பின்லாந்து கல்வி முறை:அண்மைக்கால நெருக்கடிகளும் மீட்புத் திட்டமும்

 பின்லாந்து கல்வி முறை:அண்மைக்கால நெருக்கடிகளும் மீட்புத் திட்டமும்



-ஜெஸார் ஜவ்பர்-

உலக நாடுகளுக்கெல்லாம் கல்விக்கான மாதிரியாக (Role Model) திகழ்ந்த பின்லாந்து, இன்று தனது வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு நெருக்கடி காலகட்டத்தை கடந்து செல்கிறது. சமத்துவம், சுயாதீனம் மற்றும் தரமான ஆசிரியப் பயிற்சி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பின்லாந்தின் கல்வி அமைப்பு, தற்போது அரசியல் மாற்றங்கள், பொருளாதாரச் சிக்கனம் மற்றும் உலகளாவிய கல்வித் தரவரிசை (PISA) வீழ்ச்சியால் சவால்களை எதிர்கொள்கிறது.

இக்கட்டுரை, பின்லாந்து கல்வி முறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்களையூம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மீட்புத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்கிறது.

பகுதி - 1
ஒரு கல்வி வல்லரசின் எழுச்சி (The Ascent of an Educational Superpower)

1970-களுக்கு வரை ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல சாதாரணமாகவே பின்லாந்தின் கல்வி முறை காணப்பட்டது. இன்று நாம் வியந்து பார்க்கும் கல்வி மாதிரிக்கான விதை 1970 களில் மேற்கொள்ளப்பட்ட பாரிய கல்வி சீர்திருத்தங்களின் பின்னணியில் உருவானது.

பின்லாந்தின் கல்வி முறையின் மிக முக்கிய அம்சங்களை பின்வருமாறு நோக்கலாம்.

1. சமத்துவம் (Equality as a Core Value)

பின்லாந்து தனது கல்வி எழுச்சியின் அடித்தளமாக "திறமையை" (Meritocracy) விட “சமத்துவத்தை" (Equity) முன்னிறுத்தியது.

செல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்கும், சாதாரண தொழிலாளியின் பிள்ளைக்கும் ஒரே தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் அந்நாடு உறுதியாக இருந்தது.

கல்வியின் முழு அதிகாரத்தையும் அரசாங்கம் கொண்டுள்ள ஒரு பொதுக் கல்வி முறையை அவர்கள் உருவாக்கினார்கள். இதன் மூலம் சமூகப் படிநிலைகள் வகுப்பறைக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. கல்வியின் தரத்தை அரசாங்கம் தீர்மானிக்கும் திசையை நோக்கி நகர்த்துவதற்கான வழிகள் உருவாகின.

2. ஆசிரியப் பணியின் புனிதமும் தகுதியும்

பின்லாந்து கல்வி எழுச்சியில் மிக முக்கியமானது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தாகும்.
1979 முதல், அனைத்து ஆரம்ப வகுப்பு ஆசிரியர்களும் கட்டாயம் கல்வியில் முதுமாணிப் பட்டம் (Master's Degree) பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இது ஆசிரியர்களுக்கான கோட்பாட்டு அறிவை உறுதிப்படுத்தியது.

பிரயோக அறிவை உறுதிப்படுத்துவதற்கான பரிட்சை முறை ஒன்றை பின்லாந்து வலுப்படுத்தியது. பின்லாந்தில் ஆசிரியர் ஆவதற்கான பரீட்சையில் சித்தியடைவது என்பது மருத்துவர் அல்லது வழக்கறிஞர் ஆவதற்கான பரீட்சையில் சித்தியடைவதை விட கடினமானது என்பர். இதன் மூலம் இந்தப் பணிக்கு மிகச் சிறந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்கான திட்டம் உறுதியானது.

இந்த பயிற்சி, ஆசிரியர்கள் மீது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஒரு மாறாத நம்பிக்கையை (Trust) ஏற்படுத்தியது. இதனால் மேற்பார்வையாளர்கள்" (Inspectors) என்ற கட்டமைப்பு அங்குத் தேவைப்படாமல் போனது.

3. தரவரிசைக்கு அப்பாற்பட்ட கற்றல் (Beyond Rankings)

பின்லாந்து தனது பின்பற்றிய தனித்துவமான அணுகுமுறைகள் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

• பின்லாந்துக் கல்வி முறையில் 16 வயது வரை தேசிய அளவிலான எந்த ஒரு தரப்படுத்தல் பரீட்சையும் கிடையாது.

• ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான பாடவேளைகளை பின்லாந்து கல்வி அமைப்புக் கொண்டிருந்தது.

