16,000 மாணவர்களுக்கான 55 புதிய விடுதிகள்: அரச பல்கலைக்கழகங்களில் பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி!
இலங்கை முழுவதுமுள்ள அரச பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 16,000 மாணவர்களுக்குப் பயனளிக்கும் 55 புதிய மாணவர் விடுதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்கல்வித் துறையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இத்திட்டங்கள் மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதில் Model A (400 மாணவர்கள்) மற்றும் Model B (200 மாணவர்கள்) ஆகிய இரு வகைகளின் கீழ் விடுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
பல்கலைக்கழகங்களின் அடிப்படையில் இத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலவரங்கள் பின்வருமாறு:
முதற்கட்டப் பணிகளில் உள்ள பல்கலைக்கழகங்கள்:
கிழக்கு பல்கலைக்கழகம் (05 திட்டங்கள் - 1,600 மாணவர்கள்): ஒரு விடுதி நிர்மாணத்திற்கான கேள்விப்பத்திரங்கள் (Bids) கடந்த ஏப்ரல் 30 அன்று திறக்கப்பட்டு, பொருத்தமான நிறுவனத்தைத் தெரிவு செய்யும் மதிப்பீடுகள் நடக்கின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (02 திட்டங்கள் - 600 மாணவர்கள்): கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி திறக்கப்பட்ட டெண்டர் முன்மொழிவுகளைப் பல்கலைக்கழகம் தற்போது மதிப்பீடு செய்து வருகிறது.
திருகோணமலை வளாகம் (02 திட்டங்கள் - 400 மாணவர்கள்): 'வடிவமைத்து நிர்மாணிக்கும்' (Design and Build) அடிப்படையில், ஒரு விடுதிக்கான விலைக் கோரல்கள் கடந்த ஏப்ரல் 09 முதல் மே 27 வரை கோரப்பட்டு நிறைவடைந்துள்ளன.
டெண்டர் மற்றும் விலைக் கோரல் மட்டத்தில் உள்ளவை:
சப்ரகமுவ பல்கலைக்கழகம் (07 திட்டங்கள் - 2,200 மாணவர்கள்): மே 20 ஆம் திகதி ஒரு விடுதிக்கான டெண்டர் கோரல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் (06 திட்டங்கள் - 2,000 மாணவர்கள்): மே 21 ஆம் திகதி ஒரு விடுதிக்கான டெண்டர் கோரல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டு, அடுத்த கட்டப் பணிகள் நடக்கின்றன.
ரஜரட்ட பல்கலைக்கழகம் (07 திட்டங்கள் - 2,200 மாணவர்கள்): நிர்மாண நிறுவனங்களைத் தெரிவு செய்வதற்கான விலைக் கோரல் கடந்த மே 21 அன்று வெற்றிகரமாகத் திறக்கப்பட்டுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் (06 திட்டங்கள் - 1,800 மாணவர்கள்): ஆரம்பக் கலந்துரையாடல்கள் (Pre-bid Meeting) நடத்தப்பட்டு, மே 22 அன்று விலைக் கோரல்கள் கோரப்பட்டுள்ளன.
மொரட்டுவ பல்கலைக்கழகம் (02 திட்டங்கள் - 400 மாணவர்கள்): கடந்த மே 17 ஆம் திகதி ஒரு விடுதிக்கான விலைக் கோரல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட ஆவணமாக்கல் மற்றும் தயாரிப்பு மட்டத்தில் உள்ளவை:
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் (04 திட்டங்கள் - 1,200 மாணவர்கள்): உத்தியோகபூர்வ டெண்டர் மற்றும் சட்ட ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.
வயம்ப பல்கலைக்கழகம் (04 திட்டங்கள் - 1,200 மாணவர்கள்): ஒரு விடுதித் திட்டத்திற்கான டெண்டர் ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
வவுனியா பல்கலைக்கழகம் (04 திட்டங்கள் - 1,200 மாணவர்கள்): ஒரு விடுதித் திட்டத்திற்கான தொழில்நுட்ப மதிப்பீட்டு அறிக்கை (Technical Evaluation Report) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது.
கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகம் (02 திட்டங்கள் - 400 மாணவர்கள்): வடிவமைத்து நிர்மாணிக்கும் முறைமைக்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், காணி தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
களப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகம்:
ருஹுணு பல்கலைக்கழகம் (04 திட்டங்கள் - 800 மாணவர்கள்): ஒரு விடுதிக்கான தளப் பணிகள் (Site works) ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நிலத்தைத் தயார்படுத்தும் பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
முக்கிய குறிப்பு: இந்த 55 புதிய விடுதித் திட்டங்களும் முழுமையாக நிறைவடையும் போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்து கல்வி கற்கும் சுமார் 16,000 பல்கலைக்கழக மாணவர்கள் உயர்ந்த தரத்திலான மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
