மாகாண பாடசாலை அதிபர்களின் விவரங்கள், கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதமர்

 மாகாண பாடசாலை அதிபர்களின் விவரங்கள், கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் பிரதமர்




மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் பதவி உயர்வு நிபந்தனைகள் தொடர்பான விரிவான விவரங்களைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தேசிய பாடசாலைகளில் 133 பேரும், மாகாண பாடசாலைகளில் 27 பேரும் என மொத்தம் 160 பேர் பணியாற்றுகின்றனர். மேலும், அதிபர் சேவையில் தேசிய பாடசாலைகளில் 139 பேரும், மாகாண பாடசாலைகளில் 7,125 பேரும் என மொத்தம் 7,264 பணியிடங்கள் காணப்படுகின்றன. அத்துடன், மாகாண பாடசாலைகளில் இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த 2,494 பேர் பதில் அதிபர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

பாடசாலைகளின் வகைகளுக்கு ஏற்ப அதிபர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு விவரங்கள்:

  • 1AB பாடசாலைகள்: ரூ. 8,000

  • 1C பாடசாலைகள்: ரூ. 5,500

  • வகை 2 பாடசாலைகள்: ரூ. 4,500

  • வகை 3 பாடசாலைகள்: ரூ. 4,000

இதற்கு மேலதிகமாக, கஷ்ட மற்றும் அதிகஷ்ட பாடசாலைகளில் பணியாற்றும் அதிபர்களுக்குத் தனியாகக் கஷ்டக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு எரிபொருள் மற்றும் போக்குவரத்து உள்ளடங்கலாக அதிகபட்சமாக ரூ. 25,000 வரை கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிபர்களுக்கான பதவி உயர்வு நிபந்தனைகள் குறித்துத் தெரிவிக்கையில், 3ஆம் தரத்திலிருந்து 2ஆம் தரத்திற்கும், 2ஆம் தரத்திலிருந்து 1ஆம் தரத்திற்கும் பதவி உயர்வு பெறத் தலா 6 ஆண்டுகள் சேவைக்காலம் அவசியமாகும். அத்துடன், சம்பள ஏற்றங்கள், மொழி மற்றும் இணைப்புத் திறன் தேர்ச்சிகள் மற்றும் திறன் விருத்தி பயிற்சிகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், 1ஆம் தரப் பதவி உயர்வைப் பெறுவதற்கு முதுகலை கல்வி டிப்ளோமா அல்லது பட்டப்படிப்புத் தகுதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post