• ஒவ்வொரு மாணவரும் தனிப்பட்ட வகையில் மதிப்பீடு செய்யப்பட்டனர். ஒரு மாணவன் பின்தங்கும் அறிகுறி தெரிந்தால், உடனடியாக ஒரு பிரத்யேக ஆசிரியர் (Special Education Teacher) நியமிக்கப்பட்டு அவருக்கு உதவும் செயன்முறை ஒன்றை கல்வி அமைப்பு கொண்டிருந்தது.

இந்த ஏற்பாடுகளின் விளைவாக கல்வி அடைவூகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின.

PISA மூலம் உலக அரங்கில் அங்கீகாரம்

2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் PISA (Programme for International Student Assessment) முடிவுகள் வெளியானபோது உலகம் அதிர்ச்சியடைந்தது. ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் மாணவர்களைக் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கிப் பெற்றுக்கொள்ள முடியாத முடிவுகளை, பின்லாந்து மாணவர்கள் மிக எளிதாகப் பெற்றிருந்தனர்.
வாசிப்பு, கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய மூன்றிலும் பின்லாந்து முதலிடத்தை அல்லது முன்னணியைப் பிடித்தது.

இந்த "பின்லாந்து அற்புதம்" (Finnish Miracle) உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களை அந்நாட்டை நோக்கி ஈர்த்தது.

PISA என்பது Programme for International Student Assessment என்பதன் சுருக்கமாகும். இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பால் (OECD - Organisation for Economic Co-operation and Development) மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு சர்வதேச பரீடசையாகும்.

இது மாணவர்களின் பாடப்புத்தக அறிவைச் சோதிப்பதற்குப் பதிலாக தாங்கள் கற்ற கல்வியை நிஜ வாழ்க்கையில் எத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்துகிறார்கள் (Application of Knowledge) என்பதை அளவிடுகிறது.

PISA முக்கியமாக மூன்று துறைகளில் மாணவர்களின் திறனை மதிப்பிடுகிறது:

1. வாசிப்புத் திறன் (Reading Literacy): ஒரு உரையையோ அல்லது செய்தியையோ வாசித்து, அதன் உட்பொருளைப் புரிந்துகொண்டு சுயமாகச் சிந்திக்கும் திறன்.

2. கணிதத் திறன் (Mathematical Literacy): அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களைக் கணித ரீதியாக அணுகித் தீர்வு காணும் திறன்.

3. விஞ்ஞானத் திறன் (Scientific Literacy): விஞ்ஞான உண்மைகளைப் புரிந்துகொண்டு. தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் திறன்.

இப்பரீட்சை 2000 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது (கோவிட் காரணமாக 2021 இல் நடக்க வேண்டிய பரீட்சை 2022 இல் நடந்தது). இப் பரிட்சை முடிவுகளை வைத்தே பல நாடுகள் தங்களின் கல்வித் திட்டத்தையே (Curriculum) மாற்றி அமைக்கின்றன. பின்லாந்து உலகப் புகழ் பெற்றதன் பின்னணியில் இப்பரீட்சை மிக முக்கிய அடையாளமாகத் திகழ்ந்தது.

"கல்வியின் மக்கா" - ஒரு பூகோள மாதிரி
இந்த எழுச்சிக் காலத்தில், பின்லாந்து ஒரு தேசமாக மட்டும் பார்க்கப்படவில்லை; அது ஒரு சிந்தாந்தமாக கொள்கையாக மாறியது.

"குறைவாகக் கற்பித்தல், அதிகமாகக் கற்றல்" (Teach less, Learn more) என்ற தாரக மந்திரம் பிரபலமானது. இது உலகளாவிய நாடுகளில் கல்விக் கொள்கைமீது தாக்கம் செலுத்தத் தொடங்கியது.

இதனை அடுத்து, அமெரிக்கா முதல் ஆசியா வரை பல நாட்டுத் தூதுக்குழுக்கள் பின்லாந்தின் வகுப்பறைகளில் அமர்ந்து, அந்த மாயாஜாலத்தைக் கற்க வரிசையில் நின்றன.

பகுதி - 2

2. பின்லாந்து கல்வி மாதிரி எதிர்கொள்ளும் சவால்கள்
ஒரு காலத்தில் மற்ற நாடுகளுக்குப் பாடமெடுத்த பின்லாந்து, இன்று தனது சொந்தக் கல்வி முறையை எங்கே தவறிவிட்டோம் என்று சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

1. 1. PISA தரவரிசையில் சரிவு
2006 ஆம் ஆண்டிற்குப் பிறகு, பின்லாந்தின் கல்விச் சாதனைப் பயணம் ஒரு சரிவை நோக்கிச் நகரத் தொடங்கியது. குறிப்பாக 2022 PISA முடிவுகள் அந்நாட்டிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளன.

