வாய்மொழி முன்வைப்பு, பின்னூட்டல் மற்றும் மதிப்பீட்டாளர்களின் பங்கு: உயர்கல்வியில் தொழில்முறை நடைமுறைகள் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை.


 

வாய்மொழி முன்வைப்பு, பின்னூட்டல் மற்றும் மதிப்பீட்டாளர்களின் பங்கு:  

உயர்கல்வியில் தொழில்முறை நடைமுறைகள் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை.

Oral Presentations, Feedback and the Role of Evaluators:

A Critical Perspective on Professional Practices in Higher Education.

    

 

S. Logarajah (SLTES)

(Teacher Educator, Batticaloa National College of Education)

சுருக்கம்

வாய்மொழி முன்வைப்பு (Oral Presentation) என்பது உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு உத்திகளில் ஒன்றாகும். இது கற்போரின் அறிவு, திறன், விமர்சனச் சிந்தனை, தொடர்பாடல் திறன் மற்றும் தொழில்முறைத் தகைமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எனினும், ஒரு வாய்மொழி முன்வைப்பின் தரம் முன்வைப்பாளரின் தயாரிப்பிலும், வழங்கலிலும்  மட்டுமன்றி, மதிப்பீட்டாளர்களின் தொழில்முறை அணுகுமுறை மற்றும் பின்னூட்டல் நடைமுறைகளிலும் தங்கியுள்ளது. இக்கட்டுரை உயர்தரமான வாய்மொழி முன்வைப்பின் அம்சங்கள், அதனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய தொழில்முறை நெறிமுறைகள் ஆகியவற்றை கல்வியியல் நோக்கில் ஆராய்கிறது.

முக்கிய சொற்கள்: வாய்மொழி முன்வைப்பு, கல்விசார் மதிப்பீடு, ஆக்கபூர்வமான பின்னூட்டல், வளர்ந்த கற்போர், ஆசிரியர் கல்வி

1. அறிமுகம்

உயர்கல்வியில் மதிப்பீடு என்பது கற்றலை அளவிடுவதற்கான செயல்முறை மட்டுமல்ல; கற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவும் கருதப்படுகிறது (Black & Wiliam, 2009). இந்நிலையில் வாய்மொழி முன்வைப்புகள் கற்போரின் அறிவு, திறன் மற்றும் தொழில்முறைத் தகைமைகளை வெளிப்படுத்துவதற்கான முக்கியமான மதிப்பீட்டு உத்தியாகக் காணப்படுகின்றன.

வாய்மொழி முன்வைப்பு என்பது தயாரிக்கப்பட்ட ஆவணத்தை வாசித்துக் காட்டும் செயலாக அல்ல. மாறாக, கற்போர் தனது கருத்துக்களை ஒழுங்குபடுத்தி, பகுப்பாய்வு செய்து, நியாயப்படுத்தி, கேட்போருடன் அறிவுசார் தொடர்பாடலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பாகும் (Biggs & Tang, 2011).

2. உயர்தரமான வாய்மொழி முன்வைப்பின் அம்சங்கள்

2.1 தெளிவான அறிமுகம்

ஒரு தரமான முன்வைப்பு தலைப்பின் பின்னணி, நோக்கம் மற்றும் முன்வைப்பின் அமைப்பு ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஆரம்பிக்கப்பட வேண்டும் (Lucas, 2020).

சில கணிப்பீட்டுச் சூழல்களில், முன்வைப்பாளர் அறிமுகம் செய்ய முற்படும் போது "அறிமுகம் தேவையில்லை; நேரடியாக விடயத்திற்கு வாருங்கள்" என்ற வகையிலான இடைமறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆனால் கல்வியியல் தொடர்பாடல் கோட்பாடுகளின்படி அறிமுகம் என்பது முன்வைப்பின் அத்தியாவசிய கூறாகக் கருதப்படுகிறது.

2.2 காட்சிப்படுத்தல் வளங்களின் பொருத்தமான பயன்பாடு

PowerPoint, SmartArt, Flowcharts, Concept Maps, Infographics போன்ற காட்சிப்படுத்தல் வளங்கள் தகவல்களை எளிமையாகவும் தாக்கமிக்கதாகவும் வழங்க உதவுகின்றன.

உதாரணமாக, முன்னரே மதிப்பீட்டாளர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான பாடத்திட்ட அட்டவணையை (Notes of Lesson) முழுமையாக திரையில் காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் முக்கிய கூறுகள், புதுமையான அம்சங்கள் மற்றும் கல்விசார் நியாயப்படுத்தல்களை PowerPoint அல்லது பிற காட்சிப்படுத்தல் வளங்கள் மூலம் சுருக்கமாக வழங்குவது கற்றல் உளவியலின் அடிப்படையில் மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் வாய்மொழி முன்வைப்பின் நோக்கம் ஆவணத்தை மீண்டும் வாசித்துக் காட்டுவது அல்ல; அதிலுள்ள கருத்துக்களை விளக்கி, பகுப்பாய்வு செய்து, அதன் கல்விசார் பெறுமதியை எடுத்துரைப்பதாகும். Mayer (2021) இன் பல்மூலக் கற்றல் (Multimedia Learning) கோட்பாட்டின்படி, பொருத்தமான காட்சிகள் மற்றும் சுருக்கமான உரைகள் இணைந்து பயன்படுத்தப்படும்போது கற்போரின் கவனம், புரிதல் மற்றும் தகவல் தக்கவைத்தல் ஆகியவை மேம்படுகின்றன. எனவே விரிவான அட்டவணைகளை முழுமையாகக் காட்சிப்படுத்துவதை விட, அவற்றின் சாராம்சத்தை விளக்கும் காட்சிப்படுத்தல் அணுகுமுறைகள் கல்வியியல் ரீதியாக அதிக பயனுடையதாகக் கருதப்படுகின்றன.

