5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகள் தடை!
இலங்கையில் 2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு எதிர்வரும் 05ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடையும் வரை இத்தடை அமலில் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில், புலமைப்பரிசில் பரீட்சைக்கான எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுவதோ அல்லது விநியோகிப்பதோ முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், பரீட்சை வினாத்தாள்களுக்குரிய வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துவதும், அவ்வாறான விளம்பரப் பொருட்களைத் தம்வசம் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டிற்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டிள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