பின்லாந்தின் கல்வி சவால்களைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள, 2006 முதல் 2022 வரையிலான PISA (Programme for International Student Assessment) தரவரிசைப் புள்ளிகள் மிக முக்கியமான ஆதாரங்களாகும்.

கீழே உள்ள அட்டவணை, பின்லாந்து மாணவர்கள் கணிதம், வாசிப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகிய மூன்று துறைகளிலும் பெற்ற சராசரிப் புள்ளிகளின் சரிவைக் காட்டுகிறது.

பின்லாந்தின் PISA புள்ளிவிவரங்கள் (2006 – 2022)

PISA பரீட்சையில் ஒரு நாட்டின் சராசரிப் புள்ளிகள் 500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து ஒரு காலத்தில் இந்தச் சராசரியை விட வெகு உயரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அவதானங்கள்
கணிதத் துறையில் 2006-ல் 548 ஆக இருந்த புள்ளிகள் 2022-ல் 484 ஆகக் குறைந்துள்ளது. இது 64 புள்ளிகள் வீழ்ச்சியாகும். PISA அளவீட்டின்படி, 30-40 புள்ளிகள் குறைவது என்பது ஒரு வருட கற்றல் இழப்பிற்குச் சமம். எனவே, பின்லாந்து மாணவர்கள் சுமார் 1.5 முதல் 2 வருட கற்றல் திறனை இழந்துள்ளனர் எனலாம்.

2022-ல் முதன்முறையாக கணிதம் மற்றும் வாசிப்புத் திறனில் பின்லாந்து தனது முந்தைய உயர் தரத்தை இழந்து, OECD சராசரியை நெருங்கியுள்ளது.

2. அதீத டிஜிட்டல் மயமாக்கல் ஏற்படுத்தியுள்ள சிக்கல்
நவீனமடைதல் என்ற பெயரில் வகுப்பறைகளுக்குள் புகுத்தப்பட்ட தொழில்நுட்பம், கற்றலுக்கு உதவியதை விடக் கேடு விளைவித்ததே அதிகம் எனத் தற்போது உணரப்படுகிறது.

• கவனச் சிதறல் (Distraction)
ஒவ்வொரு மாணவர் கையிலும் வழங்கப்பட்ட மடிக்கணினிகளும் டெப்லெட்டுகளும் வகுப்பறையை ஒரு கற்றல் களமாக வைத்திருப்பதற்குப் பதிலாக, சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான தளமாக மாற்றின. இது மாணவர்களின் ஒருமுகப்படுத்தும் திறனை (Concentration) வெகுவாகப் பாதித்துள்ளது.

• மேலோட்டமான வாசிப்பு (Skimming)

காகிதப் புத்தகங்களை வாசிக்கும்போது கிடைக்கும் “ஆழ்ந்த கற்றல்" (Deep Learning), திரைகளில் வாசிக்கும்போது கிடைப்பதில்லை. மாணவர்கள் தகவல்களை மேலோட்டமாகத் தேடி நகரும் (Scroll) பழக்கத்திற்கு அடிமையானதால், சிக்கலான பாடக் கருத்துகளைப் புரிந்து கொள்ளும் திறன் மழுங்கியுள்ளது.

• எழுத்துத் திறனின் வீழ்ச்சி
தட்டச்சு செய்வதில் காட்டிய ஆர்வம், கையெழுத்துப் பயிற்சியைக் குறைத்துவிட்டது. இது மாணவர்களின் மூளைக்கும் கைகளுக்குமான ஒருங்கிணைப்பையூம், தர்க்க ரீதியான விளக்கங்களை எழுதும் திறனையும் பாதித்துள்ளது.

3. சுயவழிக் கற்றல் (Self-Directed Learning) அணுகுமுறையின் தாக்கம்
பின்லாந்தின் பாடத்திட்டத்தின்படி, மாணவர்கள் தங்களின் கற்றல் இலக்குகளைத் தாங்களே தீர்மானிக்கும் 'சுயவழிக் கற்றல்' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது ஒரு நவீன அணுகுமுறையாகத் தோன்றினாலும், நடைமுறையில் பெரும் சமூக இடைவெளியை உருவாக்கியுள்ளது.

5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்குத் தங்களைத் தாங்களே வழிநடத்திக்கொள்ளும் முதிர்ச்சி இருப்பதில்லை. குறிப்பாக, கற்றல் குறைபாடுகள் கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியரின் நேரடி வழிகாட்டல் (Direct Instruction) இல்லாமல் போனதன் அடிப்படையில் அவர்களைக் கல்விப் பாதையிலிருந்து அது அந்நியப்படுத்தியுள்ளது.