எனினும் சில நேரங்களில் "PowerPoint வேண்டாம்; நீங்கள் பதிவேற்றிய முழு ஆவணத்தையே காட்டுங்கள்" என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய அணுகுமுறைகள் முன்வைப்பின் தொடர்பாடல் தரத்தைப் பாதிக்கக்கூடும்.

2.3 விளக்கமளிக்கும் திறன்

வாய்மொழி முன்வைப்பின் நோக்கம் ஆவணத்தில் உள்ள தகவல்களை வெறுமனே வாசிப்பதல்ல; மாறாக, அவற்றிலுள்ள கருத்துக்களை விளக்கி, பகுப்பாய்வு செய்து, அவற்றின் கல்விசார் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகும். எனினும், சில கணிப்பீட்டுச்  சூழல்களில், "விளக்கமளிக்க வேண்டாம்; நீங்கள் எழுதியுள்ளதை வாசியுங்கள்" என்ற வகையிலான கருத்துக்கள் முன்வைக்கப்படுகிள்றன. இத்தகைய அணுகுமுறை வாய்மொழி முன்வைப்பின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானதாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில் வாய்மொழி முன்வைப்பு என்பது எழுத்து வடிவில் உள்ள உள்ளடக்கத்தை மீண்டும் வாசிப்பதற்கான செயற்பாடு அல்ல; அது முன்வைப்பாளரின் கருத்துப் புரிதல், பகுப்பாய்வுத் திறன் மற்றும் தொடர்பாடல் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகும். விளக்கமளிக்கும் திறனே கற்போரின் ஆழமான புரிதலையும் கல்விசார் தேர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது (Brookhart, 2017).

2.4 உயர்தரமான முன்வைப்பிற்கான உத்திகள்

வாய்மொழி முன்வைப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு பல்வேறு உத்திகள் உதவுகின்றன. முதன்மையாக, முன்வைப்பாளர் தனது முன்வைப்பை முன்கூட்டியே பலமுறை பயிற்சி செய்வதன் மூலம் தன்னம்பிக்கையையும் சரளமான வெளிப்பாட்டுத் திறனையும் வளர்த்துக் கொள்ள முடியும். அதேபோன்று, விரிவான தகவல்களை நேரடியாக வழங்குவதற்குப் பதிலாக முக்கிய கருத்துக்களை காட்சிப்படுத்தும் வடிவில் மாற்றி வழங்குவது கேட்போரின் கவனத்தை ஈர்க்கவும் புரிதலை மேம்படுத்தவும் உதவுகிறது.

மேலும், நேர ஒதுக்கீட்டைத் திட்டமிடுதல், சாத்தியமான கேள்விகளுக்கான பதில்களை முன்கூட்டியே தயாரித்தல் மற்றும் தொழில்நுட்ப வளங்களை திறமையாகப் பயன்படுத்துதல் ஆகியன முன்வைப்பின் தொழில்முறைத் தரத்தை உயர்த்துகின்றன. குறிப்பாக, ஆவணத்தில் உள்ள தகவல்களை வெறுமனே வாசிப்பதற்குப் பதிலாக அவற்றை விளக்கி, பகுப்பாய்வு செய்து, நியாயப்படுத்துவதில் கவனம் செலுத்துவது வாய்மொழி முன்வைப்பின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுகிறது. அதேவேளை, பார்வையாளர்களின் அறிவுமட்டம், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு தகவல்களை வழங்குவது தொடர்பாடலின் விளைவை அதிகரிக்கிறது.

உதாரணமாக, முன்னரே மதிப்பீட்டாளர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விரிவான பாடத்திட்ட அட்டவணையை (Notes of Lesson) முழுமையாக திரையில் காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் முக்கிய கூறுகள், புதுமையான அம்சங்கள் மற்றும் கல்விசார் நியாயப்படுத்தல்களை PowerPoint அல்லது பிற காட்சிப்படுத்தல் வளங்கள் மூலம் சுருக்கமாக வழங்குவது கல்வியியல் ரீதியாக மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் வாய்மொழி முன்வைப்பின் நோக்கம் ஆவணத்தை மீண்டும் வாசித்துக் காட்டுவது அல்ல; அதிலுள்ள கருத்துக்களை விளக்கி, பகுப்பாய்வு செய்து, அதன் கல்விசார் பெறுமதியை எடுத்துரைப்பதாகும். Mayer (2021) இன் பல்மூலக் கற்றல் கோட்பாட்டின்படி, பொருத்தமான காட்சிகள் மற்றும் சுருக்கமான உரைகள் இணைந்து பயன்படுத்தப்படும்போது கற்போரின் கவனம், புரிதல் மற்றும் தகவல் தக்கவைத்தல் ஆகியவை மேம்படுகின்றன.

