ஆசிரியர் ஒழுக்கக்கோவை மற்றும் தொழிலும் விழுமியங்களும்


ஆசிரியர் ஒழுக்கக்கோவை மற்றும் தொழிலும் விழுமியங்களும்




1. அறிமுகம் மற்றும் பின்னணி

1989 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் பிரகடனத்திற்கு அமைவாக, சகல பிள்ளைகளுக்கும் தரமான மற்றும் பண்புசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதும், அவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதும் ஆசிரியர்களின் முதன்மைப் பொறுப்பாகும்.

சட்ட ரீதியான சிந்தனைகளின்படி, ஆசிரியர்கள் மாணவர்கள் விடயத்தில் "இடம்சார் பெற்றோர்" (Loco-Parents) ஆகக் கருதப்படுகின்றனர். எனவே, மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு ஆசிரியர்கள் முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

2. ஒழுக்கக்கோவையின் முதன்மை நோக்கங்கள்

  1. ஒழுக்க விழுமிய முறைமை: ஆசிரியர்கள் நேர்மை, பொறுப்புணர்ச்சி, முன்மாதிரியான நடத்தை மற்றும் சமூகப் பொறுப்புடன் செயற்படுவதற்கான வழிகாட்டல்களை வழங்குதல்.

  2. சட்ட முறைமை: ஆசிரியர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய சட்டக் கோட்பாடுகளை வகுத்து, தொழில்சார் கௌரவத்தையும் சமூக நம்பிக்கையையும் பாதுகாத்தல்.

3. ஆசிரியர்களின் விழுமியம் மிக்க செயற்பாடுகள் (8 பிரதான துறைகள்)

ஆசிரியர்களின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் எட்டு முக்கிய துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

  1. ஆசிரியர் தனிப்பட்ட ரீதியில்:

    • சிறந்த ஆரோக்கியம், சுத்தமான மற்றும் எளிமையான உடை அணிதல்.

    • புகைப்பிடித்தல், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சூதாட்டம் போன்ற தீய பழக்கவழக்கங்களில் இருந்து விலகியிருத்தல்.

    • அரசியல், சமயம் மற்றும் தனிப்பட்ட கருத்துகளை மாணவர்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்காதிருத்தல்.

    • வகுப்பறைக்குள்ளும் வெளியிலும் கையடக்கத் தொலைபேசி (Mobile Phone) பயன்பாட்டைக் கட்டுப்படுத்துதல்.

  2. ஆசிரியர் பெற்றோருக்குப் பதிலாக (Loco-Parents):

    • சாதி, மதம், இனம், மொழி, பாலினம் மற்றும் சமூக நிலைமைகளைக் கருதாது அனைத்து மாணவர்களுக்கும் சமமான அன்பையும் பாதுகாப்பையும் வழங்குதல்.

    • விசேட தேவைகள் உடைய மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்குத் தேவையான நிபுணத்துவ வழிகாட்டல்களை வழங்குதல்.

  3. அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கு விருத்தியாளராக:

    • சிறந்த தயாரிப்புகளுடன் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

    • மாணவர்கள் சுதந்திரமாக வினாக்கள் கேட்கவும் சுய கற்றலில் ஈடுபடவும் ஊக்கமளித்தல்.

    • மாணவர்களிடம் பணம் பெற்றுத் தனிப்பட்ட முறையில் கற்பிப்பதைத் (Private Tution) தவிர்த்தல்.

  4. ஆக்கத்திறன் மிக்க வழிகாட்டி மற்றும் ஆலோசகராக:

    • மாணவர்களின் பலவீனங்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றிய ரகசியத் தகவல்களை பெற்றோரைத் தவிர வேறு எவருக்கும் வெளிப்படுத்தாதிருத்தல்.

    • மாணவர்களை எவ்விதமான துஷ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தாதிருத்தல் மற்றும் பாதுகாத்தல்.

  5. மதிப்பீட்டாளராக:

    • எவ்வித பக்கச்சார்பும் அன்றி நியாயமான முறையிலும் நம்பகத்தன்மையுடனும் மாணவர்களை மதிப்பீடு செய்தல்.

  6. தொழில்சார் உத்தியோகத்தராக:

    • தமது தொழில்சார் அறிவை உலகோட்டத்திற்கு ஏற்ப தொடர்ந்து இற்றைப்படுத்தல் (Update).

    • தகைமையற்ற நிலையில் பதவியுயர்வுகளை எதிர்பார்க்காதிருத்தல் மற்றும் சக ஆசிரியர்களின் விருத்திக்கு உதவுதல்.

    • பிறர் முன்னிலையில் சக ஆசிரியர்களை விமர்சிப்பதைத் தவிர்த்தல்.

  7. முகாமைத்துவத்தின் பொறுப்பாளராக:

    • பாடசாலைக் கொள்கைகள் மற்றும் நிர்வாக ஆலோசனைகளைப் பின்பற்றி நடத்தல்.

    • நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுதல்.

  8. சமூகம் மற்றும் தேசத்தின் முன்னோடியாக:

    • பல்லின சமூகத்திற்கிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்ப மாணவர்களை வழிகாட்டுதல்.

    • சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் தேசத்தை நேசிக்கக்கூடிய இளம் சந்ததியை உருவாக்குதல்.

4. கட்டாய சட்ட ஒழுங்கு விதிமுறைகள் (Legal Regulations)

ஒழுக்க விழுமியங்களைத் தவிர, கீழ்வரும் விதியை மீறும் ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:

  • சூதாட்ட நிலையங்கள், மதுபான விற்பனை நிலையங்கள் போன்ற அபகீர்த்தியான இடங்களுக்குச் செல்லுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

  • வட்டிக்கு பணம் வழங்குதல் மற்றும் சமூகத்திற்குப் பாதகமான தொழில்களில் ஈடுபடுதல் கூடாது.

  • சிறுவர் தொழிலாளர்களை அமர்த்துதல், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடக்கூடாது.

முடிவுரை

ஆசிரியர் ஒழுக்கக்கோவையானது ஆசிரியர்களின் சுயாதீனத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அன்றி, அவர்களின் தொழில்சார் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பாடசாலைக் கல்வியின் பண்புசார் தரத்தை உயர்த்தவும் உருவாக்கப்பட்ட உயரிய ஆவணமாகும்.




Post a Comment

Previous Post Next Post