பின்லாந்து கல்வியின் ஆன்மாவே “சமத்துவம்" தான். ஆனால், இந்தச் சுயவழிக் கற்றல் முறையில், கற்றலில் ஆர்வம் கொண்ட செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் முன்னேறிச் செல்ல, போதிய பின்புலம் இல்லாத மாணவர்கள் பின்தங்க ஆரம்பித்தனர். இதனால், மாணவர்களின் சமூக-பொருளாதாரப் பின்னணி அவர்களின் அடைவுப் புள்ளிகளைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியுள்ளது. இது பின்லாந்து கல்வி அமைப்பின் அடித்தளத்தையே கேள்விக்குட்படுத்தியுள்ளது.

ஆசிரியர் என்பவர் வெறும் 'வழிகாட்டி' (Facilitator) மட்டுமே என்ற நிலை, வகுப்பறையின் ஒழுக்கத்தையும் அடிப்படை அறிவூப் பரிமாற்றத்தையும் பாதித்துள்ளது. ஒரு அமைதியான வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதன் அவசியத்தை இந்தப் பின்னடைவு மீண்டும் நிரூபித்துள்ளது.

4. நிதி நெருக்கடியும் சிதைக்கப்படும் கல்விக்கட்டமைப்பும் (The Economic Erosion)

பின்லாந்து கல்வி முறையின் கட்டமைப்பைச் சிதைக்கும் மற்றொரு காரணியாகத் தற்போதைய நிதி நெருக்கடி பார்க்கப்படுகிறது. 2023-இல் பொறுப்பேற்ற பெட்டரி ஓர்போ (Petteri Orpo) தலைமையிலான வலதுசாரி கூட்டணி அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்வதாகக் கூறி கல்வித் துறைக்கு வழங்கி வந்த நிதி ஆதாரங்களைக் கணிசமாகக் குறைத்து வருகிறது.

அ) உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை மீதான நிதி முடக்கம்
பின்லாந்து துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ரீக்கா புர்ரா (Riikka Purra), நாட்டின் கடன் சுமையைக் குறைக்கக் கல்வித் துறையில் சில “கடுமையான முடிவுகளை" எடுத்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘நிதி குறியீட்டு உயர்வு’ (University Funding Index) முடக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக, 2026-ஆம் ஆண்டில் சுமார் €59 மில்லியன் யூரோக்களும், 2027-இல் €112 மில்லியன் யூரோக்களும் உயர்கல்வி வரவுசெலவுத் திட்டத்திலிருந்து குறைக்கப்படவுள்ளன.

இந்த நிதி வெட்டுக்கள் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுகளை முடக்குவதுடன், பல்கலைக்கழகங்களில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் வழிவகுக்கும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஆ) தேசிய கல்வி முகமை (EDUFI) கலைப்பு
பின்லாந்து கல்வி வரலாற்றில் மிக அதிரடியான முடிவாகக் கருதப்படுகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவில் தேசிய கல்வி முகமையை (Finnish National Agency for Education - EDUFI) கலைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் கல்வி மற்றும் கலாசார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டல் வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுமார் €1 பில்லியன் யூரோக்களை சேமிப்பதும், நிர்வாகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களைக் களைவதும் சாத்தியம் என அரசாங்கம் கூறுகிறது.

இதுவரை கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பாடத்திட்ட வடிவமைப்பு, இனி நேரடியாக அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படும். இது கல்வியில் அரசியல் தலையீட்டை (Political Interference) அதிகரிக்கும் என்றும், ஆசிரியர்களின் சுயாதீனத்தை பறிக்கும் செயல் என்றும் விமர்சிக்கப்படுகிறது.

இ) சர்வதேச மாணவர்களுக்கான நிதிச் சுமைகள்
ஒரு காலத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வியை வாரி வழங்கிய பின்லாந்து, இப்போது தனது கொள்கையை முற்றாக மாற்றியுள்ளது.

"கல்வி என்பது ஒரு பொதுச் சேவை" என்ற கொள்கையிலிருந்து பின்லாந்து விலகி, அதை ஒரு “வணிகப் பொருளாக" மாற்றத் தொடங்கியுள்ளது.

1. ஏற்கனவே அமுலில் இருந்து வந்த முழு பாடநெறிக் கட்டணச் சலுகை 2026 முதல் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத மாணவர்களுக்குக் முற்றாக நீக்கப்படுகின்றன.