இவ்வாறான உத்திகள் கற்போரின் தன்னம்பிக்கையையும் செயற்பாட்டு ஈடுபாட்டையும் அதிகரிப்பதோடு, அவர்களின் தொடர்பாடல் மற்றும் தொழில்முறைத் திறன்களையும் மேம்படுத்துகின்றன (Race, 2019).

2.5 முன்வைப்பாளர்களின் தொழில்முறைப் பொறுப்புகள்

வாய்மொழி முன்வைப்பின் தரம் மதிப்பீட்டாளர்களின் தொழில்முறை அணுகுமுறையில் மட்டுமன்றி, முன்வைப்பாளர்களின் தயார்நிலை மற்றும் பொறுப்புணர்விலும் தங்கியுள்ளது. எனவே, முன்வைப்பாளர்கள் தங்களது முன்வைப்பிற்கு உரிய முன்னாயத்தத்துடன் வருவதோடு, முன்வைக்கப்படும் கருத்துக்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக போதுமான அறிவும் விளக்கமளிக்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

முன்வைப்பாளர்கள் தங்களது முன்வைப்பை முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையான ஆதாரங்களையும் காட்சிப்படுத்தல் வளங்களையும் தயாரித்து வர வேண்டும். தயார்நிலையின்மை, போதிய அறிவின்மை அல்லது முன்வைக்கப்பட்ட கருத்துக்களை நியாயப்படுத்த இயலாமை ஆகியவை முன்வைப்பின் தரத்தைக் குறைக்கக்கூடும்.

அதேபோல், மதிப்பீட்டின் போது சுட்டிக்காட்டப்படும் குறைபாடுகளுக்கு வெறுமனே காரணங்கள் கூறுவதற்குப் பதிலாக, அவற்றை தொழில்முறை மனப்பாங்குடன் ஏற்றுக்கொண்டு மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்கபூர்வமான பின்னூட்டல்களை கற்றல் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருதுவது தொழில்முறை கற்போரின் முக்கிய பண்பாகும்.

மேலும், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், மதிப்பீட்டாளர்களுடன் மரியாதையான தொடர்பாடலைப் பேணுதல் அவசியமாகும். தேவையற்ற விவாதங்கள், உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினைகள் அல்லது மதிப்பீட்டு அமர்வின் ஒழுங்கை பாதிக்கும் நடத்தைகள் தவிர்க்கப்பட வேண்டும். மதிப்பீட்டு அமர்வு என்பது வாதிடுவதற்கான இடமாக அல்ல; மாறாக, கற்றல் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான உரையாடல் வெளியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

3. மதிப்பீட்டாளர்களின் தொழில்முறைப் பொறுப்புகள்

3.1 நடுநிலைத்தன்மை

அனைத்து முன்வைப்பாளர்களும் சமமான வாய்ப்புகளையும் சமமான அணுகுமுறையையும் பெற வேண்டும். பக்கச்சார்பு மதிப்பீட்டின் நம்பகத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையைக் குறைக்கிறது (Brookhart, 2017).

மதிப்பீட்டுச் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை, தொடர்ச்சித்தன்மை மற்றும் சமத்துவம் ஆகியவை இன்றியமையாத கூறுகளாகும். உதாரணமாக, முன்வைப்பாளர்கள் பட்டியல் ஒழுங்கின் அடிப்படையில் அழைக்கப்படுவார்கள் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் அதிலிருந்து விலகி வேறு ஒழுங்கில் அழைக்கப்படுவது குழப்பத்தையும் நியாயத்தன்மை தொடர்பான கேள்விகளையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, இத்தகைய மாற்றங்களுக்கு தெளிவான விளக்கமோ நியாயமான காரணமோ வழங்கப்படாதபோது, மதிப்பீட்டின் வெளிப்படைத்தன்மை மற்றும் நடுநிலைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், மதிப்பீட்டுச் சூழலில் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் அனைவருக்கும் ஒரே விதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். சிலருக்கு ஒரு நடைமுறையும் மற்றவர்களுக்கு வேறொரு நடைமுறையும் பின்பற்றப்படும்போது, மதிப்பீட்டின் நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம். எனவே நியாயமான மதிப்பீடு என்பது சமமான முடிவுகளை வழங்குவது மட்டுமல்ல; சமமான மற்றும் தொடர்ச்சியான நடைமுறைகளை உறுதிப்படுத்துவதையும் உள்ளடக்கியதாகும் (Brookhart, 2017).

3.2 ஆக்கபூர்வமான பின்னூட்டல்

பின்னூட்டல் என்பது கற்போரின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அவரது கற்றல் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்குமான ஒரு முக்கியமான கல்விசார் கருவியாகும். எனவே, பின்னூட்டல்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், மேம்பாட்டிற்கான வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும்.

உதாரணமாக,

நீங்கள் எல்லாம் எப்படி கற்பிக்கப் போகிறீர்களோ தெரியவில்லை”

அல்லது

இவர்களெல்லாம் Alpha மற்றும் Beta தலைமுறையினரோடு எப்படித்தான் காலந் தள்ளப் போகிறார்களோ

போன்ற கூற்றுகள் எள்ளல், ஏளனம் அல்லது அவநம்பிக்கை வெளிப்படுத்தும் தொனியுடன் முன்வைக்கப்படும்போது, கற்போரின் திறனை மேம்படுத்தும் ஆக்கபூர்வமான பின்னூட்டல்களாக அல்லாமல் கற்போரின் தன்னம்பிக்கையையும் கல்விசார் ஈடுபாட்டையும் பாதிக்கும் வாய்ப்பைக் கொண்டுள்ளன.

