இலங்கையில் புதிய கல்விச் சபையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி

 இலங்கையில் புதிய கல்விச் சபையை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி!



இலங்கையின் பொதுக் கல்வியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர், ஆசிரியர் ஆலோசகர், அதிபர், கல்வியியலாளர் மற்றும் கல்வி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தொழில்சார் பிரிவுகளுக்குமான தரப்படுத்தல், பதிவுசெய்தல், உரிமம் வழங்குதல் மற்றும் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான நிறுவன பொறிமுறையாக 'இலங்கை கல்விச் சபை' (National Council of Education) ஒன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய கல்விச் சபை ஒன்றை நிறுவுவதன் அவசியம் குறித்து விரிவாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக, சிரேஷ்ட பேராசிரியர் ஜி.பி. தயாரத்ன அவர்களின் தலைமையில் குழுவொன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டிருந்தது.

இக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 03 ஆம் திகதியிட்ட அறிக்கை, பாராளுமன்றத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கீழ் அமைக்கப்பட்ட உப குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கி தயாரிக்கப்பட்ட மறுஆய்வு அறிக்கையும் அக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள இலங்கை கல்விச் சபையின் அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்டப்பூர்வ அதிகாரங்களைக் கொண்டுள்ள ஏனைய நிறுவனங்களுடன் முறையான ஒருங்கிணைப்புடன் இச்சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்தை வரைவதற்கு சட்ட வரைஞருக்கு அறிவுறுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Edunews.lk

Post a Comment

Previous Post Next Post