2. ஒரு மாணவர் பின்லாந்தில் தங்குவதற்குத் தனது வங்கிக் கணக்கில் காட்ட வேண்டிய மாத வருமானத் தகுதி €560-லிருந்து €850-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

3. இதன் காரணமாக 2026 தொடக்கத்தில் சர்வதேச மாணவர் விண்ணப்பங்களில் சுமார் 27% சரிவு ஏற்பட்டுள்ளது. இது பின்லாந்தின் அறிவுசார் பொருளாதாரத்திற்கு (Brain Gain) ஒரு சரிவுப் புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது.

5. கல்வித் துறையில் அரசியல் மற்றும் சித்தாந்த மோதல்கள் (Political and Ideological Conflicts)

பின்லாந்தின் கல்வி முறை இதுவரை சந்தித்த சவால்களில் மிக நுணுக்கமானது இந்த சித்தாந்த அல்லது கொள்கை மோதலாகும். கல்விக்கும் அரசியலுக்கும் இடையில் இருந்த நீண்டகால இடைவெளி இப்போது குறைந்து வருகிறது.

அ) "Woke" சித்தாந்த எதிர்ப்பு மற்றும் பாடத்திட்ட விமர்சனம்
நிதியமைச்சர் ரீக்கா புர்ரா மற்றும் அவரது கட்சியினர், தற்போதைய பாடத்திட்டங்கள் மாணவர்களுக்குப் பாடங்களை விடவும் "முற்போக்குச் சித்தாந்தங்களை" அதிகம் போதிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

Woke Ideology என்பது சமூகத்தில் நிலவும் இனவாதம், பாலின வேறுபாடு, ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் (Woke) இருப்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கருத்தியலாகும்; இது ஆரம்பத்தில் அமெரிக்காவின் கருப்பின மக்களிடையே விழிப்புணர்வு வாசகமாகத் தோன்றி, இன்று LGBTQ+ உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் நலன் என விரிவடைந்துள்ள போதிலும், விமர்சகர்கள் இதனைத் தீவிர அடையாள அரசியலாகவூம் பாரம்பரிய விழுமியங்களுக்கு எதிரானதாகவும் கருதுகின்றனர்.

பாலினச் சமத்துவம், பன்முகத்தன்மை மற்றும் உலகளாவிய குடிமைப்பண்பு (Global Citizenship) போன்ற கருத்துக்களுக்கு வழங்கப்படும் அதீத முக்கியத்துவம், அடிப்படைப் பாடங்களான மொழி மற்றும் கணிதத்தின் தரத்தைச் சிதைத்துவிட்டதாக தற்போதைய அரசாங்கம் வாதிடுகிறது.

ஆ) தேசியவாதம் எதிர் சர்வதேசமயமாதல்
பின்லாந்தின் கல்வி எப்போதும் ஒரு "உலகளாவிய குடிமகனை" (Global Citizen) உருவாக்குவதையே இலக்காகக் கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் இது "தேசியவாத" கண்ணோட்டத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது.

சர்வதேச மாணவர்களைக் கவர்வதற்காகப் பல பல்கலைக்கழகங்களில் ஆங்கில வழிப் படிப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. ஆனால், தற்போது பின்னிஷ் (Finnish) மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது.

புலம்பெயர்ந்த பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் மேலதிகக் கல்விச் சலுகைகள், நாட்டின் வளங்களை விரயம் செய்வதாக வலதுசாரி கட்சிகள் விமர்சிக்கின்றன. இது கல்விச் சமத்துவத்தைப் பேணுவதில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது.

இ) கல்வி சுயாட்சி (Autonomy) மீதான தாக்குதல்
பின்லாந்து கல்வி முறையின் ஆன்மாவாகக் கருதப்படுவது ஆசிரியர்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட சுயாதீன அதிகாரம் ஆகும்.

தேசிய கல்வி முகமையை (EDUFI) கலைத்துவிட்டு கல்வி நிர்வாகத்தை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சி, ஒரு நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்கப்படவில்லை. இது கல்வி முறையில் அரசியல் தலையீட்டை உறுதிப்படுத்தும் ஒரு நகர்வாகவே கல்வியாளர்களால் பார்க்கப்படுகிறது.

பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்கு இருந்த சுதந்திரம் பறிக்கப்பட்டு, அரசாங்கத்தின் சித்தாந்தங்களுக்கு ஏற்ப அவை மாற்றியமைக்கப்படுமோ என்ற அச்சம் ஆசிரியர் சங்கங்களிடையே எழுந்துள்ளது.