Hattie மற்றும் Timperley (2007) ஆகியோரின் கருத்துப்படி, பயனுள்ள பின்னூட்டல் என்பது நபரை மையமாகக் கொண்டதாக அல்லாமல், அவரது செயற்பாடு, செயல்முறை மற்றும் மேம்பாட்டுத் தேவைகளை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். எனவே, பின்னூட்டல்கள் கற்போரின் பலங்களை அங்கீகரிப்பதோடு, மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டு, வளர்ச்சிக்கான நடைமுறை வழிமுறைகளை வழங்கும் வகையில் அமைய வேண்டும்.

கல்விசார் கணிப்பீட்டின் நோக்கம் கற்போரைத் தீர்ப்பளிப்பது அல்ல; அவரை மேலும் சிறப்பாகக் கற்றுக்கொள்ளவும் செயல்படவும் வழிநடத்துவதாகும்.

3.3 மதிப்பீட்டு அமர்வின் ஒழுங்கு

மதிப்பீட்டு அமர்வுகள் முன்வைப்பாளருக்கு தனது கருத்துக்களை முழுமையாகவும் ஒழுங்காகவும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். சிறந்த நடைமுறையின்படி, மதிப்பீட்டு அமர்வு பின்வரும் ஒழுங்கில் முன்னெடுக்கப்படுவது பொருத்தமானதாகக் கருதப்படுகிறது (Brown & Race, 2013):

  1. அறிமுகம்
  2. முழுமையான முன்வைப்பு
  3. கேள்வி–பதில் அமர்வு
  4. பின்னூட்டம் மற்றும் பரிந்துரைகள்

இவ்வொழுங்கு முன்வைப்பாளரின் சிந்தனைத் தொடர்ச்சியையும் கருத்து வெளிப்பாட்டையும் பாதுகாக்க உதவுகிறது. மாறாக, முன்வைப்பு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தொடர்ச்சியான இடைமறிப்புகள் இடம்பெறும்போது, முன்வைப்பாளரின் சிந்தனை ஓட்டம், தன்னம்பிக்கை மற்றும் கருத்துக்களை ஒழுங்காக முன்வைக்கும் திறன் ஆகியவை பாதிக்கப்படக்கூடும்.

உதாரணமாக,

அறிமுகம் தேவையில்லை; நேரடியாக விடயத்திற்கு வாருங்கள்”

அல்லது

விளக்கமளிக்க வேண்டாம்; நீங்கள் எழுதியுள்ளதை வாசியுங்கள்”

என்ற வகையிலான இடையீடுகள், முன்வைப்பாளரின் கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பைக் குறைக்கக்கூடும். குறிப்பாக, அறிமுகம் என்பது முன்வைப்பின் நோக்கம், பின்னணி மற்றும் அமைப்பை விளக்கும் முக்கிய அங்கமாகும். அதேபோல், வாய்மொழி முன்வைப்பின் நோக்கம் ஆவணத்தை வாசிப்பதல்ல; அதிலுள்ள கருத்துக்களை விளக்கி, பகுப்பாய்வு செய்து, அதன் கல்விசார் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகும்.

எனவே, கேள்விகள், விளக்கக் கோரல்கள் மற்றும் பின்னூட்டல்கள் பொதுவாக முன்வைப்பு நிறைவடைந்த பின்னர் வழங்கப்படுவது கல்வியியல் ரீதியாக மிகவும் பொருத்தமான நடைமுறையாகக் கருதப்படுகிறது. இத்தகைய அணுகுமுறை முன்வைப்பாளரின் குரல் முழுமையாகக் கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதோடு, மதிப்பீட்டின் நியாயத்தன்மை மற்றும் தொழில்முறைத் தரத்தையும் மேம்படுத்துகிறது.

மேலும், முன்வைப்பின் போது திருத்தப்பட வேண்டிய அம்சங்கள் அல்லது தெளிவுபடுத்தப்பட வேண்டிய கருத்துக்கள் காணப்பட்டால், அவற்றை மதிப்பீட்டாளர் குறிப்பெடுத்துக் கொண்டு முன்வைப்பு நிறைவடைந்த பின்னர் கலந்துரையாடலின் மூலம் எடுத்துக்காட்டுவது சிறந்த நடைமுறையாகும்.

உதாரணமாக, "இந்தப் பகுதியில் திருத்தம் தேவைப்படுகிறது; அதை மீளவும் காட்சிப்படுத்துங்கள் அதைப் பார்ப்போம்..."

இந்த அணுகுமுறை, முன்வைப்பாளரின் சிந்தனைத் தொடர்ச்சியைப் பாதுகாப்பதோடு, அவரது கருத்துக்களை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இதற்கு மாறாக ஒவ்வொரு கருத்தின் போதும் இடைமறித்து திருத்தங்களைச் சுட்டிக்காட்டுவது முன்வைப்பின் ஓட்டத்தைக் குலைத்து, முன்வைப்பாளரின் தன்னம்பிக்கை மற்றும் செயல்திறனைப் பாதிக்கக்கூடும். எனவே, பின்னூட்டல்கள் திட்டமிட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் முன்வைப்பு நிறைவடைந்த பின்னர் வழங்கப்படுவது கல்வியியல் ரீதியாக மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது (Brown & Race, 2013).

