/


இவ்வேளையில், பல்கலைக்கழக அனுமதியை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!


அதேசமயம், இணையதளத்தில் தனது முடிவுகளைப் பார்க்கும்போது அல்லது உங்களது கைத்தொலைபேசிக்கு வந்திருந்த 'Not Selected' என்ற செய்தியைக் கண்டு கவலையோடும் குழப்பத்தோடும் இருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல் பதிவு இதுவாகும்.


'Not Selected' என்ற செய்தி உங்களுக்கு வந்திருந்தால், உங்கள் உயர்கல்வி மற்றும் எதிர்காலக் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்று அர்த்தமா?


நிச்சயமாக இல்லை!


1. 'Not Selected' என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) ஒவ்வொரு வருடமும் அரச பல்கலைக்கழகங்களில் உள்ள வரையறுக்கப்பட்ட இடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்காகச் சில கொள்கைகளையும் ஒழுங்குமுறைகளையும் நடைமுறைப்படுத்துகிறது.


பொது உள்ளீர்ப்பு (Normal Intake):

இது பல்கலைக்கழக அனுமதியின் முதன்மைச் செயல்பாடாகும். இது மாணவர்கள் பெற்ற Z-புள்ளிகள் (Z-score) மற்றும் மாவட்ட ரீதியான ஒதுக்கீட்டு அடிப்படையில் இடம்பெறுகிறது.


எனவே, 'Not Selected' என்பது தற்போதைய பொது உள்ளீர்ப்பின் முதற்கட்ட வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் உங்களுக்குப் பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையே குறிக்கிறது. இது உங்களது திறமைக்கான சான்றிதழ் அல்ல; மாறாக, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள குறைந்தளவிலான இட ஒதுக்கீட்டின் விளைவே ஆகும்.


2. 'Not Selected' வந்தவுடன் அடுத்து நீங்கள் செய்ய வேண்டியவை

அடுத்த பரீட்சை வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் (Next Attempt)

உங்களுக்கு க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு இன்னும் ஒரு சந்தர்ப்பம் (2nd அல்லது 3rd Attempt) இருக்குமாயின், கட்டாயமாகதனைப் பயன்படுத்துங்கள்.


கடந்த காலத்தில் தவறவிட்ட பாடப்பகுதிகளை அடையாளம் காணுங்கள்.


Z-புள்ளியை உயர்த்தக்கூடிய திட்டமிட்ட பாடத்திட்டத்தை வகுத்து உடனடியாகப் படிக்கத் தொடங்குங்கள்.


ஒரு முயற்சி தோல்வியில் முடிந்தாலும், அடுத்த முயற்சி உங்களை மேலும் அனுபவமுள்ளவராக மாற்றும்.


3. வெற்றிடங்களை நிரப்புதல் (Filling of Vacancies) - காத்திருங்கள்

பொது உள்ளீர்ப்பில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களில் பதிவை உறுதிப்படுத்துவதில்லை.


இந்தத் தெரிவுக்குப் பின்னர், பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்கள் தம்மை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் பதிவினை மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகப் பதிவு பாடநெறிகளைப் பொறுத்து சற்று தாமதமாகலாம்.


இவ்வாறு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் அனைவரும் பல்கலைக்கழகப் பதிவை மேற்கொள்வதில்லை. இதன் காரணமாக உள்ளீர்க்கப்படும் மாணவர் எண்ணிக்கையில் வெற்றிடங்கள் ஏற்படுகின்றன.


பல்கலைக்கழக பதிவு இடம்பெறாமைக்கான 5 பிரதான காரணிகள்:

முந்தைய வருடப் பதிவு: கடந்த வருடங்களில் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பல்கலைக்கழகப் பதிவினை மேற்கொண்டிருப்பார்கள். அதேநேரம் இம்முறையும் பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்திருப்பார்கள். அவர்களால் மீண்டும் பதிவுகளை மேற்கொள்ள முடியாது.


விருப்பமான பாடநெறி கிடைக்காமை: தற்போது பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், தமக்கு பிடித்தமான பாடநெறி கிடைக்காத போது, அடுத்த தடவை பரீட்சை எழுதி பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிப்பதற்காக இம்முறை தமது பதிவை மேற்கொள்ளாது விடுவர்.


வட்டியற்ற உயர்கல்விக் கடன் திட்டம்: அரச பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக மாணவர்கள் வட்டியற்ற உயர்கல்வி கடன் திட்டத்திற்கு காத்திருக்கின்றனர். அரச பல்கலைக்கழகங்களை விட தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் ட்ரெண்டிங் பாடநெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அவர்கள் காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக பதிவு மேற்கொண்டால் இந்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் பல்கலைக்கழகப் பதிவை மேற்கொள்ளாது விடுகின்றனர்.


வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்: சில மாணவர்கள் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் புலமைப்பரிசில்களைப் பெற்றுச் செல்கின்றனர். அவர்களும் பல்கலைக்கழகப் பதிவை மேற்கொள்வதில்லை.


