தரம் 6 ஆங்கிலப் பாடக் மொடியுல் சர்ச்சை: ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

 


சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடக் கையேடு (Module) தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை கல்வி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

​குறித்த ஆங்கிலக் கல்வித் தொகுதியில், மாணவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தள முகவரி ஒன்று எவ்வாறு உள்ளடக்கப்பட்டது என்பது குறித்து இவ்விசாரணையில் முக்கியமாகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

​இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, இச்சம்பவம் தொடர்பில் தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) தனியான உள்ளக விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், இக்குறைபாட்டிற்குக் காரணமானவர்களைக் கண்டறிவதற்கு விசேட குழுவொன்று விரைவில் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

​இதற்கிடையில், குறித்த பாட மொடியுலில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியமான திருத்தங்கள் குறித்துத் துறைசார் நிபுணர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அப்பரிந்துரைகளுக்கு அமைவாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கூடிய விரைவில் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

​CID விசாரணை தீவிரம்
கல்விச் செயலாளரின் உத்தியோகபூர்வ முறைப்பாட்டையடுத்து, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) இது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. தேசிய கல்வி நிறுவக அதிகாரிகள் உட்படப் பலரிடம் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

​விசாரணைகளுக்கு இடையூறின்றி ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post