மதிப்பீட்டாளர் உடனடியாகத் தலையிடும் நபராக அல்ல; முதலில் செவிமடுத்து, பின்னர் ஆதாரபூர்வமான பின்னூட்டம் வழங்கும் நபராக இருக்க வேண்டும்.

3.4 மொழிப் பிழைகளை கையாளும் முறை

மொழிப் பிழைகளைச் சுட்டிக்காட்டுவது மதிப்பீட்டாளரின் பொறுப்பாகும். இருப்பினும், அவை கிண்டல், ஏளனம் அல்லது அவமானப்படுத்தும் வடிவில் முன்வைக்கப்படக் கூடாது. குறிப்பாக உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விச் சூழல்களில், மொழிப் பிழைகள் கற்போரின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருதப்பட வேண்டும்.

உதாரணமாக, ஆங்கில மொழிப் பயன்பாட்டில் அல்லது கல்விசார் சொற்பிரயோகங்களில் பிழைகள் காணப்பட்டால், அவற்றைத் திருத்தமான வடிவில் சுட்டிக்காட்டி, பொருத்தமான மாற்றுகளைப் பரிந்துரைப்பது ஆக்கபூர்வமான அணுகுமுறையாகும். இதற்கு மாறாக, மொழிப் பிழைகளை கேலி செய்தல், எள்ளலான குறிப்புகள் மூலம் சுட்டிக்காட்டுதல் அல்லது முன்வைப்பாளரை சங்கடப்படுத்தும் வகையில் கருத்துரைத்தல் ஆகியவை கற்றல் சூழலைப் பாதிக்கக்கூடும்.

மொழித் தேர்ச்சி வளர்ச்சியடையும் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். எனவே, மொழிப் பிழைகள் குற்றங்களாக அல்லாமல் மேம்படுத்தப்பட வேண்டிய கற்றல் வாய்ப்புகளாகக் கருதப்பட வேண்டும். மதிப்பீட்டாளரின் பங்கு பிழைகளை அடையாளம் காண்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைத் திருத்துவதற்கான வழிகாட்டல்களையும் வழங்குவதாக இருக்க வேண்டும்.

இதனால், மொழி தொடர்பான பின்னூட்டங்கள் முன்வைப்பாளரின் தன்னம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையிலும், அவரது தொடர்பாடல் திறனை மேம்படுத்தும் வகையிலும் அமைய வேண்டும்.

3.5 மதிப்பீட்டின் மையம்

மதிப்பீட்டு அமர்வின் மையமாக இருக்க வேண்டியது முன்வைப்பாளரின் கற்றல், செயல்திறன் மற்றும் தொழில்முறை வளர்ச்சியாகும். மதிப்பீட்டின் நோக்கம் கற்போரின் அறிவு, திறன் மற்றும் புரிதலை வெளிக்கொணர்வதும், அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்குவதுமாகும். சில சந்தர்ப்பங்களில் மதிப்பீட்டாளர்கள் தங்களது கல்விசார் வெளியீடுகளை மேற்கோளாகக் குறிப்பிடலாம்.

உதாரணமாக,

"இந்தத் தலைப்பில் நான் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். ஆனால் எந்த சஞ்சிகையில் வெளியானது என்பது நினைவில் இல்லை. தேடிப் பாருங்கள்."

கல்விசார் அனுபவங்களையும் ஆய்வுகளையும் பகிர்வது பயனுள்ளதாக இருந்தாலும், அவை பொருத்தமான ஆதாரங்களுடனும் வெளியீட்டு விவரங்களுடனும் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அவை கற்போரின் செயற்பாட்டை மையமாகக் கொண்ட கலந்துரையாடலிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அபாயம் உள்ளது.

அதேபோல், முன்வைப்பாளர் கல்வி கற்ற நிறுவனம், அவர் பெற்ற பயிற்சி அல்லது அவர் சார்ந்த கல்வி நிறுவனங்களை ஒப்பிட்டு தரக்குறைவாகக் கருத்துரைப்பதும் தொழில்முறை மதிப்பீட்டு நெறிமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை.

உதாரணமாக,

கற்போரின் கல்விப் பின்னணி அல்லது அவர்கள் கல்வி கற்ற நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு பொதுமைப்படுத்தப்பட்ட அல்லது ஏளனமான கருத்துக்களை முன்வைப்பது, அவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு உதவுவதில்லை. மாறாக, அது மதிப்பீட்டின் தொழில்முறைத் தன்மையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

மதிப்பீட்டாளர்கள் தாங்கள் ஒரு தனிநபராக மட்டுமல்லாமல், ஒரு உயர்கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகளாகவும் செயற்படுகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே அவர்கள் பயன்படுத்தும் மொழி, வெளிப்படுத்தும் அணுகுமுறை மற்றும் வழங்கும் பின்னூட்டங்கள் அனைத்தும் தொழில்முறைப் பொறுப்புணர்வுடனும் கல்விசார் ஒழுக்கநெறிகளுடனும் அமைய வேண்டும். ஏனெனில் மதிப்பீட்டாளரின் ஒவ்வொரு செயற்பாடும் அவரை மட்டுமல்ல, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வி நிறுவனத்தின் மதிப்பையும் நற்பெயரையும் பிரதிபலிக்கிறது.

