அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி: அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவிப்பு!
அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில், தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான புதிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சினால் இதற்கான முன்மொழிவொன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் கீழ் சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இது குறித்து அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் விவரிக்கையில்:
"அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் 20 கிலோ அரிசியை வழங்கவுள்ளோம். இதற்கமைய தலா 10 கிலோ வீதம் சிவப்பு அரிசி மற்றும் நாட்டரிசி அடங்கிய இரண்டு பொதிகள் தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் வழங்கப்படும். இதற்காக வவுச்சர் (Voucher) ஒன்று வழங்கப்படும் என்பதுடன், அதனை சதொச அல்லது கூட்டுறவு விற்பனை நிலையங்கள் (Co-op) மூலம் அரச ஊழியர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அனைவரும் நாட்டின் விவசாயிகளின் அரிசியை உண்ண வேண்டும் அல்லவா? அரசாங்கம் கொள்வனவு செய்யும் நெல்லை அரிசியாக்கி விநியோகிப்பதற்காகவே இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது."
அரசாங்கத்தினால் உள்நாட்டில் கொள்வனவு செய்யப்படும் நெல்லை அரிசியாக மாற்றி, அதனை முறையான திட்டத்தின் கீழ் விநியோகிக்கும் நோக்கிலேயே இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
