24வது DSI SUPERSPORT பாடசாலை கரப்பந்தாட்ட தொடர் அறிவிப்பு



 24ஆவது ஆண்டாக நடைபெறும் DSI SUPERSPORT பாடசாலைகள் மட்ட கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டித் தொடரை ஆரம்பித்து வைப்பது தொடர்பான அறிவிப்பை, கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள கிரான்ட் மெயிட்லண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் DSI உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 


இலங்கை கரப்பந்தாட்ட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்த மதிப்புமிக்க சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்வதற்காக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலைகள் கரப்பந்தாட்ட சங்கத்துடன் இணைவதில், நாட்டின் முன்னணி பாதணிகள் உற்பத்தியாளரான DSI பெருமையடைகின்றது.


1999ஆம் ஆண்டு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த போட்டியை DSI ஆரம்பித்தது. இந்நிகழ்வின் நோக்கம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதும், அவர்கள் திறமைகளை நாட்டின் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வெளிப்படுத்துவதற்கான மேடையை உருவாக்குவதும், அவர்களின் தொழில்சார் வாழ்க்கையினை மேம்படுத்த உதவுவதுமாகும். 


ஆரம்ப காலத்தில் சுமார் 200 அணிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்போட்டி, இன்று சுமார் 400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளது. இந்த வருடம், நாடு முழுவதிலுமிருந்தும் சுமார் 3,500 அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இது தொடர்பில் D. Samson & Sons (Private) Limited நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் துசித ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “DSI SUPERSPORT பாடசாலைகள் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி இலங்கையில் பாடசாலை மட்டத்தில் கரப்பந்தாட்டத்தை வளர்ப்பதில் தொடர்ந்தும் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. 


உள்ளூர் விளையாட்டுக்களுக்கு ஆதரவளிப்பதில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு வர்த்தகநாமம் என்ற ரீதியில், இளம் கரப்பந்தாட்ட வீர, வீராங்கனைகள் வளர்ச்சி கண்டு, திறமைகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இளம் திறமைசாலிகளை இனங்கண்டு, அங்கீகாரம் அளிக்கும் தளத்திற்கு ஆதரவளிப்பது மாத்திரமன்றி, இவ்விளையாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்குப் பங்களிப்பதையிட்டும் நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.   


அவர் மேலும் தெரிவிக்கையில் “சிறுவர்கள் மீது DSI கொண்டுள்ள அர்ப்பணிப்பே இம்முயற்சியின் மையமாகவுள்ளது. பொறுப்புணர்வுமிக்க உள்ளூர் வர்த்தக நாமம் என்ற ரீதியில், அடுத்த தலைமுறையினரை வளர்த்து, அவர்கள் தமது முழுமையான ஆற்றலை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பையும், அனுபவம் மற்றும் தமது பேரார்வத்தை தொடர்வதற்கான மேடையை இளம் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு வழங்கி, அவர்களை வளர்ப்பதில் இச்சுற்றுப்போட்டி அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.” என்றார். 


மாவட்ட மற்றும் தேசிய அளவில் இடம்பெறும் இப்போட்டிகள் பின்வரும் வயதுப் பிரிவுகளில் இடம்பெறுகின்றன. 11 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 13 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 15 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 17 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர், 19 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர். மாவட்டப் போட்டிகள் ஜுன் 10 முதல் ஓகஸ்ட் 10 வரை, வார இறுதி நாட்களில் இடம்பெறவுள்ளன. தேசிய மட்ட போட்டிகள் ஒக்டோபர் 01 - 05 வரை இடம்பெறவுள்ளதுடன், மேலதிக போட்டிகள் ஒக்டோபர் 15 - 19 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இறுதிப் போட்டிகள் நவம்பர் 14, 15ஆம் திகதிகளில் இடம்பெறும்.


இச்சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து DSI காட்சியறைகளிலும் கிடைக்கும். விண்ணப்பங்களை DSI SUPERSPORT உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள QR குறியீடு மற்றும் AVI உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (https://avi.lk/volleyball/) மூலமும் பதிவிறக்கம் செய்யலாம். 


விண்ணப்பதாரர்கள் மேலதிக விபரங்களை, 011-2669344 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அல்லது 25 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை அல்லது பாடசாலை கரப்பந்தாட்ட சங்க செயலாளர் சார்ள்ஸ் திலகரத்ன அவர்களை 0718014414 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அல்லது இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் விங் கமாண்டர் எச்கே அகில டி அல்விஸை srilankavolleyball@yahoo.com எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 2026 மே 20 அன்று அல்லது அதற்கு முன்னதாக உரிய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் (விளையாட்டுகள்) சமர்ப்பித்தல் வேண்டும்.


Post a Comment

Previous Post Next Post