எனவே, மதிப்பீட்டு அமர்வுகள் மதிப்பீட்டாளரின் சாதனைகள் அல்லது அதிகாரத்தை முன்னிறுத்தும் தளங்களாக அல்லாமல், கற்றலாளரின் வளர்ச்சி மற்றும் கற்றல் மேம்பாட்டை மையப்படுத்திய கல்விசார் உரையாடல்களாக அமைய வேண்டும்.

3.6 மதிப்பீட்டு அளவுகோல்களின் பின்பற்றல்

கல்விசார் மதிப்பீட்டின் நம்பகத்தன்மை மற்றும் நியாயத்தன்மையை உறுதிப்படுத்துவதில் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்கள் (Assessment Criteria/Rubrics) முக்கிய பங்காற்றுகின்றன. மதிப்பீட்டின் நோக்கம், எதிர்பார்ப்புகள் மற்றும் செயல்திறன் குறியீடுகள் தொடர்பாக கற்போருக்கு முன்னரே தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். அதேபோல், மதிப்பீட்டாளர்களும் தங்களது மதிப்பீடுகளை அவ்வளவுகோல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும்.

உதாரணமாக, முன்வைப்பிற்கான மதிப்பீட்டு அளவுகோல்கள் முன்னரே வழங்கப்பட்டிருந்த போதிலும், மதிப்பீட்டின் போது அவற்றிலிருந்து விலகி புதிய எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்படுதல் அல்லது அளவுகோல்களில் குறிப்பிடப்படாத அம்சங்கள் அடிப்படையில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுதல், மதிப்பீட்டின் நியாயத்தன்மையை பாதிக்கக் கூடும். இத்தகைய நடைமுறைகள் கற்போரிடையே குழப்பத்தையும் அநீதியுணர்வையும் உருவாக்குவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளன.

Brookhart (2017) குறிப்பிடுவது போல, பயனுள்ள மதிப்பீடு என்பது தெளிவான அளவுகோல்கள், தொடர்ச்சியான நடைமுறைகள் மற்றும் வெளிப்படையான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும். எனவே, முன்கூட்டியே வழங்கப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களைப் பின்பற்றாமல், தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது ஏதேச்சாதிகாரமான அணுகுமுறைகளின் அடிப்படையில் மதிப்பீட்டு அமர்வுகளை முன்னெடுப்பது தொழில்முறை மதிப்பீட்டு நெறிமுறைகளுக்கு முரணானதாகக் கருதப்படுகிறது.

மதிப்பீட்டாளரின் அதிகாரம், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களை மாற்றுவதற்கான அதிகாரமாக அல்ல; அவற்றை நியாயமாகவும் தொடர்ச்சியாகவும் நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

3.7 உணர்வுசார் நுண்ணறிவு மற்றும் தொழில்முறை மரியாதை

மதிப்பீட்டாளர்கள் கற்பவர்களின் உளவியல் பாதுகாப்பையும் தொழில்முறை மரியாதையையும் கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும். மதிப்பீட்டு அமர்வுகளில் பயன்படுத்தப்படும் மொழி கற்றலை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்; அச்சம், அவமானம் அல்லது தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவதாக இருக்கக் கூடாது.

உதாரணமாக,

இவர்களெல்லாம் Alpha மற்றும் Beta தலைமுறையினருக்கு எப்படித்தான் கற்பிக்கப் போகிறார்களோ?”

என்ற எள்ளலான கருத்துக்கள் அல்லது அதனுடன் இணைந்த கேலிச் சிரிப்புகள், கற்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் பின்னூட்டல்களாக கருதப்பட முடியாது. இத்தகைய கூற்றுகள் கற்பவர்களின் தற்போதைய செயற்பாட்டை மதிப்பிடுவதை விட, அவரது எதிர்காலத் தொழில்முறைத் தகுதியை பொதுமைப்படுத்தி மதிப்பிடும் தன்மையைக் கொண்டுள்ளன.

உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) தொடர்பான ஆய்வுகள், மரியாதையான தொடர்பாடலும் ஆதரவான பின்னூட்டல்களும் கற்பவர்களின் தன்னம்பிக்கை, ஈடுபாடு மற்றும் கற்றலுக்கான ஊக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதாகக் காட்டுகின்றன (Goleman, 2006). இதற்கு மாறாக, எள்ளல், கேலி அல்லது அவமானப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் கற்பவர்களின் உளவியல் பாதுகாப்பு உணர்வைக் குறைத்து, அவர்களின் கல்விசார் பங்களிப்பைத் தளர்த்தக்கூடும்.

Hattie மற்றும் Timperley (2007) குறிப்பிடுவது போல, பின்னூட்டல் கற்பவர்களின் செயற்பாட்டை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்; அவரது ஆளுமை, பின்னணி அல்லது எதிர்காலத் தொழில்முறைத் திறனை எள்ளலாக மதிப்பிடும் வகையில் இருக்கக் கூடாது. எனவே, தொழில்முறை மதிப்பீட்டின் அடிப்படை நெறிமுறைகளில் ஒன்றாக கற்பவர்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதுகாத்தல் கருதப்பட வேண்டும்.