ஈ) கல்வி மற்றும் பொருளாதாரத்தின் முரண்பாடு
அரசாங்கம் கல்வியை ஒரு "பொருளாதாரக் கருவியாக" மட்டுமே பார்க்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சமூக விஞ்ஞானம் மற்றும் கலைப் பாடங்களுக்கான நிதி குறைக்கப்பட்டு, சந்தைக்குத் தேவையான தொழில்முறைப் படிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவது கல்வியின் ஆழத்தைக் குறைத்துவிடும் என அஞ்சப்படுகிறது.
பின்லாந்தின் No child left behind என்ற சமத்துவக் கொள்கை, இப்போது “திறமையானவர்களுக்கு மட்டும் முன்னுரிமை" என்ற போட்டி மனப்பான்மை கொண்ட கொள்கையாக மாறி வருவதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சுருக்கமாகக் கூறின், பின்லாந்து கல்வி முறை இன்று தாராளமயக் கொள்கைகளுக்கும் (Liberal Values) பழமைவாதத் தேசியவாதத்திற்கும் (Conservative Nationalism) இடையிலான ஒரு பெரும் சித்தாந்தப் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது. இந்த மோதல் பின்லாந்தின் வகுப்பறைகளில் கற்பிக்கப்படும் உள்ளடக்கத்தையும், ஆசிரியர்களின் சுதந்திரத்தையும் நேரடியாகப் பாதிக்கிறது.

பகுதி - 3

பின்லாந்தின் மீண்டெழும் முயற்சி: கல்வி மீட்புத் திட்டம் (Education Recovery Plan)

துணைப் பிரதமர் ரீக்கா புராவின் கடுமையான விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரதமர் பெட்டெரி ஒர்போ (Petteri Orpo) தலைமையிலான அரசாங்கம் கல்வித் தரத்தை உயர்த்த மேற்கொள்ளும் "2025 மீட்பு மற்றும் மேம்பாட்டு உத்தி" (2025 Recovery and Development Strategy) குறித்த புதிய பகுதியை கீழே விரிவாகக் காணலாம்.

கல்வி மீட்பு மற்றும் அபிவிருத்தி உத்தி 2025 (Education Recovery & Development Strategy 2025)

பின்லாந்து கல்வி முறை எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க, 2025-ஆம் ஆண்டிற்கான வரவுசெலவூத் திட்டத்தில் சுமார் €8.45 பில்லியன் யூரோக்களை அரசு ஒதுக்கியூள்ளது. இது வெறும் நிதி ஒதுக்கீடு மட்டுமல்லாமல், கட்டமைப்பைச் சீரமைப்பதற்கான ஒரு முழுமையான திட்டமாகும்.

1. அடிப்படைத் திறன்களை வலுப்படுத்துதல்
PISA முடிவூகளின் சரிவைச் சரிசெய்ய, ஆகஸ்ட் 2025 முதல் மாணவர்களின் கற்றல் நேரத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது

• பாடவேளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

1 மற்றும் 2 ஆம் வகுப்பு வரை மொழிப் பாடங்களுக்கு (பின்னிஷ் அல்லது ஸ்வீடிஷ்) வாரத்திற்கு இரண்டு மேலதிக மணிநேரங்களும், 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை கணிதப் பாடத்திற்கு ஒரு மேலதிக மணிநேரமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு மொழிகளுக்கான முக்கியத்துவமும் கணித பின்னடைவை சீர்செய்வதற்கும் ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்படுகிறது.

• கற்றல் ஆதரவு திட்டம் அமுலாகிறது
ஆரம்பக் கல்வி முதல் இடைநிலை வரை மாணவர்களுக்குத் தேவைப்படும் கற்றல் உதவிகளை (Learning Support) முன்கூட்டியே கண்டறிந்து வழங்க ஒரு ஒருங்கிணைந்த புதிய முறை ஆகஸ்ட் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

2. தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவூ (AI)
டிஜிட்டல்மயமாகலின் சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், நவீனத் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த பின்லாந்து திட்டமிட்டுள்ளது:

• AI பயன்பாடு தொடர்பான வழிகாட்டி வெளியீடு
மார்ச் 2025 இல், கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி முகமை (EDUFI) இணைந்து கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) பாதுகாப்பாகவூம், புதுமையாகவூம் பயன்படுத்துவதற்கான தேசிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

• ஸ்மார்ட்போன் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டுள்ளது
கற்றல் அல்லது மருத்துவத் தேவைகளுக்காகத் தவிர, பாடசாலை நேரங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ஆகஸ்ட் 2025 முதல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது. கற்றலுக்குப் பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய ஒழுங்கு விதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கற்றலுக்குத் தேவையற்ற டிஜிட்டல் செயலிகள் முடக்கப்பட்டு, ஆசிரியரின் நேரடி வழிகாட்டலில் மட்டுமே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பாடவேளையில் திரைகளைப் பார்க்கும் நேரம் (Screen Time) முறைப்படுத்தப்பட்டு, அது மாணவர்களின் ஆரோக்கியத்தோடு ஒப்பிடப்படுகிறது.

