2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று (ஜனவரி 1) வெளியிட்டுள்ளது. இதற்கமைய அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் 2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை மற்றும் பாடசாலை, போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு, பாடசாலை நேரத்தை நீடிப்பதில்லை என அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை மற்றும் போக்குவரத்து முறைமைகள் வழமைக்குத் திரும்பும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.
2026 பாடசாலை வருடம் தொடர்பான முக்கிய விடயங்கள்:
-
பாடசாலை நேரம்: தரம் 5 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு பாடசாலை நேரம் வழமை போன்று காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இருக்கும்.
-
பாடவேளைகள்: தரம் 6 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு நாளொன்றுக்கு 7 பாடவேளைகள் ஒதுக்கப்படும். ஒரு பாடவேளை 45 நிமிடங்களைக் கொண்டிருக்கும்.
-
கல்விச் சீர்திருத்தம்: 2026 ஆம் ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு புதிய கல்விச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
-
தரம் 6: புதிய சீர்திருத்தத்தின் கீதான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பமாகும்.
-
தரம் 1: மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும். கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பமாகும்.
-
-
பாடநூல்கள் மற்றும் மொடியூல்கள்: தரம் 1 இற்கான செயற்பாட்டு நூல்கள் மற்றும் தரம் 6 இற்கான கற்கை மொடியூல்கள் (Learning Modules) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும். ஏனைய வகுப்புகளுக்கான பாடநூல்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளன.
-
2025 உயர்தரப் பரீட்சை: 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் 2026 ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும்.
இது தொடர்பான விரிவான அறிவுறுத்தல்களைக் கொண்ட சுற்றுநிருபம் நாளை (ஜனவரி 2) வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