தொழில்முறை மதிப்பீட்டின் அடிப்படை நெறிமுறைகளில் ஒன்றாக கற்பவர்களின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதுகாத்தல் கருதப்பட வேண்டும்.

 

3.8 வளர்ந்த கற்போருக்கான மரியாதை

உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விச் சூழல்களில் கற்பவர்கள் சிறுவர்கள் அல்லர்; அவர்கள் முன் அனுபவங்கள், தொழில்முறை அறிவு, சமூகப் புரிதல் மற்றும் சுயகற்றல் ஆற்றல்களைக் கொண்ட வளர்ந்த கற்போராக (Adult Learners) உள்ளனர். Knowles (1984) இன் Andragogy கோட்பாட்டின்படி, வளர்ந்த கற்போர் மரியாதை, சுயாதீனம் மற்றும் அனுபவங்களின் அங்கீகாரம் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர்.

எனவே, மதிப்பீட்டாளர்கள் வளர்ந்த கற்போரை அறிவு குறைந்தவர்களாகவோ அல்லது தொடர்ச்சியாக வழிநடத்தப்பட வேண்டியவர்களாகவோ கருதாமல், அவர்களது அனுபவங்களையும் தொழில்முறை அடையாளத்தையும் மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும். கற்போரின் கருத்துக்களைக் கவனமாகக் கேட்பதும், அவர்களது அனுபவங்களை அங்கீகரிப்பதும், கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் மரியாதையான உரையாடலைப் பேணுவதும் தொழில்முறை மதிப்பீட்டின் முக்கிய அம்சங்களாகும்.

கற்போரின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதுகாக்கும் மதிப்பீட்டுச் சூழல்களே உண்மையான கற்றல் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றன. எனவே, மதிப்பீடு என்பது அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயல்முறை அல்ல; மாறாக, வளர்ந்த கற்போரின் கற்றலை ஊக்குவிக்கும் மரியாதையான கல்விசார் உரையாடலாக அமைய வேண்டும்.

வளர்ந்த கற்போரின் கண்ணியத்தைப் பாதுகாக்காத மதிப்பீடு, கற்றலை மேம்படுத்தும் செயல்முறையாக அல்லாமல், அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயல்முறையாக மாறிவிடும்.

வளர்ந்த கற்போரின் கண்ணியத்தைப் பாதுகாக்காத மதிப்பீடு, கற்றலை மேம்படுத்தும் செயல்முறையாக அல்லாமல், அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயல்முறையாக மாறிவிடும்.

4. கலந்துரையாடல்

வாய்மொழி முன்வைப்புகள் உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் கற்போரின் அறிவு, திறன், விமர்சனச் சிந்தனை மற்றும் தொழில்முறைத் தகைமைகளை வெளிப்படுத்துவதற்கான முக்கியமான மதிப்பீட்டு உத்தியாகக் கருதப்படுகின்றன. எனினும், இத்தகைய முன்வைப்புகளின் தரம் முன்வைப்பாளரின் தயாரிப்பு மற்றும் வழங்கல் திறனில் மட்டுமன்றி, மதிப்பீட்டாளர்களின் தொழில்முறை அணுகுமுறை மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகளிலும் தங்கியுள்ளது.

இக்கட்டுரையில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள், தரமான மதிப்பீடு என்பது பிழைகளைக் கண்டறியும் செயல்முறையாக அல்லாமல், கற்றலை மேம்படுத்தும் வளர்ச்சிசார் செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, நடுநிலைத்தன்மை, ஆக்கபூர்வமான பின்னூட்டம், மதிப்பீட்டு அளவுகோல்களின் பின்பற்றல் மற்றும் தொழில்முறை மரியாதை ஆகியவை மதிப்பீட்டின் நம்பகத்தன்மையையும் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.

அதேவேளை, முன்வைப்பாளர்களும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து, உரிய முன்னாயத்தத்துடன் முன்வைப்பிற்கு வருவதோடு, வழங்கப்படும் பின்னூட்டல்களை தொழில்முறை மனப்பாங்குடன் ஏற்றுக்கொண்டு மேம்பாடுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். தரமான மதிப்பீட்டு அனுபவம் உருவாக வேண்டுமெனில், மதிப்பீட்டாளர்களும் கற்போரும் பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும்.

மேலும், உயர்கல்விச் சூழல்களில் கற்பவர்கள் வளர்ந்த கற்போராக இருப்பதால், அவர்களது அனுபவங்கள், கருத்துக்கள் மற்றும் தொழில்முறை அடையாளங்கள் மதிக்கப்பட வேண்டும். மதிப்பீடு என்பது அதிகாரத்தை நிலைநாட்டும் செயல்முறையாக அல்லாமல், கற்போரின் அறிவு மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்தும் கல்விசார் உரையாடலாக அமைய வேண்டும்.

எனவே, தரமான வாய்மொழி முன்வைப்பும் தொழில்முறை மதிப்பீடும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் செயல்முறைகளாகக் கருதப்பட வேண்டும். இவை இரண்டும் இணைந்தே உயர்கல்வியில் கற்றல் மற்றும் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்த முடியும்.