2026 ஆம் கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து, ஆரம்பப் பாடசாலைகளில் (குறிப்பாக 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு) பாடவேளைகளின் போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்த அரசாங்கம் முழுமையாகத் தடை விதித்துள்ளது.

மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கவூம், வகுப்பறையில் கற்றல் சூழலை மேம்படுத்தவூம், சமூக இடைவினைகளை (Social Interaction) அதிகரிக்கவூம் இந்தத் தடை அவசியமெனக் கருதப்படுகிறது.

"டிஜிட்டல் போதை"யிலிருந்து மாணவர்களை விடுவிப்பதற்கான ஒரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

• பாடப்புத்தகங்களின் மீளுருவாக்கம்
வகுப்பறைகளில் மீண்டும் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. திரைகளில் வாசிப்பதை விட காகிதத்தில் வாசிப்பதே மூளையின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் என தற்போது வலியுறுத்தப்படுகிறது.

• காகித வழிப் பயிற்சிகள் மீண்டும்
கணிதப் பயிற்சிகளைத் திரைகளுக்குப் பதிலாகக் காகிதங்களில் செய்தும், கையால் எழுதியும் பழகுவதற்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

• ஆசிரியரின் தலைமைத்துவத்திற்கு திரும்புதல்
தொழில்நுட்பம் என்பது ஒரு "கருவி" மட்டுமே, அது "ஆசிரியருக்கு மாற்றாக" இருக்க முடியாது என்ற புரிதல் மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது. ஆசிரியர்களின் நேரடி கற்பித்தல் முறையே (Direct Instruction) மாணவர்களின் அடிப்படை அறிவை உறுதிப்படுத்தும் என அரசு கருதுகிறது. இதன் படி ஆசிரியர்கள் நேரடியாகக் கற்பிக்கும் மரபிற்கு மீள்கிறது.

3. உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி சீரமைப்பு
பின்லாந்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் மாறிவரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி கட்டமைப்பில் 2025 ஆம் ஆண்டு சில முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது வெறும் கல்வி சார்ந்த மாற்றம் மட்டுமல்லாமல், நாட்டின் மனிதவளத் தேவையை ஈடுகட்டும் ஒரு பொருளாதார உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

1. பற்றாக்குறை நிலவும் துறைகளில் புதிய இடங்கள்
பின்லாந்து தற்போது சில குறிப்பிட்ட துறைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இதனைச் சரிசெய்ய அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது

• 2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 1886 புதிய கற்கை இடங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இடங்கள் குறிப்பாக சுகாதாரத் துறை மற்றும் ஆரம்பக் கல்வி (Early Childhood Education ) போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை முதிர்ச்சியடைந்து வரும் பின்லாந்தில், தாதியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

2. முதல் முறை மாணவர்களுக்கு முன்னுரிமை (Focus on First-Time Students)
உயர்கல்வி நிதி மாதிரியில் ஒரு புரட்சிகரமான மாற்றம் 2025-இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு பட்டம் பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வேறு பட்டங்களைப் பெறுவதைக் காட்டிலும், ஒரு முறையாவது உயர்கல்வி பெறாத இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதே இதன் நோக்கம்.

முதன்முறையாகப் பட்டம் பெற விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு (First-time degree seekers) அதிக இடங்களை ஒதுக்கும் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கம் கூடுதல் நிதி ஊக்கத்தொகையை வழங்குகிறது. இது இளைஞர்கள் விரைவாக வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதை உறுதி செய்கிறது.

3. தொழிற்கல்வி மற்றும் 2026-க்கான புதிய நிதி மாதிரி:

பின்லாந்தின் தொழிற்கல்வி முறை (Vocational Education and Training) உலகப் புகழ்பெற்றது. இதில் தற்போதைய அரசாங்கம் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துள்ளது.

நிதி மறுசீரமைப்பு செய்யப்பட்டாலும், இளைஞர்களுக்கான தொழிற்கல்வி இடங்கள் குறைக்கப்படாது என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

மாணவர்கள் நீண்ட காலம் படிப்பிலேயே இருக்காமல், தகுந்த திறன்களைப் பெற்று விரைவாக வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் 2026-ஆம் ஆண்டிற்கான புதிய நிதி மாதிரி வடிவமைக்கப்பட்டு வருகிறது.

கல்வி நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம், மாணவர்களுக்கு நேரடி வேலை அனுபவம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

4. சர்வதேசமயமாக்கல் மற்றும் ஆங்கில வழிக் கற்கைகள்
உயர்கல்வியைப் பொறுத்தவரை, பின்லாந்து தனது கதவூகளைச் சர்வதேச அளவில் திறந்தே வைத்துள்ளது.