இரட்டைப் பதிவு மறுப்புக் கொள்கை: வேறு நிறுவனங்களில் பதிவு செய்தவர்களுக்கு பல்கலைக்கழகப் பதிவை மேற்கொள்ள முடியாது. இரட்டைப் பதிவு முறையின் காரணமாக பல்கலைக்கழகப் பதிவு மறுக்கப்படும் கொள்கையை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பின்பற்றுகிறது. பிக்கு பல்கலைக்கழகம், UNIVOTEC, Ocean University, University Colleges போன்ற உயர்கல்வி வாய்ப்புகளுக்கு பதிவு செய்தவர்களுக்கு பல்கலைக்கழகப் பதிவு மறுக்கப்படும்.


இவ்வாறான உயர்கல்வி நிறுவனங்களில் பதிவுகளை மேற்கொண்டவர்களது பட்டியலை குறிப்பிட்ட நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பும். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட மாணவர்களது பல்கலைக்கழகப் பதிவுகள் மறுக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிக்கும்.


வெற்றிடங்களை நிரப்பும் நடைமுறை (Process of Filling Vacancies):


இவ்வாறான பின்னணிகளின் ஊடாக பல மாணவர்கள் பல்கலைக்கழகப் பதிவுகளை மேற்கொள்ள முடியாத நிலை தோன்றும். ஆனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒரு வருடத்திற்கு உள்வாங்க வேண்டிய மாணவர்களின் மொத்த எண்ணிக்கையை அடையும் வரை மாற்று ஏற்பாடுகளைச் செய்யும். இதில் பிரதான ஏற்பாடாக வெற்றிடங்களை நிரப்புதல் (Filling the Vacancies) காணப்படுகிறது.


கணிக்கீடு: பதிவுக்கான இறுதித் திகதி முடிவடைந்த பின்னர் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு பாடநெறிகளுக்கும் உள்ளீர்க்கப்பட வேண்டிய எண்ணிக்கையை UGC கணிப்பிடும்.


மாவட்ட ரீதியான அழைப்பு: மாவட்ட அடிப்படையில் நிரப்ப வேண்டிய எண்ணிக்கையை குறித்த மாவட்டத்தில் அடுத்த நிலையில் விண்ணப்பித்துள்ள மாணவர்களை வெற்றிடங்களை நிரப்புவதற்காக UGC அழைக்கும்.


Z-புள்ளி கவனத்தில் கொள்ளப்படாமை: இதன் போது இஸட் புள்ளிகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படமாட்டாது. விண்ணப்பத்தின் போது தெரிவு செய்துள்ள பாடநெறிகளின் அடிப்படையில் இது இடம்பெறும். இதன் காரணமாக பொது உள்ளீர்ப்பில் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களின் இஸட் புள்ளிகளை விட குறைவான இஸட் புள்ளங்களைக் கொண்டவர்கள் வெற்றிடங்களை நிரப்பும் சுற்றுக்களில் தெரிவு செய்யப்படலாம்.


அடுத்தடுத்த சுற்றுகள்: இவ்வாறு முதலாவது சுற்றில் வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், UGC மீண்டும் மொத்தமாக மாணவர்கள் வெற்றிடங்களைக் கணிப்பிடும். அதனை அடுத்து ஒவ்வொரு பாடநெறிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் விண்ணப்பித்துள்ளவர்களில் அடுத்த நிலையிலுள்ளவர்களைத் தெரிவு செய்து வெற்றிடங்களை நிரப்புமாறு அறிவிக்கும்.


முக்கிய நினைவூட்டல்:

பொது உள்ளீர்ப்பில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அதைவிட வேறு பாடநெறிகள் — வெற்றிடங்களை நிரப்பல் சுற்றுக்களின் மூலம் கிடைக்கக் கூடும்.


பொது உள்ளீர்ப்பில் தெரிவு செய்யப்படாதவர்களும் கூட வெற்றிடங்களை நிரப்பும் கட்டங்களில் தெரிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.


இவ்வாறு முழுமையாக வெற்றிடங்கள் அனைத்தையும் நிரப்பும் வரை இச்செயற்பாடு தொடரும்.


கடந்த கல்வியாண்டில் (2024/2025) சுமார் 9 சுற்றுக்கள் இவ்வாறு நிரப்பப்பட்டன. இருப்பினும் கடந்த வருடம் நிரப்ப முடியாது போன சுமார் 600 வெற்றிடங்கள் வரை இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


எனவே, உங்கள் கனவுகளை அடைந்து கொள்வதற்காக இன்னமும் சந்தர்ப்பம் உள்ளது என்பதை நினைவில் வைத்திருங்கள்.


அடுத்த பதிவில் பல்கலைக்கழக அனுமதிக்கான Appeal அனுப்புதல் தொடர்பாக பார்ப்போம்.

தமிழில் வழிகாட்டல் பதிவுகளைப் பெற்றுக் கொள்ள பின்வரும் வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்:

- ஜெஸார் ஜவ்பர் -

www.edunews.lk

Post a Comment

Previous Post Next Post