மேலும், Knowles (1984) முன்வைக்கும் வளர்ந்த கற்போர் (Andragogy) கோட்பாட்டின் அடிப்படையில், உயர்கல்வி மற்றும் ஆசிரியர் கல்விச் சூழல்களில் கற்பவர்கள் முன் அனுபவங்கள், சுயாதீன கற்றல் திறன்கள் மற்றும் தொழில்முறை அடையாளங்களைக் கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டும். எனவே, மதிப்பீட்டாளர்களின் பங்கு அதிகாரத்தை நிலைநாட்டுவதோ அல்லது தீர்ப்பளிப்பதோ அல்ல; மாறாக, கற்பவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் திறன்களை அங்கீகரித்து அவர்களின் தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாக அமைய வேண்டும்.

இதன் அடிப்படையில், தரமான வாய்மொழி முன்வைப்பும் பயனுள்ள மதிப்பீடும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் கல்விசார் செயல்முறைகளாகக் காணப்பட வேண்டும். முன்வைப்பாளர்களுக்கு தங்களது கருத்துக்களை முழுமையாகவும் தன்னம்பிக்கையுடனும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதும், மதிப்பீட்டாளர்கள் நடுநிலைத்தன்மை, தொழில்முறை மரியாதை மற்றும் ஆக்கபூர்வமான பின்னூட்டலின் அடிப்படையில் செயல்படுவதும், உயர்கல்வியில் கற்றல் மற்றும் மதிப்பீட்டின் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னிபந்தனைகளாகும்.

5. முடிவுரை

வாய்மொழி முன்வைப்பு என்பது தகவல்களை வழங்கும் செயற்பாடு மட்டுமல்ல; கற்போரின் அறிவு, திறன், விமர்சனச் சிந்தனை, தொடர்பாடல் திறன்,  மற்றும் தொழில்முறைத் தகைமைகளை வெளிப்படுத்தும் கல்விசார் செயல்முறையாகும். அதன் வெற்றி முன்வைப்பாளரின் தயாரிப்பிலும், மதிப்பீட்டாளரின் தொழில்முறை அணுகுமுறையிலும் தங்கியுள்ளது.

இக்கட்டுரை உயர்தரமான வாய்மொழி முன்வைப்பின் அம்சங்கள், அதனை மேம்படுத்துவதற்கான உத்திகள் மற்றும் மதிப்பீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய தொழில்முறை நெறிமுறைகள் ஆகியவற்றை ஆராய்ந்துள்ளது. அதேவேளை, முன்வைப்பாளர்களும் உரிய முன்னாயத்தத்துடன் முன்வைப்பில் பங்கேற்று, பின்னூட்டல்களை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

கல்விசார் மதிப்பீட்டின் நோக்கம் கற்போரைத் தீர்ப்பளிப்பது அல்ல; மாறாக, அவர்களின் அறிவு, திறன் மற்றும் தொழில்முறைத் தகைமைகளை மேம்படுத்துவதற்கு வழிகாட்டுவதாகும். எனவே, மதிப்பீட்டு நடைமுறைகள் நடுநிலைத்தன்மை, மரியாதை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஆக்கபூர்வமான பின்னூட்டல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும்.

இறுதியாக, தரமான மதிப்பீடு என்பது குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கான கருவி அல்ல; கற்போரின் திறன்களை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வழிகாட்டும் கல்விசார் செயற்பாடாகும். வளர்ந்த கற்போரின் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் பாதுகாக்கும் மதிப்பீட்டுச் சூழல்களே உண்மையான கற்றல், தொழில்முறை வளர்ச்சி மற்றும் கல்வித் தர மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.

வளர்ந்த கற்போரின் கண்ணியத்தைப் பாதுகாக்காத மதிப்பீடு, கற்றலை மேம்படுத்தும் செயல்முறையாக அல்லாமல், அதிகாரத்தை வெளிப்படுத்தும் செயல்முறையாக மாறிவிடும்.

References

Biggs, J., & Tang, C. (2011). Teaching for quality learning at university (4th ed.). Open University Press.

Black, P., & Wiliam, D. (2009). Developing the theory of formative assessment. Educational Assessment, Evaluation and Accountability, 21(1), 5–31. https://doi.org/10.1007/s11092-008-9068-5

Brookhart, S. M. (2017). How to give effective feedback to your students (2nd ed.). ASCD.

Brown, S., & Race, P. (2013). Using effective assessment to promote learning. Routledge.

Goleman, D. (2006). Emotional intelligence: Why it can matter more than IQ (10th anniversary ed.). Bantam Books.

Hattie, J., & Timperley, H. (2007). The power of feedback. Review of Educational Research, 77(1), 81–112. https://doi.org/10.3102/003465430298487

Knowles, M. S. (1984). The adult learner: A neglected species (3rd ed.). Gulf Publishing.

Lucas, S. E. (2020). The art of public speaking (13th ed.). McGraw-Hill Education.

Mayer, R. E. (2021). Multimedia learning (3rd ed.). Cambridge University Press.

Race, P. (2019). The lecturer's toolkit: A practical guide to assessment, learning and teaching (5th ed.). Routledge.

 

 

 

 

 

Post a Comment

Previous Post Next Post