• 2026 முதல் மாணவர்கள் தங்களது இறுதித் தேர்வூகளை (Matriculation Examination) முழுமையாக ஆங்கிலத்திலேயே எழுத அனுமதிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் 2025 இல் தயார் செய்யப்படுகின்றன. இது சர்வதேசத் திறமையாளர்களை பின்லாந்திற்குள் ஈர்க்கவூம், அவர்களை அங்கேயே பணியில் அமர்த்தவூம் உதவும் ஒரு பாலமாக அமையும் என நம்பப்படுகிறது.

4. சமூக நலன் மற்றும் உள்ளடக்கல் கல்வி:
பாடசாலைச் சூழலை மேம்படுத்தவும், வன்முறையைத் தவிர்க்கவும் விசேட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:

• மாணவர்களிடையே கனிவையும், உள்ளடக்கிய பண்பையூம் வளர்க்க தேசிய அளவில் "Hei!" (ஹலோ!) என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

• பாடசாலை மட்டத்திலான வன்கொடுமைகளைத் (Bullying) தடுக்க €5 மில்லியன் யூரோக்கள் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சிந்தனை:
இலங்கையில் அமுலாகுவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பின் பல அம்சங்கள் பின்லாந்தின் கல்வி முறைமையின் ஆச்சரியங்களிலிருந்து இரவல்பெற்றுள்ளமை இரகசியமல்ல.

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பமான 2018-2029 காலப் பகுதியில் பின்லாந்து கல்வி முறைமை, கல்விக்கான முன்மாதிரியாகக் கருதப்பட்டது உண்மைதான்.

ஆனால் நமது சீர்திருத்தத் திட்டம் அமுலுக்கு வரும் 2026-2027 ஆகும் போது, நாம் எங்கிருந்து திட்டங்களைப் பெற்றோமோ அங்கு அது சவால்களைச் சந்தித்து வருகிறது. நிலமை மாறிவருகிறது.

எல்லாவற்றையும் மிக ஒழுங்குமுறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்லாந்தில் கல்வி முறை சவாலுக்குட்பட்டுள்ளது.

முழுமையான திட்டங்கள் மற்றும் கொள்கை ஏற்பாடுகள் அற்று அன்றாடம் ஏதாவது ஒரு எண்ணத்தை அவ்வப் போது கல்விச் சீர்திருத்தமாகக் கூறி அதனை நடைமுறைப்படுத்துவதற்கு போராடும் எமது கல்வி முறைக்கு என்ன நடக்கப் போகிறது??? என்று அச்சம் தோன்றுவது நியாயமானது.

அவற்றை அடுத்த பகுதியில் விசாரணைக்குட்படுத்த முயற்சிப்போம்.

-ஜெஸார் ஜவ்பர்-

(References):

  • Official Reports and Policy Documents:
    • Finnish National Agency for Education (EDUFI). (2024-2025). Basic Skills Initiative and Strategic Guidelines for Comprehensive Schools. Reports on Digital Learning Side-effects and Recommendations for AI Integration.
    • Ministry of Education and Culture, Finland. (2025). Education Budget 2025 and Structural Reform Reports: Strengthening Basic Skills and Higher Education Funding Models.
    • OECD (2024). PISA Results: Finland Country Note. Programme for International Student Assessment.
    • OECD (2023). Education Policy Outlook: Finland. OECD Publishing> Paris.
    • OECD (2000, 2003, 2006, 2009). PISA Historical Ranking Reports: Finland’s Performance Trends.
    • Publications Office of the European Union. (2025). Finland’s Education Recovery and Development Strategy: Strengthening Equity and Basic Skills.
  • Books and Academic Literature:
    • Ripley, A. (2013). The Smartest Kids in the World: And How They Got That Way. Simon & Schuster. (Comparative analysis including the Finnish education model).
    • Sahlberg, P. (2021). Finnish Lessons 3.0: What Can the World Learn from Educational Change in Finland? Teachers College Press. (Comprehensive study on the evolution and challenges of the Finnish system).
  • News and Media Analysis:
    • Helsinki Times. (2025-2026). Political Analysis on Finnish Education Reforms: Impact of Government Austerity and Ideological Debates.
    • YLE News. (2025). Smartphone Ban in Finnish Schools: A New Era. Analysis of legislative changes regarding digital device use in classrooms.
    • YLE News. (2025-2026). Special Reports on the Abolition Proposal of the National Agency for Education (EDUFI).

கல்வித் துறை பதிவுகள் செய்திகளை தமிழில் பெற்றுக் கொள்ள 

Post a Comment

Previous Post Next Post